வரப்புயர நீருயரும்.....
வரப்புயர நீருயரும்
வாழ்த்து அனுப்ப வார்த்தைகள் தேடினேன்.
பல்லாண்டு பல்லாண்டு ....
பல்லாயிரம் ஆண்டு வாழ்க!
என்று வாழ்த்துவாயாக என்று
வாழ்த்து ஒன்று ஓடி வந்து உச்சந்தலையில்
உட்கார்ந்து கொண்டது.
வேறு ஏதாவது வாழ்த்து கிடைக்குமா ?
முடிந்த மட்டும் மண்டையை
உருட்டிப் பார்த்தேன்.
வாழ்க வளமுடன் !
வாழ்த்துச் சொல்லி மகிழ்க
என்று மற்றுமொரு வாழ்த்து
வரிசைக்கு வந்து நின்றது.
இவ்வளவுதானா?
வளமான மொழியான என்
தாய்த்தமிழில் வாழ்த்திட
வார்த்தைக்குப் பஞ்சமா?
இருக்காது..... இருக்கவும் கூடாது.
என் தலைச்சோற்றில் கற்பனைக்குப் பஞ்சம்.
விளைந்தது என் சொல்லில் கஞ்சம்.
விஞ்சும் சொற்கள் கிடைக்காதா
கொஞ்சமென மனம் கெஞ்ச
கண்கள் துஞ்ச மறுத்தன .
முட்டி மோதிப் பார்க்கையில்
மண்டைக்குள் ஓர் ஒளிக்கீற்று
மின்னலாய் வந்து போக....
புரட்டிடு புறநானூற்றை என்றுரைத்தது மனம்.
வாழ்த்தொன்று நான் தேட
பத்தாய் என் கண்முன் வந்து
வாழ்த்திப் பார் என்று
வரிசைகட்டி நின்றன
புலவர்களின் வாழ்த்துகள்!
ஞாயிறு போல வாழ்வாயாக
என்றொருவர் வாழ்த்திப்போக...
வானத்து விண்மீன்களுக்கு நடுவே
விளங்கும் வெண்ணிலவாய்
விளங்கட்டும் உன் புகழ் ...
வார்த்தையால் தோரணம் கட்டி
வாழ்த்துச் சொன்னார் இன்னொரு புலவர்.
மழைத்துளி போல கணக்கில்லா
ஆண்டு வாழ்கவென வாழ்த்திப்பார்
பரிந்துரை வழங்கி என் பரிதாபம் தீர்த்தார்
பரிசில் வாங்கி திரும்பிய மற்றுமொரு புலவர்.
நீலமணி மிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும! ...
வாழ்த்தொலி கேட்டு
அதியமானை வாழ்த்திய
ஔவையின் குரலாயிற்றே என
திரும்பிப் பார்த்தேன்.
தன் பொக்கைவாய்த் திறந்து
மெல்ல புன்னகைத்தார் ஔவை.
அசந்து போய் அப்படியே நின்றிருந்தேன்.
வாழ்த்து வேண்டுமா?
குலோத்துங்க சோழனை
வாழ்த்திப் பாடுகிறேன்
கேளென்று கூறி ஔவை
சிலிர்க்க வைத்தார்!
என்னைச் சிந்திக்க வைத்தார்!
நெல்லோடு வார்த்தை
விளையாட்டுக் காட்டி
என்னை நெடுமூச்சு விட வைத்தார்.
நெடும்பயணம் நடக்க வைத்தார்.
நெல்லின்றேல் உணவில்லை
உணவின்றேல் உயிரில்லை
உயிரின்றேல் உலகமில்லை
உலகமின்றேல் உலகாளும் மன்னனில்லை
எல்லாம் நெல்லுக்குள் அடக்கம்
நெல்லுக்குள் மன்னனும் அடங்கும்
எண்ணமுடியா பெருமைசார் நெல்போல
வாழ்கவென மன்னனுக்கு வாழ்த்துரைத்து
விடுவிடுவென நடந்தார்!
ஔவை குலோத்துங்க சோழ மன்னனை
வாழ்த்திப் பாடிய பாடல் இதோ....
" வரப்புயர நீருயரும்
நீருயர நெல் உயரும்
நெல்லுயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான் "
_ ஔவை
"வரப்பு உயர உயர நீர் உயருமாம்.
நீர் உயர உயர ...
நெற்பயிர்கள் வளர்ந்து
நெல் விளைச்சல் உயருமாம்.
நெல்விளைச்சல் உயர உயர ....
குடிமக்கள் வாழ்வு உயருமாம்.
குடிமக்கள் வாழ்வு உயர்ந்தால்...
நாட்டில் செங்கோல் வழுவாத நல்லாட்சி
நடக்குமாம்.
நல்லாட்சி நடந்துவிட்டால்....
நல்லாட்சி புரியும் மன்னன் புகழ் எப்போதும்
எங்கும் உயர்ந்து நிற்குமாம்..
ஆதலால் மன்னா !
நீர்நிலைகளைப் பெருக்கி...
நெற்களஞ்சியங்களை நிரப்பி...
குடிமக்கள் வாழ்வை வளமாக்கி...
நல்லாட்சி நடத்தி...
நற்புகழ் அடைந்திடுக!"
என்று வாழ்த்தினார்.
புதுமையான வாழ்த்தாக இருக்குதுல்ல...
இனி என்னங்க ....நாமும் பழைய
பாட்டையே எத்தனை நாட்களுக்குத்தான்
பாடிக்கொண்டிருப்பது.?
ஔவையைப் போன்று
புதுமையாக வாழ்த்தித்தான் பார்ப்போமே!
உங்களுக்காக சில வரிகள்...
கடற்காற்று குவி மணல் போல...
கதிர்நிறை நெல்மணிபோல...
விரிகதிர் ஞாயிறுபோல...
மின்னிடும் விண்மீன் போல...
நறுமலர் தரு மகிழ்போல...
வானின்றுவீழ் மழைத்துளி போல...
விண்மீன் சூழ் வெண்ணிலவு போல...
நதிநீர்த் திரள்மணல் போல....
விசும்பின் வீழ்த் துளி போல...
என்பன போன்ற சொற்களால்
தோரணம் கட்டி
வாழ்த்தி மகிழ்வோம் வாங்க...
Wow wonderful
ReplyDeleteYou are great. Thinking wonderfully.
ReplyDeleteபுதுமையாக வாழ்த்தும் வரிகள்....மிக அருமை
ReplyDelete