என்றும் கிழியாதென் பாட்டு
என்றும் கிழியாதென் பாட்டு
"காக்கைக்கும் தன் குஞ்சு
பொன் குஞ்சு " என்பார்கள்.
தன் பிள்ளை தனக்கு எவ்வளவு அழகுடையவனோ அதுபோல ஒரு படைப்பாளிக்கு தன் படைப்புகள்
மீது ஒரு அலாதி பிரியம் இருக்கும்.
எந்த ஒரு படைப்பையும் தரம் பிரித்துப் பார்க்க மனம் வராது.
ஒவ்வொரு படைப்பும் ஏதோ ஒரு சூழலில் எழுதப்பட்டதாக இருக்கலாம்.
அது அது அந்தந்தக் காலத்தில் பேசு பொருளாக இருந்திருக்கும்.
அல்லது விவாதிக்கப்பட வேண்டிய கருத்தாக இருந்திருக்கும்.
அதுபோலத்தான் புலவர்களுக்கும் தாங்கள் எழுதும் பாடல்கள் மீது ஒரு கர்வம் உண்டு.
எந்தப் பாடலையும் குறைவாக எண்ண இடம் கொடுக்காது.
இந்தச் சமூகத்தில் ஒரு புலவர்க்கு கொடுக்கப்படும் இடம் என்ன ?
பொருளுக்காகப் பாடுபவர் தானே?
இன்று வறியவர் எந்த நிலையில் மதிக்கப்படுகிறாரோ அந்த நிலைக்குத்தான் புலவர்களைப் பற்றிய மக்கள் மனநிலையும் இருந்துகொண்டிருக்கிறது.
நீங்கள் மதியுங்கள் மதியாமல் போங்கள்.
என் பாடல் மீது எனக்கு கர்வம் உண்டு என்கிறார் ஒரு புலவர்.
சோழ மன்னன் அவையில் ஒருநாள் ஔவை பாடல் பாடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கே
ஒரு துணிவணிகன் வருகிறார்.
அவர் தான் நெய்து கொண்டு வந்த விலை உயர்ந்த துணிகளின் தரத்தைப் பற்றி பெருமையாகப் பேசிக்கொண்டிருக்கிறார்.
மன்னன் கவனம் ஔவையின் சொற்களை விடுத்து ஆடைகளின் ஆடம்பரம் மீதே குவிந்து கொண்டிருக்கிறது .
தான் பாடும் பாடல் மீது கவனம் செலுத்தாது ஆடைமீதே மன்னன் கவனம் செலுத்துகிறாரே....
நம் பாடலுக்கு மன்னன் தரும் மதிப்பு இவ்வளவுதானா என்று எண்ணுகிறார் ஔவை.
துணி என்னைய்யா துணி...
என் பாடல் எப்படிப்பட்டது தெரியுமா என்ற தொனியில் ஒரு பாடல் பாடுகிறார்
பாடல் உங்களுக்காக...
நூற்றுப் பத்தாயிரம் பொன்பெரினும் நூற்சீலை
நாற்றிங்கள் நாளுக்குள் நைந்துவிடும்- மாற்றலரைப்
பொன்றப் பொரு தடக்கைப் போர்வேல் அகளங்கா
என்றும் கிழியாதென் பாட்டு!
"பகைவர்களை அவர்கள் இறந்து போகும்படியாகப் போர் செய்வதிலே வல்லமை உடைய பரந்த கைகளைக் கொண்ட களங்கமில்லாத
மன்னா !கேள்.
நூற்சீலையானது நூற்றுப் பத்தாயிரம் பொன் பெறுமானம் உடையதேயானாலும், நான்கு மாத காலத்தில் அதன் மெருகு குறைந்து போகும். நைந்து போய்விடும்.
என் பாடல் ஒருநாளும் நைந்தும் போகாது ;பிய்த்தும் போகாது.
இன்று என்ன பேசுகிறதோ அதைத்தான்
என்றும் மாறாது நின்று பேசும்.
என்றென்றும் இளமை மாறாது
காலம் காலத்திற்கும் அழியாத் தன்மை கொண்டது என் பாடல்" என்கிறார்.
தன் பாடல்கள் மீது என்னவொரு கர்வம்!
ஔவையார் பாடல்கள் இன்றும் தன் அழகிற் குறையவில்லை. காலவோட்டத்தில் காணாமல் போகவில்லை . ஏற்றமுடன் மெருகு குறையாமல் இன்றும் நின்று பேசுகிறது. நாளையும் பேசும்.
ஔவையின் பாடல்கள் ஏன் இன்றுவரை நம்மோடு பேசிக்கொண்டிருக்கிறது என்பது இப்போது புரிகிறதல்லவா!
என்றும் கிழியாதென் பாட்டு.
Comments
Post a Comment