நல்லாரைக் காண்பதுவும் நன்றே

நட்பு என்றால் இணக்கமாக

நடந்து கொள்வது.

ஒருவர் கருத்தோடு ஒருவர் ஒத்துப் போவது.


இணக்கம் எப்போது யார்மாட்டு 

ஏற்படும்?


ஒத்த கருத்துடையோரிடம்

இணக்கம் ஏற்படலாம்.

ஒத்த வயதினரோடு இணக்கம்

ஏற்படலாம்.

ஒரே இடத்தில் வேலை செய்வோரிடம்

இணக்கம் ஏற்படலாம்.

ஒத்த தொழில் புரிவோரிடையே

இணக்கம் ஏற்படலாம்.

இது சூழல் காரணமாக ஏற்படும்

இணக்கம்.


இந்த இணக்கம் நல்லதா?

இந்த இணக்கத்தினால்

ஏதேனும் நன்மை பயக்குமா?


உறுதியாகச் சொல்ல முடியாது.


நன்மை  இருக்கலாம்.

அதனால்தானே இணக்கமாக

இருக்கிறோம்.

போக்குவரத்து வசதிக்காக

பேச்சுத்துணைக்காக

தொழில் முன்னேற்றத்திற்காக 

என்று ஏதோ ஒரு காரணம் கருதி

வந்த இந்த  இணக்கம்

 கடைசிவரை  தொடருமா?


உறுதியாகச் சொல்ல முடியாது.

அதனால்தான் இது நன்று என்று

முடிவு செய்யப்படவில்லை.



ஆனால்  ஔவை இவை இவை எல்லாம்

நன்று என்று ஒரு பட்டியல்

தருகிறார் . இப்போது யாரோடு

இணக்கமாக இருப்பது

நன்று என்றும் கூறுகிறார்

கேளுங்கள்.


இதோ பாடல் உங்களுக்காக..

"நல்லாரைக் காண்பதுவும் நன்றே

நலம்மிக்க

நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே

நல்லார்

குணங்கள் உரைப்பதுவும்  நன்றே

அவரோடு

இணங்கி இருப்பதுவும் நன்று "


     மூதூரை பாடல் : 8


நல்லவர்களைக் காண்பது நன்று.

நல்லவர்கள் வாய்ச்சொல் கேட்பது நன்று.

நல்லவர்களின் குணங்கள் பற்றி

மற்றவர்களிடம் பெருமைபடப்

பேசுவதும் நன்று.

அவர்களோடு இணக்கமாக 

சேர்ந்திருப்பதுவும்

நன்று.



காண்பதும் நன்று.

கேட்பதும் நன்று.

பேசுவதும் நன்று.

இணைந்திருப்பதும் நன்று.


கண்டு கேட்டு பேசி இணைந்திருத்தல்

நட்போடு மட்டுமே சாத்தியமாகும்.


அந்த நட்பு நல்லவர்களோடு மட்டுமே இருத்தல்

வேண்டும். அதுதான் நம் வாழ்க்கைக்கு

நன்று. 


அதனால்தான் வள்ளுவரும் ,


"மறவற்க மாற்றார் கேண்மை துறவற்க

துன்பத்துள் துப்பாயார் நட்பு"


சான்றோர் நட்பை ஒருபோதும் விட்டுவிடாதே.

துன்பத்தில் துணையாக இருந்தவர்களின்

நட்பையும் விட்டுவிடாதே  என்று கூறியிருக்கிறார்.

Comments