கடந்து வந்த பாதை

கடந்து வந்த பாதை 


2025 ஆம் ஆண்டின்

கடைசி மாதத்தில் நின்று கொண்டிருக்கிறோம். ஓடிய கால்கள்

சற்றே ஓய்வெடுத்துக்கொண்டு திரும்பிப் பார்க்கின்றன.

நான் எங்கே நிற்கிறேன்?

எனக்குள் எழுந்த இந்தக் கேள்வி

உங்களுக்குள்ளும் எழுந்திருக்கும்.

எல்லோருக்குள்ளும் நான் எங்கே

நிற்கிறேன் என்பதுதான் முதன்மை கேள்வியாக முன் வந்து விடை கேட்டு

நிற்கும்.


எங்கே நிற்கிறேன் என்றால்....

ஒரே வார்த்தையில் விடை கூறிவிட

முடியுமா?


என்னைக் கேட்டால்....

வேறு யாரிடம் கேட்பது?

நிற்கும் இடம்

நிற்கும் நிலை

இந்த இடத்தைப் பிடிப்பதற்காக

கடந்து வந்த பாதை

அனைத்தும் கண்முன் விரிகிறது.

காட்சிகளாக வந்து கை குலுக்கி

வாழ்த்தி நிற்கிறது.


நானா...நானா இங்கே நிற்கிறேன்.

நினைத்தாலே இனிக்கும் 

நிகழ்வுகள் நெஞ்சைத் திக்குமுக்காட 

வைக்கின்றன.

நான் எதிர்பாராத உயரத்தில்

வந்து நிற்கிறேன்.

இங்கிருந்து நாலாபக்கமும் பார்க்கிறேன்.

எவ்வளவு அழகான பாதை

உடன் பயணித்த நல்ல மனிதர்கள்

மறக்க முடியாத நல்ல நினைவுகளோடு

இங்கே வந்து நிற்கிறேன்

என்பதை நினைத்தாலே

திக்குமுக்காட வைக்கிறது.

மகிழ்ச்சி.

இப்படித்தான் அனைவர் மனநிலையும்

இருக்குமா?

மாறுபட்ட  சூழ்நிலைகள்

வேறுவேறு மனநிலையில்

இருக்கும் மனிதர்களோடு நடந்த

பயணம் 

வசதி வாய்ப்புகள்

பணம் என்று எத்தனையோ

காரணிகள் கடந்து வந்த பாதையில் குறுக்கே வந்து கோடு போட்டு 

வைத்திருந்திருக்கும்.


அதனால் சிலர் கடந்துவந்த

பாதையும் கடக்க எடுத்துக்கொண்ட

முயற்சியும்  கரடு முரடாக

இருக்க வாய்ப்பு இருந்திருக்கலாம்.


 இனிமையான நிகழ்வுகளோடு

பயணம் எல்லா நேரங்களிலும் நிகழ்ந்து விடுவதில்லை.

நாம் ஒவ்வொருவருக்கும்

ஒவ்வொரு திசையை நோக்கிய

பயணம்.

கடைசியில் வந்து நிற்கும் இடமும் ஒரே இடமாக இருக்காது.

நாள் ஒன்றாக இருந்தாலும்

வந்து நிற்கும் இடத்தில் நமக்குக் கொடுக்கப்பட்ட 

தர வரிசைப் பட்டியலில் 

நமக்கான இடம் ஏற்ற இறக்கங்கள் கொண்டதாக இருக்கும்.


உண்மை.

பயணித்த பாதையை ஒருமுறை

திரும்பிப் பார்ப்போம்.


என்ன இது? 

நான் பயணித்த பாதை 

எங்கே? கண்ணுக்கு எட்டிய தூரம்வரை

எதையோ தேடுகிறேன்.

ஒன்றும் சரியாகத் தெரியவில்லை.

சமவெளியில் நேராக ஓடி வந்திருந்தால்

கொஞ்ச தூரமாவது தெரிந்திருக்கும்.

அப்படியானால் நான் சமவெளி வழியாக வரவில்லையா?


எத்தனை இடறலான பாதைகள்?


எத்தனை இடங்களில் வளைந்து

நெளிந்து ,முட்டி மோதி , வீழ்ந்து எழுந்து ஓடும் காட்டாற்று  நீராக ஓட்டம்.

இடையிடையே கற்பாறை நடுவில்

நின்று  கடக்க விடாமல் 

கால்கள் தடுமாற்றம்.

தடுமாற்றத்தைத் தவிர்க்க

தடம் மாற்றிப்  போனதால்

அங்கங்கே நெருஞ்சி முட்கள் நின்று

அச்சுறுத்த ...

நெருஞ்சி முள் காலில்  குத்தி

விடாதபடி பார்த்துக் கால் வைக்கிறேன்

என்று சப்பாத்திக் கள்ளி மீது

கால் வைக்க....

இப்படி கலங்க வைத்த

நிகழ்வுகள் எத்தனை! எத்தனை!


கலக்கத்தோடுதான் இந்த இடத்தில் வந்து 

நிற்கிறேன் .

இப்படி சிலரின் மனநிலை.

இவ்வளவு பெரிய போராட்டமா?


எப்போதும் கலக்கமா?

இல்லையே ...அப்படியொரு கலக்கத்தில்

நின்றிருந்தால் இங்கே வந்து நிற்க

முடியுமா?

கலக்கமும் தடைகளும் வந்தன.

ஆனாலும்

எதிர்பாராத மகிழ்ச்சியான தருணங்கள் 

வந்து கொண்டாட வைத்து

என்னை பின் தங்கி விடாமல்

முன்னேற வைத்தது.

குதுகலமாக தோளில் 

கை போட்டு கூடவே 

அழைத்து வந்து இங்கே வந்து

நிறுத்தியிருக்கிறது.


முதலாவது என்று சொல்லாவிட்டாலும்

முண்டியடித்து முன்னுக்கு வந்துவிட்டேன்

இப்படி நிம்மதியாக நின்று கொண்டிருப்போர் சிலர்.

என்னோடு இந்த ஆண்டைத் தொடங்கியவர்கள் எத்தனைபேர்

இப்போது நான் வந்து நிற்கும்

இந்த இடத்திற்கு வந்து சேர்த்திருக்கிறார்கள்.?


இடையில் எத்தனைபேர் காணாமல் போனார்கள்?

அன்பானவர்களோடு கடைசிவரை கை கோத்து நடக்கும் வாய்ப்பைத் தவறவிட்டு

கலங்கிய  உள்ளத்தோடுதான்

இந்த இடத்தில்  வந்து

நின்று கொண்டிருக்கிறேன் 

என்று கண்ணீரோடு 

நிற்போர் சிலர்.


காய்ந்த மரத்தின் மீது கல்லடி படுவது போல் எத்தனை கல்லடிகள் சொல்லடிகள்.

காயங்கள் என்று நாட்களைக் கடத்த முடியாமல் உருண்டு

தவழ்ந்து முழங்காலை ஊன்றி

முக்கிமுனங்கியபடி

இந்த இடத்தில் வந்து நிற்க

நான் பட்டபாடு சொல்லி மாளாது.

ஆனாலும் பட்ட எந்த வேதனைகளும்

வீண் போகவில்லை.

நல்ல இடத்தில் வந்து நின்று கொண்டிருக்கிறேன் என்ற

பெருமிதம் எனக்கு உண்டு 

என்ற பெருமிதத்தோடு சிலர்.


எதிர்பாராத மகிழ்ச்சி.

நினைத்துப் பார்க்க முடியாத வளர்ச்சி.

என்ன சொல்வதென்று தெரியவில்லை.

இப்படித் திக்குமுக்காடியிருப்போர் சிலர்.


 கடந்த நாட்கள் வெறும் வெற்றியை மட்டும் 

தந்திருக்க முடியாது.

வெற்றியைத் தோளில் சுமந்து

தோல்வியில் வீழ்ந்து

இன்பத்தில் திளைத்து

துன்பத்தில் துவண்டு 

இப்படி மாறுபட்ட 

சூழலைக் கடந்துதான்

அனைவரும் இந்த இடத்தில்

வந்து நின்றிருப்போம்.


எப்படி வந்திருந்தாலும்

இந்த இடத்தில் நிற்பதற்கான 

வாய்ப்பை வழங்கிய

இறைவனுக்கு

இப்போது நன்றி சொல்லியே

ஆக வேண்டும்.


நன்றி சொல்ல வேண்டிய இன்னும் எத்தனையோ பேர் நம் வாழ்க்கைப் பயணத்தில் நம்மோடு இருந்திருக்கலாம்.

அவர்கள் இல்லாமல் என்னால் இந்த

இடத்தை அடைந்திருக்க முடியாது

என்று நம்பும் மனிதர்களுக்கு

கண்டிப்பாக நன்றி சொல்லிவிடுங்கள்.

எங்கே நிற்கிறேன்?

எப்படிப்பட்ட மனநிலையோடு

நின்று கொண்டிருக்கிறேன்

என்பதற்கு....


மகிழ்ச்சியோடு

கலக்கத்தோடு 

நிம்மதியோடு

தவிப்போடு

கண்ணீரோடு

ஆறுதலோடு

இப்படி எதுவும் பதிலாக

இருக்கலாம்.

அதனால் நமக்கு வழங்கப்பட்ட

தர வரிசைப் பட்டியலில்

நமக்கான இடம்

உயர்வு தாழ்வு 

ஏற்ற இறக்கம் கொண்டதாக

 இருக்கலாம்.


ஆனால்  கடந்த ஆண்டைவிட

இந்த ஆண்டு எங்கே நிற்கிறேன்

என்று கேட்டுப் பாருங்கள்.

ஒப்பீட்டளவில் உயர்ந்திருக்கிறோமா?

தாழ்ந்திருக்கிறோமா?


உயர்ந்திருந்தால் மகிழ்ச்சி.

தாழ்ந்திருந்தால் முயற்சி தேவை

என்ற மனநிலையோடு அடுத்த ஆண்டை

நோக்கிப் பயணிப்போம்.


நேற்றைய பயணத்தில் கற்ற பாடங்களை

வழித்துணைக்கு எடுத்துக்கொண்டு 

நாளைய பயணம் நல்வழியில் அமைய

வாழ்த்துகள்.



















Comments