தற்குறிப்பேற்ற அணி

          தற்குறிப்பேற்ற அணி

செய்யுளுக்கு அழகு சேர்ப்பது அணி.

செய்யுளில்  சொல்லழகு, பொருளழகு
இரண்டும் கூடி இருக்கும்போதுதான்
படிப்போருக்கு செய்யுளைப் 
படிக்க வேண்டும் என்ற
வேட்கை ஏற்படும்.

புலவர் தன் உள்ளக் குறிப்பைச் செய்யுளில்
வெளிப்படுத்துவதற்காக அணி 
இலக்கணத்தைக் கையிலெடுக்கும்
இடங்கள் உண்டு.
 
இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வின்மீது
கவிஞர் தனது குறிப்பை ஏற்றிச் சொல்வது
தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.
.
"பெயர்பொருள் அல்பொருள் என இருபொருளினும்
இயல்பின் விளைதிறன் அன்றி அயல் ஒன்று
தான் குறித்து ஏற்றுதல் தற்குறிப் பேற்றம்"
                                         -தண்டியலங்காரம்.

அசையும் பொருட்கள் அசையாப்
பொருட்கள் இவற்றின் இயல்பான
செயலின் மீது புலவர் தன் குறிப்பை ஏற்றிப்
பாடுவது தற்குறிப்பேற்ற அணி என்கிறது
தண்டியலங்காரம்.

தற்குறிப்பேற்ற அணி என்றதுமே 
நம் நினைவில் பள்ளிப் பருவத்தில்
படித்த சிலப்பதிகார காட்சி
கண்முன் வந்து வந்து நிற்கும்.

கோவலனும் கண்ணகியும் மதுரை 
மாநகருக்குச் சென்று வணிகம் 
செய்து  பொருளீட்ட வேண்டும்
என்ற நோக்கத்தோடு செல்கின்றனர்.
அப்போது அங்குள்ள 
தோரண வாயிலில் கட்டப்பட்ட கொடி 
இயல்பாக காற்றில் ஆடுகிறது.

இந்த நகருக்குள் நுழைந்தால் நீங்கள்
துன்பப்படப் போகிறீர்கள்.
கோவலன் கொல்லப்படப் போகிறான்.
வராதீர்கள்....வராதீர்கள் ....
என்று சொல்வதுபோல அந்தக் கொடிகள்
அசைவதாக இளங்கோவடிகள் 
தன் குறிப்பை அந்தக் கொடியின் மீது
ஏற்றிக் கூறுகிறார்.

"கருநெடுங் குவளையும் ஆம்பலும் கமலமும்
தையலும் கணவனும் தனித்துறு துயரம்
ஐய மின்றி அறிந்தன போலப்
பண்ணீர் வண்டு பரிந்தினைந் தேங்கிக்
கண்ணீர் கொண்டு காலுற நடுங்கப்
போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரெலென் பனபோல் மறித்துக்கை காட்ட"
                              - சிலப்பதிகாரம்
                              - 
பொருள் :

கண்ணகியும் கோவலனும் பிரிந்து
நெடுந் துன்பம் அடையப் போகின்றனர்
என்பதை கரிய நெடிய குவளை, அல்லி மற்றும் 
தாமரை மலர்கள் ஐயமின்றி 
அறிந்து வைத்திருந்ததால்...
ரீங்காரமிடும் வண்டுகளின்
ஒலியோடு தாமும் ஏக்கம் கொண்டு  ,
கால் கடுக்க நின்று, நடுநடுங்கி ,
கண்ணீர் விட்டு அழுதனவாம்.

அது மட்டுமல்லாது போரில் தேய்ந்தெடுத்த
 மதிலின் மீது கட்டப்பட்டு பறந்து கொண்டிருக்கும்
நெடிய கொடிகள் "நீவீர் மதுரைக்கு வர வேண்டாம்.
திரும்பிச் சென்று விடுக என்பது போன்று
மறுத்துக் கையசைத்துக் கொண்டிருந்தன"
என்கிறார் இளங்கோவடிகள்.

இயல்பாக காற்றில் கொடி அசைகிறது.
அதன்மீது இளங்கோவடிகள் 
தன் குறிப்பை ஏற்றிச்
சொல்லியிருப்பதால் இது தற்குறிப்பேற்ற
அணியாயிற்று.

 சிலப்பதிகாரத்தில் வராதீர்! வராதீர்!
 என்று அசைந்த கொடிகள் கம்பராமயணத்தில்
 வருக!வருக! என்று அழைக்கிறது என்று
 கம்பர் தன் குறிப்பைக் கொடியின்மேல்
 வைத்துப் பாடியுள்ளார்.

மையறு மலரின் நீங்கி
   யான் செய்மா தவத்தின் வந்து
செய்யவள் இருந்தாள் என்று
     செழு மணிக் கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்தக்
     கடிநகர் கமலச் செங்கண்
ஐயனை ஒல்லை வா என்று
     அழைப்பது போன்றது அம்மா ! 
     
             - கம்பராமாயணம், பாலகாண்டம்.

"நான் செய்த பெருந்தவத்தின் காரணமாகவே 
குற்றமற்ற அழகிய தாமரை மலரில் இருக்கும்
திருமகள் அதிலிருந்து நீங்கி மிதிலை மாநகரில்
சீதையாகப் பிறந்துள்ளாள்.
அழகிய தாமரை போன்ற கண்களை 
உடைய ராமனே! நீ விரைந்து
வந்து சீதையை மணம் முடித்துச் செல்க!
என்பது போன்று அழகிய கொடிகள் 
தனது கைகளை அசைத்து வரவேற்று 
நிற்கின்றனவாம்."

இது கவிச்சக்கரவர்த்தி கம்பர் கொடியின்மீது
தனது குறிப்பை வெளிப்படுத்திப் பாடிய பாடல்.

கொடி அசைவதை இருவரும் தங்கள்
கதைக் களத்திற்கு ஏற்ப இருவேறு
கோணங்களில் நின்று சித்திரித்து 
கவி படைத்திருக்கின்றனர்.

புலவர்களின் தனித்தன்மையும்
கற்பனைத்திறனும்  சூழலுக்கு ஏற்ப சுவைபட
காட்சிப்படுத்தும் பாங்கும் இப்பாடல்கள்
மூலம்  வெளிப்பட்டுள்ளன.

நளவெண்பாவில் ஒரு அருமையான காட்சி.
நளன் தமயந்தியை நடு இரவில் விட்டுவிட்டு 
சென்று விடுகிறான்.
சென்றவன்  கடலோரமாக 
கால்போன போக்கில்
நடக்கிறான். நளன் வருவதை
நண்டுகள் கண்டு கொண்டன.

நளனைக் கண்ட நண்டுகள் ஓடிப் போய்
கடலில் மறைந்து கொள்கின்றன. நண்டுகளின்
இந்தச்செயல் எப்படி இருக்கிறது என்றால்...
மனைவியைக் காரிருளில் காட்டில்
தவிக்கவிட்டுவிட்டு வந்த பாதகனைப்
பார்க்கக் கூடாது என்று ஓடி மறைவதுபோல்
இருந்ததாம்.

"காரிருளில் கானகத்தே
காதலியை   கைவிட்ட
பாதகனைப் பார்க்கப்
படாதேன்றோ -நாதம்
அழிக்கின்ற ஆழிவாய்
ஆங்கலவன் ஓடி
ஒழிக்கின்ற தென்னோ உரை"

 என்கிறார் புகழேந்தி.
 இது  நளவெண்பாவில் புகழேந்தி கூறிய
 தற்குறிப்பேற்ற அணி.

இலக்கியங்களில் மட்டுமல்லாது
திரைப்படப் பாடல்களிலும் தற்குறிப்பேற்ற அணி
பயன்படுத்தப் படுவதைக் காணலாம்.

கண்ணதாசன் தன் திரைப்படப் பாடல்களில்
தற்குறிப்பேற்ற அணியைத் திறம்படப்
பயன்படுத்தியிருப்பார்.

இதோ கண்ணதாசனின் பாடல்:

மூடித்திறந்த இமையிரண்டும்
பார் பார் என்றன
முந்தானை காற்றில் ஆடி
வா வா என்றது...
ஆடிக்கிடந்த கால் இரண்டும்
நில் நில் என்றன
ஆசை மட்டும் வாய்திறந்து
சொல் சொல் என்றது...

மூடித் திறந்த இமை இரண்டும்
பார் பார் என்றன
வா வா என்றது.....

அன்னக் கொடி நடை முன்னும் 
பின்னும் ஐயோ ஐயோ என்றது
வண்ணக்கொடியிடை கண்ணில்
விழுந்து மெய்யோ பொய்யோ என்றது.....

இது கண்ணதாசனின் தற்குறிப்பேற்ற அணி.


பொன்மாலை பொழுது
இது ஒரு பொன்மாலை பொழுது
வானமகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்


இது ஒரு பொன்மாலை பொழுது
......   ........

வானம் எனக்கொரு போதிமரம்
நாளும் எனக்கது சேதி தரும்
ஒருநாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் தேதி வரும்
கேள்விகளால் வேள்விகளை நான்செய்தேன்

இது ஒரு பொன்மாலைப் பொழுது....

இது கவிப் பேரரசு வைரமுத்து அவர்களின்
தற்குறிப்பேற்ற அணி.


Comments