காளமேகமும் கண்ணதாசனும்
காளமேகமும் கண்ணதாசனும்
காளமேகம் என்றாலே கார் மேகமென
கவிமழை கொட்டும். அதில் தேன்சுவை
கொட்டும். சொற்கள் முட்டி மோதும்.
எழுத்தும் பொருள் பேசும்.
எண்ணாத பொருள் எல்லாம் கூறி
நம் எண்ணத்தைத் திசை திருப்பும்.
என்ன சொன்னாலும் எப்படி சொன்னாலும்
தாதூ என்று ஊதி தள்ளிவிடுவார் காளமேகம்.
அவருடைய கவிதைகளைப் படிக்கும்போது
இது என்ன உளறலா...ஊமைகளின்
உதடு பிதுங்கலா...வெற்று எழுத்துக்களின்
அணி வகுத்தலா... என மயங்க வைக்கும்.
பொருள் விளங்கிய பின்னர்
மிரள வைக்கும்.வியப்பில் விழி
விரிய வைக்கும்.
"எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே"
என்பார் தொல்காப்பியர்.
எழுத்தை எந்தப் பக்கம் திருப்பி போட்டும்
பொருள் தரும் சொல்லை உருவாக்கித் தரும்
சித்து தெரிந்தவர் காளமேகம்.
ஒருநாள் காளமேகத்திடம் அவருடைய
நண்பர் ஒருவர் வந்து
"தகர வருக்க எழுத்துக்களை வைத்து
ஒரு பாடல் பாட
முடியுமா?" என்று கேட்டுவிட்டார்.
"ஏன் முடியாது?
இதோ இப்போதே பாடுகிறேன்.
கேளும் "என்றபடி பாடலைப் பாடினார்.
தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது
தூதிதூ தொத்தித்த தூததே தாதொத்த
துத்தித் தாதே துதித்துத்தே தொத்தீது
தித்தித்த தோத் திதி"
காளமேகம்
கேட்டவர் தலை சுற்றி அப்படியே அமர்ந்து
விட்டார்.
"ஏன்....அமர்ந்து விட்டீர்.?
நீங்கள் கேட்ட தகர வரிசை பாடல்தானே பாடி
இருக்கிறேன். "
"பாட்டா இது....நான் பொருள்படும்படி
பாடல் பாட முடியுமா என்று கேட்டேன்...நீர்
என்ன தாத்தீ....என்று தகிடத்தோம்
ஆடியிருக்கிறீர்.
பாடலை வாசிக்கும் போதே வாய் குளறுகிறது.
தலை சுற்றுகிறது.இதில் என்ன பொருள்
இருந்துவிடப் போகிறது ?"
"வாசிக்கும் போது அப்படித்தான் இருக்கும்.
வாசிக்க...வாசிக்க...பாடலின் இனிமை புரியும்.
மறுபடியும் மறுபடியும் வாசிக்கத் தூண்டும்"
காதலுக்கு தூது போகும் வழக்கம்
அன்றும் உண்டு.இன்றும் உண்டு.
அந்தக் காலத்தில் புறாவைத்
தூது அனுப்புவார்கள்.
கிளியைத் தூது அனுப்புவார்கள்.
ஏன் நாரையைக் கூட தூது
சொல்லிவர அனுப்பியதை நாம்
படிக்கவில்லையா?
பாங்கியரைத் தூது அனுப்பும்
வழக்கம் உண்டு என்பதை சங்க
இலக்கியங்களில் படித்திருப்போம்.
இவை எல்லாவற்றையும் தூது
அனுப்பியும் காதல் கைகூடாமல்
போய்விட்டால் ...என்ன நடக்கும்
இதுதான் பாடல்.
" பொருள் வேண்டும் அவ்வளவுதானே ...
கேளும்." என்றபடி பொருள் கூறத்
தொடங்கினார் காளமேகம்.
தாதி எனப்படும் பணிப்பெண்ணைத்
தூதாக அனுப்பினால் அவள் ஏடாகூடாவாகப்
பேசிவிடுவாள். ஆதலால் தாதி தூது
தீயதாகவே முடியும்.
இப்போது தாதி தூது தீது என்பதற்குப்
பொருள் புரிந்ததா?
புரிந்தது ....புரிந்தது என்பதுபோல
தலையை ஆட்டினார்
நண்பர்.
தத்தைத் தூது ஓதாது.....
தத்தை எனப்படும் கிளிக்குத் தோதுவாகப்
பேசத் தெரியாது. சொன்னதைச் சொல்லுமே தவிர
சூழ்நிலைக்கு ஏற்ப பேசத் தெரியாத கிளி
தூதுக்குத் தோதுபடாது.
"ம்...அப்புறம்"
தூதி தூது ஒத்தித்த தூததே ....
தூதி எனப்படும் தோழி உடனடியாக தூது
போகமாட்டாள். இன்று போகிறேன் .
நாளை போகிறேன் என்று
ஒத்திப் போட்டுக் கொண்டு
நாட்களைக் கடத்துவாள்.
ஆகையால் தோழியின் தூதும் ஒத்து வராது.
"அப்படியானால் யாரைத்தான் தூது
அனுப்புவது?"
கேளும்...
தேதுதித்த தொத்து ..
தெய்வத்தை வழிபட்டுக் காத்திருந்தாலும்
நாட்கள் கடந்து கொண்டே போகுமே
தவிர விரைவில் தீர்வு கிடைக்காது.
ஆதலால் இதுவும் தீதாகவே முடியும்.
"பிறகு யாரைத்தான் நம்புவது?..."
"பொறுமையாகக் கேளும்..."
தாதொத்த துத்தி தத்தாதே...
பூந்தாதை ஒத்த பசலை நோய்
உடல் முழுவதும் படராதிருக்க
வேண்டுமானால்...
"என்ன செய்ய வேண்டும்?"
தித்தித்தது ஓதி துதி ....
"எனக்கு தித்திப்பான காதலன் பெயரை
மட்டுமே நாளும் சொல்லிக் கொண்டிருக்கப்
போகிறேன் "என்று ஒரு தலைவி
கூறுகிறாள்.
இதுதான் பொருள் என்கிறார் காளமேகம்.
"வரதா....உன் வாக்கே அருள்வாக்கு"
என்றபடி கேட்டவர் அங்கிருந்து
நகர்ந்துவிட்டார்.
நம்மால் இன்னும் அங்கிருந்து நகர
முடியவில்லை.
ஏன்...கண்ணதாசனாலும் இப்பாடலை விட்டு
எளிதாக கடந்து போக முடியவில்லை.
ஆதலால் வானம்பாடி என்ற
திரைப்படத்தில் இந்தப் பாடலை
ஒரு பெண்ணைப் பாட வைத்துவிட்டார்.
கேள்வி கேட்டுப் பதில் சொல்வது
போன்று எழுதப்பட்ட பாடல்.
முதலாவது ஆண் கேள்வி கேட்கிறான்..
பாடல் இதோ :
ஆண்கவியை வெல்ல வந்த
பெண்கவியே வருக- நீ
அறிந்தவற்றை மறைந்து நின்று
சபையினிலே தருக
பெண்கவியை வெல்ல வந்த
பெருமகனே வருக - உங்கள்
பெட்டகத்தைத் திறந்து வைத்துப்
பொருளை அள்ளித் தருக...
இலை இல்லாமல் பூத்த மலர்
என்ன மலரம்மா ?
அது
இளமை பொங்க வீற்றிருக்கும்
கன்னி மலரைய்யா
வலையில்லாமல் மீனைப் பிடிக்கும்
தேசம் என்ன தேசம் ?
அது
வாலிபரின் கண்ணில் உள்ள
காதல் என்னும் தேசம்....
ஆண்கவியை வெல்ல வந்த
பெண்கவியே வருக....
..... ....... .....
இப்படியாக ஆண் கேள்வி கேட்க
தொடர்ந்த பாடல் பெண் கேள்வி
கேட்க ஆண் பதில் சொல்ல வேண்டும்
என்பது போல மாற்றி எழுதப்படுகிறது.
பெண் பாடுகிறாள்.
தாதி தூது தீது தத்தும் தத்தை
சொல்லாது...
தூதி துது ஒத்தித்தது
தூது செல்லாது...
தேது தித்தித் தொத்து
தீது தெய்வம் வராது - இங்கு
துத்தி தத்தும் தத்தை வாழ
தித்தித்ததோது....
என்று பாடி முடிக்கிறாள்.
"கேள்வியா இது?
என்ன உளர்றாங்க?"
பொருள் கூறச் சொல்லுங்க
என்கிறான் ஆண்.
.......
அதற்குப் பொருள் கூறிய பெண்,
"அடிமை தூது பயன்படாது
கிளிகள் பேசாது
அன்புத் தோழி தூது சென்றால்
விரைவில் செல்லாது
தெய்வத்தையே தொழுது நின்றால்
பயனிருக்காது - இளம்
தேமல் கொண்ட கன்னி வாழ
இனியது கூறு?"
என்று பாடி முடிப்பது போல
பாடல் எழுதி இருந்தார் கண்ணதாசன்.
திரைப்படத்திலும் தூது போக
காளமேகம் பாடலைக் கொண்டு
வந்துவிட்டார் கண்ணதாசன்.
காளமேகத்தின் கவிமழையில்
கவியரசர் கண்ணதாசன் முற்றும்
நனைந்ததால்தான் காளமேகத்தைத்
தூதாக அழைத்து வந்திருப்பாரோ!
👌👌👌🪴🪴🌻🌻❣️❣️❣️🙏
ReplyDeleteSupee