புத்தாண்டு வந்தாச்சு

புத்தாண்டு வந்தாச்சு 


புத்தாண்டு வந்தாச்சு.

புதிய டைரி வாங்கியாச்சு.


புதுப்பக்கங்களில் புதுப்புது

தீர்மானங்கள் 

எழுதி வைச்சாச்சு.



நான்கு நாட்களுக்கு

புது டைரியைப் புரட்டுவதும்

எழுதுவதும்

நான் அது செய்ய மாட்டேன் இது

செய்ய மாட்டேன் என்று 

நிமிடத்திற்கு நாலு முறை நினைவு

படுத்துவதும் என்று 

ஒரே கொண்டாட்டமாக இருக்கும்.


அப்புறம்?


அப்புறம் என்ன?

பழையபடி எல்லாம் முன்பு நடந்தது போல்தான் நடக்கும்.

புது டைரி வாங்கி எழுதுவதும் புதிய தீர்மானங்கள் எடுப்பதும் வருடாந்திர நிகழ்வுகளில் ஒன்றாகிப் போகிறது.

இது நான்.


ஆனாலும் சிலரிடமிருந்து

வேறுவிதமாக மனதின் ஒலி

நேரடியாக ஒலிபரப்பட்டு வருவதைக்

கேட்க முடிகிறது.


புதிய தீர்மானங்கள் எடுத்திருக்கிறோம்.

பார்த்துக்கொண்டே  இருங்கள்.நாளையிலிருந்து

நான்  புதிய ஆள் என்ற

பேச்சு காற்றோடு என் காதுவரை வந்தாச்சு.

என் காதுகளுக்கு மட்டுமா வந்திருக்கும்.?

அனைவர் காதுகளுக்கும்  

கண்டிப்பாக வந்திருக்கும்.


இந்தப் புத்தாண்டில் நான்

அப்படி இருப்பேன்.

இப்படி இருப்பேன் என்று ஆளுக்கொரு 

உருட்டு உருட்டிக்

கொண்டிருப்பர்.


ஆனால் என்னடி மீனாட்சி

கடந்த ஆண்டு எடுத்த புத்தாண்டு

தீர்மானம் என்னாச்சு ?


அவை...

காற்றோடு போயாச்சு

என்ற பாடல் காற்றோடு வந்து கீச்சுமூச்சுக்

காட்டிக் கொண்டிருக்கிறது.


பழையதை எல்லாம் 

நினைவுபடுத்தாதீர்கள்.

அது கடந்த வருடம். இது இந்த வருடம்.

இன்றிலிருந்து நான் புதிய ஆள்

என்று உதடுகள் சொன்னாலும்

கடந்த ஆண்டு தீர்மானங்கள்

முன்னால் வந்து நக்கலாக

சிரிக்கத்தான் செய்கின்றன.


எல்லாருடைய வாழ்விலும்

ஆண்டுதோறும் நடைபெறும் 

நிகழ்வுதான் இவை எல்லாம்

இதற்கு நானும் நீங்களும் 

விதிவிலக்கா என்ன?


எத்தனை புத்தாண்டு வந்தாலும்

மிஞ்சி மிஞ்சி போனால் 

இரண்டு வாரங்கள்தான்

தீர்மானங்களும் அவற்றை நிறைவேற்ற

வேண்டும் என்ற உறுதியும்

இருக்கும்.

அதற்குப் பிறகு தீர்மானமும் 

மறந்து போகும். உறுதியும் 

கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து

போகும். அந்த நினைப்பிலேயே

தொய்வு விழுந்துவிடும்.


இதுவரை எந்த ஆண்டில் எடுக்கப்பட்ட

தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை.

இனி எதற்கு புதிய தீர்மானங்கள்?


இந்த ஆண்டு மட்டும் புதிதாக

என்ன நிகழ்ந்து விடப் போகிறது?


கடந்த புத்தாண்டுக்கு எடுத்த தீர்மானங்கள்

அத்தனையும் சட்டசபையில் 

நிறைவேற்றப்பட்டு

நடைமுறைப்படுத்தப்படாத தீர்மானங்களாக 

ஓர் ஓரமாக வரிசைகட்டி

நின்று சிரித்துக் கொண்டிருக்கின்றன.


ஆனால் இந்த உலகம் நம்மைச் சும்மா

 இருக்க விடுகிறதா?

 இந்தப் புத்தாண்டுக்கு என்னென்ன

 தீர்மானங்கள்

எடுத்திருக்கிறீர்கள் ?

என்று கேட்டு துளைத்து எடுத்து விடுகிறது.

 

அதனால் நான் என்னென்ன தீர்மானங்கள் எடுக்கப்

போகிறேன் என்றால்....

கடந்த வருடம் எடுத்த அதே தீர்மானம்தான்.

மற்றபடி வேறெந்த மாற்றமும்

இல்லை. 


இப்படிச் சொல்லி கடந்து போக

நினைக்கையில் கடந்த ஆண்டு

என்னென்ன தீர்மானம் எடுத்தீர்கள்

என்று மடக்கிப் பிடிக்கின்றனர்.


இந்த ஆண்டு என்னென்ன தீர்மானங்கள்

எடுக்க வேண்டும் என்ற கட்டுரை 

போட்டுவிட்டீர்களா

என்ற கேள்வியையும் கேட்டு

என்னை உசுப்பேத்தி  விட்டுவிட்டனர்.


இப்போது நான்

என்ன செய்வது

ஏதாவது எழுதியாக வேண்டிய

கட்டாயம்.


பெரிதாக எந்த தீர்மானமும்

எடுக்க வேண்டாம்.

இந்த ஆண்டை தேடலின் ஆண்டாக எடுத்துக் கொள்ளுங்கள்.

தேடல் என்றதும் இதுவரை தேடித்தேடி ஓய்ந்து விட்டோம்.

இன்னும் தேடலா?

வேண்டாமடா சாமி ...ஆளை விடுங்கள் என்று ஓட வேண்டும் போல தோன்றுகிறதா?

 இறுதி மூச்சு இருக்கும்வரை தேடல்

நடைபெற்றுக்கொண்டு இருந்தால்தான் நாம் உயிருள்ளவர்களாகக் கருதப்படுவோம்.

தேடலில் வராமல் ஒரு கூட்டிற்குள்

ஒடுங்கிக் கிடந்தால் யார் நம்மைத் தேடப் போகிறார்கள்.

நமக்குள் தேடல் இருக்கும் வரைதான்

நாமும் பிறரால் தேடப்படுவோம்.

அவரவர் வயதுக்கு ஏற்ப சூழலுக்கு ஏற்ப தேடல் மாறலாம்.


தேடல் என்றால்....


தேடல் என்றால் கற்றல்..

பிற புத்தகங்களைத் தேடித் தேடிக் கற்பது.

நம்மை பற்றிய கற்றல்

சுற்றுப்புறங்களை

 சுற்றி இருக்கும் மனிதர்களை 

வாழ்வியல் நுட்பங்களை 

என்று கற்க வேண்டியவை ஏராளம் உள்ளன.


தேடலோடு இந்த ஆண்டு தொடங்கட்டும்.

அது கல்வியாக இருக்கலாம்.

புத்தக வாசிப்பாக இருக்கலாம்.

அறிவுத்தேடலாக இருக்கலாம்.

பொருள் தேடலாக இருக்கலாம்.

 


தேடல் மட்டுமே இந்த ஆண்டு

தீர்மானமாக இருக்கட்டும்.


தேடல் வளர்ச்சியைக் கொடுக்கும்.


"தேடலின் ஆண்டு"என்று

டைரியில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

இது கடைசிவரை நிகழ்ந்தால்

மகிழ்ச்சி.


தேடல் நாள்தோறும் நடைபெற 

வாழ்த்துகள்.


இந்த ஆண்டு 

உங்களின் ஆண்டாக

உங்கள் உயர்வின் ஆண்டாக

உங்கள் வளர்ச்சியின் ஆண்டாக

வளத்தின் ஆண்டாக

நன்மைதரும் ஆண்டாக 

உங்கள் தேடலுக்கான பலனைக்

கொடுக்கும் ஆண்டாக அமைய

வாழ்த்துகள்!









 


கருத்துகள்

Popular Posts