எழுது அல்லது எழுதப்படு

எழுது அல்லது எழுதப்படு.




"ஒன்று, படிக்கத் தகுந்த ஒன்றை எழுதுங்கள்; அல்லது, எழுதத் தகுந்த ஒன்றைச் செய்யுங்கள்.” - 

என்பார் பெஞ்சமின் பிராங்க்ளின்


பிராங்க்ளின் வெறும் விஞ்ஞானி அல்ல. அவரே ஒரு வாழும் புத்தகம். அச்சகத் தொழிலாளியாக தொடங்கி, அமெரிக்காவையே எழுதியவர். 

எழுத வைத்தவர்.அவர் சொல்வதில் அர்த்தம் இருந்தது.

உலகில் இரண்டு வகை மனிதர்கள் தான்.

ஒன்று படிக்கத் தகுந்ததை எழுதுபவர்கள்.

மற்றொன்று எழுதத் தகுந்ததைச் செய்பவர்கள். 

நாம் விட்டுச் செல்லும் சொத்துகள் ஒரு தலைமுறைக்குப் பயன்பட வேண்டும். அதுபோல நாம் விட்டுச் செல்லும் நல்ல சிந்தனைகளும் செயல்களும் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டுவதாக இருக்க வேண்டும்.

சிலர் எழுத்துக்கள் சிந்திக்க வைத்து

நல்வழிபடுத்தும்.

சிலர் வாழ்க்கை வரலாறாக இருந்து என்றும் நமக்குப் பாடமாக இருக்கும். அவர்களுடைய செயல்கள் வரலாற்றுப் பக்கங்களில் பதிவு செய்யப்படும்.

1. படிக்கத் தகுந்ததை எழுதுங்கள்:

முதலாவதாக படிக்கத் தகுந்ததை எழுதுங்கள் .

உங்கள் எழுத்து ஒருவனை உயிர்ப்பிக்கட்டும்.

 "Writing is the painting of the voice" -

 Voltaire

எல்லோரும் எழுதுகிறார்கள். 

அதனால் நானும் எழுதுகிறேன் என்பதல்ல எழுத்து. நமது எழுத்துப் படிக்கத் தகுந்ததாக இருக்க வேண்டும்.

நமது எழுத்தால் பிறர் ஈர்க்கப்பட வேண்டும்.பொழுதுபோக்காக இருந்தாலும் வாசிப்பவர்களுக்கு மனமகிழ்ச்சி கொடுப்பதாக இருக்க வேண்டும். மன அழுத்தத்திலிருந்து விடுவிக்கும் நல்மருந்தாக இருக்க வேண்டும்.

படிக்கத் தகுந்தது என்றால் என்ன?

அண்ணல் அம்பேத்கர் எழுதினார். அவர் எழுதியது வெறும் புத்தகம் அல்ல. கோடிக்கணக்கான மக்களின் விடுதலைப் பத்திரம். ஒரு மனிதனின் எழுத்து ஒரு சமூகத்தையே தட்டி எழுப்பியது.

சிந்திக்க வைத்தது. தலைமுறைகள் தாண்டியும் இன்றும் பலர் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

திருவள்ளுவர் 1330 குறள் எழுதினார். ஏழு சொற்களில் நம்மோடு பேசினார். இரண்டாயிரம்  ஆண்டுகள் கடந்தும் நம்மோடு பேசிக்கொண்டிருக்கிறார்.

இத்தனை ஆண்டுகள் கழித்தும் நாம் அவரை தேடிக்கொண்டிருக்கிறோம்.ஏன்?திருவள்ளுவர் படிக்கத் தகுந்ததை எழுதினார்.

ஆன் ஃபிராங்க்  என்ற  பதிமூன்று வயது சிறுமி நாஜிக்களிடம் ஒளிந்திருந்தபோது ஒரு டைரி எழுதினாள். அவள் இறந்துவிட்டாள், ஆனால் அவள் டைரி இன்றும் பலகோடி பேரை அழ வைக்கிறது, போரின் அவலங்களை கண்முன்னர் கொண்டு வந்து நிறுத்தி சிந்திக்க வைக்கிறது.இவைதான் படிக்கத் தகுந்த எழுத்துக்கள்.

இத்தகைய சாகாவரம் பெற்றவை தான் எழுதத் தகுந்த எழுத்துக்கள்.

வெறும் பொழுது போக்காக எழுதுகிறேன் என்பதைத் தாண்டி சமூகத்தைப் பழுது பார்க்கும் செயலை சத்தமில்லாமல் செய்து கொண்டிருக்கும் பணியையும் எழுத்தால் மட்டுமே செய்ய முடியும்.

2. எழுதத் தகுந்ததைச் செய்யுங்கள்:

இரண்டாவதாக எழுத முடியவில்லையா விட்டுவிடுங்கள்.எழுதத் தகுந்ததை செய்யுங்கள் . உங்கள் வாழ்க்கையே ஒரு பாடமாகட்டும்.

எழுத்து அறிவை விதைக்கிறது. செயல் அந்த அறிவை அறுவடை செய்கிறது!

திருவள்ளுவர்,

“சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்.”

என்று கூறுகிறார். 

பிறருக்கு அறிவுரை கூறுவது எளிது.ஆனால் கூறியபடி வாழ்வதும் செயல்படுவதும் கடினம். எனவே, நம் சொற்களைவிட நம் செயல்களே நம்முடைய உண்மையான அடையாளமாக இருக்கட்டும்.

மகாகவி பாரதியாரின் கவிதைகள் விடுதலை உணர்வையும் சமத்துவச் சிந்தனையையும் மக்களின் உள்ளங்களில் விதைத்தன. அவர் வாழ்ந்த காலம் குறுகியது. ஆனால் அவரது எழுத்துகள் 

இன்றுவரை நம்மோடு வாழ்ந்துகொண்டிருக்கிறது.

இதுதான் நல்ல எழுத்தின் வலிமை.ஒரு மனிதர் நேரில் இல்லாவிட்டாலும் அவர் எழுதிய கருத்துகள் ஆயிரக்கணக்கான மனிதர்களின் மனங்களில் வாழ முடியும்.

உடல் மறைந்தாலும், உயர்ந்த சிந்தனைகள் மறைவதில்லை. எழுத்தில் பதிந்த உண்மைகள் தலைமுறைகளைக் கடந்து பயணிக்கின்றன.

"நீ எதை நம்புகிறாய் என்று சொல்லாதே, நீ என்ன செய்கிறாய் என்பதைக் காட்டு." - என்பார் சோஃபோக்கிள்ஸ்

ஏ.பி.ஜே அப்துல் கலாம் அதிக புத்தகம் எழுதவில்லை. ஆனால் அவர் வாழ்க்கையை நாம் இன்று புத்தகமாக படித்துக்கொண்டிருக்கிறோம்.ராமேஸ்வரத்தில் பேப்பர் போட்ட சிறுவன், ஜனாதிபதி ஆன கதை  இதை விட எழுதத் தகுந்தது வேறு என்ன இருக்கப்போகிறது.?

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ஒரே ஒரு உரை. "I have a dream". அந்த ஒரு செயலுக்காக, ஒரு உரைக்காக, அவர் வரலாறு ஆனார். அவர் பேசவில்லை, செய்தார். நடந்தார், சிறை சென்றார், அடி வாங்கினார். சமுதாயத்தை மாற்ற நினைத்தார். வரலாறு ஆனார்.

எடிசன் ஆயிரம் முறை தோற்றார் . யார் யாரோ கேட்டார்கள். " இன்னும் ஏன் முயற்சிக்கிறாய்?"  என்று  அவர் தன்னம்பிக்கையை உடைக்கப் பார்த்தார்கள்., "நான் தோற்கவில்லை.

ஆயிரம் வழிகள் வேலை செய்யாது என்று கண்டுபிடித்தேன்"என்றார்.. மறுபடியும்  செயலில் இறங்கினார்.வெற்றிபெற்றார். அந்த  பேச்சு அனைவரையும் சிந்திக்க வைத்தது. வீழ்ந்தவர்களுக்குத் தன்னம்பிக்கை கொடுத்தது.தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக இன்று வரை எழுதப்பட்டு வரும் வரலாறு அவருடையதாக்கிக் கொண்டார்.

தமிழ்நாட்டில் *மாரியப்பன் தங்கவேலு* - விபத்தில் கால் போனது. எல்லோரும் முடிந்தது என்றார்கள். அவன் தங்கம் வென்றான் பாராஒலிம்பிக்ஸில். அவன் வாழ்க்கையே இன்று ஒரு கட்டுரையாகிறது

வெறுமனே வாழ்ந்து, வெறுமனே சாவது ஒரு வாழ்க்கை அல்ல. 

எழுதுங்கள்.உங்கள் வலியை,பெற்ற அனுபவத்தை உங்கள் நேர்மையை எழுதுங்கள் .அது யாருக்காவது வெளிச்சமாக இருக்கட்டும்.

"Either you run the day, or the day runs you." - Jim Rohn

நடுவில் நிற்காதே நடுவில் நிற்பவர்களை வரலாறு ஒருபோதும் நினைவில் வைப்பதில்லை.

நினைவில் நிற்கும் எழுத்தை எழுதுங்கள்; நன்றியுடன் நினைவுகூரப்படும் செயலைச் செய்யுங்கள்.

ஏனெனில், வாழ்க்கையின் உண்மையான வெற்றி நாம் எதைப் பெற்றோம் என்பதில் இல்லை; நாம் வாழ்ந்ததன் மூலம் உலகிற்கு எதை வழங்கினோம் என்பதில்தான் இருக்கிறது!

நாம் மறைந்த பின்னரும் நம் எழுத்துகள் பேசட்டும்.நம் செயல்கள் நமக்காகச் சாட்சி சொல்லட்டும்.


கருத்துகள்

Popular Posts