தாமரை இலை நீர் போல

தாமரை இலைமேல் நீர் போல
தாமரை என்றதுமே முகம்
அன்றலர் தாமரை மலர் போல
மலர்ந்து விடும்.

தாமரை இலை மேல் நீர் போல
என்றால் ஒட்டியும் ஒட்டாமலும்
உருண்டோடும் நீர்த்திவலைகள்
கண்முன் காட்சிக்கு வந்து போகும்.

தாமரைக்கு அப்படி ஓர் ஈர்ப்பு 
சக்தி உண்டு.தாமரை மலர்ந்திருக்கும்
தடாகங்கள் அருகில் செல்லும்போது
கண்கள் அக்காட்சிகளைவிட்டு 
அகல மறுக்கும்.
அரைமணி நேரம் தடாகத்தின் அருகில்
அமர்ந்துவிட்டுச் செல்லலாமா என்ற 
வாஞ்சை எழும்.

பூக்களும் அதன் மேல் மொய்த்திடும்
வண்டும் மட்டுமே நம்மை கவர்ந்து
விடாது.
தடாகத்தில் மிதந்து கிடக்கும் 
தாமரை இலைகளும்
என்னை கொஞ்சம் கவனி என்று
நம் கவனத்தை ஈர்க்கும். 

தாமரை இலையால் எப்படி தண்ணீருக்கு
மேலேயே மிதக்க முடிகிறது என
ஒரு சிந்தனையை நமக்குள் விதைத்துவிட்டு
மல்லாக்காக கிடந்து மயங்க வைக்கும்.

நீர் மட்டத்திற்கு மேல் தண்டின்
வளர்ச்சி நின்று கொண்டிருப்பதன்
பின்னணி என்ன என்பதை ஆராய 
வேண்டும் என்று எண்ண வைக்கும்.

இயற்கை ஆர்வலர்கள் மனதில் 
எழும் கேள்விகளும் சிந்தனைகளும்
இவைகளாகத்தான் இருக்கும்

இந்தச் சிந்தனையும் ஆர்வமும் இருந்ததால்தான்
வள்ளுவரும் 
"வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்   தனையது உயர்வு "
என்று சொல்லி வைத்தார்.

இப்போது தாமரை இலையில் தண்ணீர்
ஒட்டாமலேயே இருக்கிறதே இதற்கு
என்ன காரணம் என்று ஆராயத் 
தொடங்குகிறது மனம்.

விளைவு இலையின்மீது
கண்களைப் பரவ விடுகிறது.
தாமரை இலையின் மீது ஏராளமான நுண்ணிய
மேடுகள் இருப்பதையும் அவற்றை
மெழுகு போன்ற ஒரு பொருள் பொதிந்து
நிற்பதையும் மைக்ரோஸ்கோப் கண்கள்
கண்டு வியப்படைகின்றன.
இலைகள் மீது நீர்த்துளிகள் விழுந்ததும் அவை
அப்படியே இலையின் மீது பூசப்பட்டிருக்கும் 
மெழுகின் காரணமாக ஒட்டாமல் வழிந்து
ஓடி விடுகிறது என்ற உண்மை
நமக்குத் தெரிய வருகிறது.

நம்மைப் போன்றே தாமரை இலையைப்
பார்த்துக் கொண்டிருந்த
ஒரு புலவர் இதனை ஒரு உவமையாக
வைத்தால் என்ன என சிந்திக்கிறார்.

நீரிலேயே இருக்கிறது ஆனால் தண்ணீர்
அதன் மீது ஒட்டுவதில்லை.
அது போன்றுதான் சிலர் குடும்பத்தினரோடு பட்டும்
படாமலும் ஒட்டியும் ஒட்டாமலும் எதிலும்
ஈடுபாடு காட்டாது தனித்து இருப்பர்.
அப்படிப்பட்டவர்களைச் சொல்லும் போது
தாமரை இலைமேல் நீர் போல என்ற உவமையைக்
சொல்லி தான் சொல்ல வந்த
கருத்தைப் பளிச்சென்று புரியும்படி
சொல்லிவிட்டுப் போய்க் கொண்டே இருக்கிறார்.

 தண்ணீருக்கும் எண்ணெய்க்கும் எப்போதும்
 பகை .இருவரும் ஒருபோதும் சேர்வதில்லை.
 பிரிந்து நின்று முறைத்துக் கொண்டிருப்பர்.
 இதுதான் தாமரை இலையின் மீது 
தண்ணீர் ஒட்டாததற்கான காரணம்.

இந்தத் தாமரை இலைத் தத்துவம் நானோ 
தொழில்நுட்ப ஆய்வாளர் கண்களில் படுகிறது.
அசந்து போகிறார்.
இந்தத் தத்துவத்தைப் பயன்படுத்தி
ஏதாவது உருவாக்கலாமா என்று
நினைக்கிறார்.

அதன்படி பார்த்லாட் என்ற நானோ 
தொழில்நுட்ப ஆய்வாளர் 
தாமரை இலை தத்துவத்தைப் பயன்படுத்தி
ஒரு கண்ணாடியைத் தயாரிக்க முனைந்தார்.

கண்ணாடியின் மீது பார்த்லாட் என்பவர்
பூசிய பொருளானது தாமரை இலையில்
இருப்பது போன்று நுண்ணிய சிறு குன்றுகளை
வரிசையாகக் கொண்டதாய் இருந்தது.
அவற்றின்மீது நீர்த்திவலை நிற்கவில்லை.
ஆனால் பள்ளங்கள் உள்ள குறுகலான
பகுதியில் மட்டும் நீர் நிற்பதைக் கண்டுபிடித்தார்.
அதற்கான காப்புரிமை வாங்கி வைத்துக்
கொண்டார்.
ஆனால் யாருமே அதனை வாங்க முன்வரவில்லை.
பின்னர் அந்தத் தொழில்நுட்பத்தை சற்று
மேம்படுத்த எண்ணினார்.
இப்போது மறுபடியும் தாமரை இலை 
தத்துவத்தின்படியே மேடுகளின்மீது 
சிலிக்கன் பூச்சுப் பூசினார்.
 தாமரை இலை அமைப்புபோன்ற
தேக்கரண்டி தயாரிக்கப்பட்டு  மேற்பரப்பில்
சிலிக்கன் பூசப்பட்டது.

அதன் மீது தேனை ஊற்றி ஆய்வு
செய்து பார்த்தார். தேன் தேக்கரண்டியில்
ஒட்டாமல் வழிந்து ஓடியது.
வெற்றி!    வெற்றி!  ...வெற்றி !
உரக்கக் கத்தி உலகத்திற்குத்
தன் படைப்பை அறிமுகப்படுத்தினார்.

அதன்பிறகு உலகம் அவருடைய
ஆராய்ச்சியை ஏற்றுக் கொண்டது.

இந்தத் தாமரை இலை தத்துவத்தின்படிதான்
ராணுவ வீரர்களுக்கு உடை 
தயாரிக்கப்படுகிறதாம்.

ராணுவ வீரர்களுக்கான உடை தயாரிப்பதற்கான
நூலிழைகளை நானோகெயா என்ற நிறுவனம்
தயாரித்து வருகிறதாம்.

இவர்கள்  நீரெதிர் நூலிழைகள் மூலம்
தாமரை இலை பரப்பு போன்ற துணிகளை 
உருவாக்குகின்றனர்.
இந்த வகையில் தயாரிக்கப்படும் 
துணிகள்மீது தண்ணீர் ஒட்டுவதில்லை.
தேநீர் சிந்தினாலும் ஒட்டுவதில்லையாம்.
உதறி விட்டுவிட்டால் போதும் .
தேநீர் கறை இருந்த இடம் தெரியாமல்
போய்விடுமாம்.

அடிக்கடி துவைக்கத் தேவை இல்லை.
மனதிருப்திகாக எப்போதாவது தண்ணீரில் அலசி
போட்டால் போதும் என்கின்றனர்.

தாமரை இலை தத்துவத்தில் ராணுவ உடைகளா?
வியப்பாக இருக்கிறதல்லவா! மருத்துவத் துறையிலும்
இத்தகைய தொழில்நுட்பத்தில் தயாரிக்கும்
ஆடைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது
என்கின்றனர் அந்த நிறுவனத்தினர்.

தொட்டுப் பார்த்து உண்மையா
என்பதை அறிய வேண்டும் என்று
தோன்றுகிறதல்லவா!

இயற்கை நமக்குக் கற்றுத் தந்து
கொண்டிருக்கும் பாடங்கள் ஏராளம் என்பது
நமக்குத் தெரியும். 
நவீன தொழில் நுட்பத்திற்கான
ஆலோசனைகளும் இயற்கையிலிருந்துதான்
கிடைக்கிறது என்பதைக் கேட்கும்போது
ஆச்சரியம் மேலிடத்தான் செய்கிறது.

தாமரை இலைமேல் நீர் போல என்று
மிகச்சாதாரணமாக .....
 ஒட்டியும் ஓட்டாமலும்
எப்போதும் தள்ளி நிற்கும் மனிதர்களுக்கு
உவமையாக இதுவரை சொல்லப்பட்டு வந்த
தாமரை இலைக்குள் இத்தனை உயர் 
தொழில் நுட்ப தத்துவமா!

தத்துவம் என்றதும்தான் 
கண்ணதாசன் அவர்கள் பாவமன்னிப்பு
என்ற படத்திற்காக பாடிய 
தத்துவப் பாடல் ஒன்று நினைவுக்கு
வருகிறது.

பாடலைக் கட்டுரையோடு இணைத்துப்
படித்துப் பாருங்கள்.
இயற்கைக்கும் தொழில் நுட்ப
வளர்ச்சிக்குமான தொடர்பு புரியும்.

வந்தநாள் முதல்
இந்தநாள் வரை
வானம் மாறவில்லை
வான்மதியும் நீரும்
கடல் காற்றும்
மலரும் மண்ணும்
கொடியும் சோலையும்

நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்.....

......   ..... ......

பறவையைக் கண்டான் 
விமானம் படைத்தான்
பாயும் மீன்களில்
படகினைக் கண்டான்
எதிரொலி கேட்டான்
வானொலி படைத்தான்
எதனைக் கண்டான்
பணம்தனைப் படைத்தான்

மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்....Comments

  1. தாமரை இலையில் நீர் ஒட்டாத தத்துவம் ராணுவ வீரர்களின் உடைகளில் பயன் படுத்தப்படுகிறது என்ற அறியாத கருத்துக்களையும் பதிவிட்டது மிக அருமை.

    ReplyDelete
  2. மிக சிறப்பான கட்டுரை...

    ReplyDelete
  3. மிக அருமையான தகவல்...

    ReplyDelete

Post a Comment

Popular Posts