கிண்ணிப் பெட்டி

   கிண்ணிப்பெட்டி


கிண்ணிப் பெட்டி என்றதும் ஏன்
கிண்ணிப் பெட்டியையே பார்க்காத மாதிரி
கிண்கிணியென சிரிக்கிறீர்கள்?

நீங்க பார்த்திருக்க வாய்பில்லைதான்.
ஊரில் இருப்பவர்களே கிண்ணிப்பெட்டியை
மறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
மும்பை போன்ற பெருநகரங்களில்
வசிக்கும் நீங்கள் பார்த்திருக்கவா முடியும்?

அது என்னங்க கிண்ணிப் பெட்டி...
 என்று நீங்கள் கேட்பது 
 என் காதுகளில் விழத்தான் செய்கிறது.
 
 நீங்கள் கிண்ணிப் பெட்டி என்ற சொல்லுக்கே 
 கூகுளில் பொருள் தேடும் நவீன கால
 மனிதர்கள்.
 உங்களிடம் கிண்ணிப்பெட்டி...கிண்ணிப்
 பெட்டி என்றால் ...
 
 அட...நீங்கள் சைனா கிளே பௌல்ஸ்
 பிரியர்கள் என்பதை மறந்தே போய்விட்டேன்.
 
இருக்கிறவரை  கிண்ணிப்பெட்டி
அருமை தெரியலைங்க...
யார் வீட்டிலாவது சைனா கோப்பையைப்
பார்த்தால் இந்தச் சைனா கோப்பையில்
 பண்டங்களை வைத்துத்  தின்னும்
காலம் நமக்கும் வராதா என 
ஏங்கியிருப்போம்....
சைனா கோப்பையில் சாப்பிடுகிறவர்கள்
எல்லாம் பணக்காரர்கள்...நாகரீகமானவர்கள்
என்று ஏக்கத்தோடு பார்த்திருப்போம்.
இக்கரைக்கு அக்கரை பச்சை.
அதுதாங்க உண்மை.

இப்போது விதவிதமான சைனா கோப்பையை 
வைத்துவிட்டு இது எப்போது ஒழியும்...நம்ம 
கிண்ணிப்பெட்டி காலம் எப்போது வரும்
என்று ஏக்கமாக இருக்குது.

எதுவுமே இருக்கும்போது அதன் 
அருமை தெரியாது.
இல்லாமல் போனால்தான் அதன் 
அருமை தெரியும் என்பது
நூற்றுக்கு நூறு உண்மை.

 நானும் கிண்ணிப்பெட்டியை மறந்து
 பல ஆண்டுகள் ஆகிவிட்டது.
 இப்போது என்ன திடீரென்று கிண்ணிப்பெட்டி
 ஞாபகம் என்கிறீர்களா?
எல்லாம் பழைய நினைப்புதாங்க...

ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே
கிண்ணிப் பெட்டியில்
போட்டுத் தின்ற
பண்டங்கள் எல்லாம்
ஒவ்வொன்றாக
ஞாபகம் வருதே!

அவித்த புட்டும்
வறுத்த கடலையும் 
பச்சரிசி மாவும் 
ஏழிலை கிழங்கும்
காணம் பயறும்
ஞாபகம் வருதே!

சோளப்பொரியும்
தினை மாவும்
பனங்கிழங்கும்
போட்டுத் தின்ற 
காலங்களெல்லாம்
ஞாபகம் வருதே!

நினைவுகள் நெஞ்சில் நின்று
நித்தம் நித்தம் சத்தமில்லாமல்
நாவில் எச்சில் ஊற வைத்து ..
ஆசையைத் தூண்டி
ஆராயிரம் மைல்களுக்கு அப்பால்
வந்த பின்னரும் ஆசைக் காட்டுதே!

கிண்ணிப் பெட்டியியை
மோந்து மோந்து
பார்த்து பார்த்து மகிழ்ந்த
நாட்கள்  எல்லாம் ....
 இப்போது நினைத்தாலும் அந்தப்
பனையோலையின் மணம்.....
அதில் குடித்த பதநீர்...
ஓலைப்பட்டையில் ஊற்றிக் குடித்த
 உளுந்தம் கஞ்சி....ஒவ்வொன்றாக
உள்ளத்தில் வந்து...உற்சாகம் தருகிறது.

நல்லா ஞாபகம் வந்துச்சி போங்க...
எங்களையும் ஞாபகப்படுத்தி விட்டுட்டீங்களே
என்று கிண்ணிப்பெட்டியில்
தின்றவர்களின் நினைவலையில்
வெளியாகும் பெருமூச்சு
அப்படியே காற்றலையில்
மிதந்து எங்க வீடுவரை வருதுங்க....

அவித்த சிறுபயிற்றின்மீது
கொஞ்சம் தூக்கலாக தேங்காய்த்
துருவலைத்  தூவி
கிண்ணிப் பெட்டியில் போட்டுத்  
தருவாங்க பாருங்க...
அடடடா...எந்த ஸ்டார் ஓட்டல்
உணவும் கிட்ட நிற்க முடியாதுங்க...

கேழ்வரகு புட்டு அவித்து 
கிண்ணிப் பெட்டியில் போட்டு
தேங்காய்த் துருவலைத் தூவி...
தின்று பாருங்க...நாளைக்கும்
வேணும். ...வேணும் என்று 
கேட்டு வாங்கி சாப்பிடுவீங்க.....

கிண்ணிப் பெட்டியின் மணமே 
இன்னும் கொஞ்சம்  வேணும் என்று
கெஞ்ச வைக்கும்.

சுக்குமாவு  பிடிச்சு
கிண்ணிப் பெட்டியில் வைத்துத்
தின்னுப் பாருங்க...சுக்குமாவின்
மணம் பெட்டியின் மணத்தோடு 
சேர்ந்துகொள்ள ....
அடடடா....என்ன சுவை!...என்ன சுவை!
 அடம்பிடித்து அதிகமாக வாங்கித்
தின்றதற்கான காரணம் இப்போது
புரிகிறது.


பெட்டியோடு எடுத்துச் சென்று  
யாரும் கேட்டுவிடக்  கூடாது என்று 
ஒளிச்சு வைத்து....
கப்பு கப்புன்னு அள்ளி வாய்க்குள்ள
இருத்தி ....விக்கி...வெடவெடத்துப் போயி...
மறைந்து மறைந்து நின்று
கண்விழிகள் துருத்த...
தின்ற காலங்கள்...

ஐயோ....என் கிண்ணிப் பெட்டியே!
நீ தந்த இன்பமே தனிதான்....

நினைத்த நேரத்தில் நினைத்த
உணவை ஆர்டர் பண்ணி 
உண்கிற நகர வாழ்க்கை
மகிழ்ச்சிதான். இல்லை என்று
சொல்லவில்லை.

எனினும் என் கிண்ணிப்பெட்டி
ஆசை மட்டும் மனதுக்குள் கிடந்து
எதையோ தொலைத்துவிட்ட
உணர்வைத் தந்து கொண்டே இருக்கிறது.

ஓடிப்போயி கிண்ணிப் பெட்டி வாங்கி
அதில் வைத்து சிற்றுண்டிகளை வைத்துச்
சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதல்லவா!

இதோ ...இப்பொழுதே...
நமது மகளிர் சுய உதவி 
குழுக்கள் உங்க வருகைக்காக
காத்துக் கொண்டிருக்காங்க....

பனையோலை  கிண்ணிப் பெட்டியை
வாங்குங்க... வகை வகையான 
நம் பாரம்யரிய உணவுகளை 
கிண்ணிப் பெட்டியில் வைத்து
சாப்பிடுங்க....என்றுதானே சொல்ல வருகிறீர்கள்.

 சாப்பிடத்தான் நினைக்கிறேன். முடியலியே!

கூடுதலாக இன்னொரு பனையோலைப்
பெட்டியும் என்னைப் பாடாய்ப் படுத்துது.

விருந்தினர் வீட்டிற்கு வரும்போது
ஓலைப்பெட்டியில் வைத்துக் 
கொண்டு வந்து தரும்
தேன்கொழல் மிட்டாயும், காரச்சேவும்
இனிப்புச் சேவும் தின்ற காலம்....
விருந்தோம்பல் காலம்....
வருவிருந்துக்காக வாசலிலேயே 
காத்திருந்த காலம்.....
வாசமுள்ள மிட்டாய்ப் பெட்டி காலம்.

அதுதாங்க... சுவையின் காலம்...
சுகத்தின் காலம்...இனிமையின் காலம்...
தின்ற காலம்...தின்ன விரும்பும் காலம்
என்னைத் திரும்பிப் பார்க்க வைத்துத்
திணறடித்துக் கொண்டிருக்கும் காலம்.
அந்தக் காலம்  அது...அது வசந்தத்தின் காலம்.

 கிண்ணிப்பெட்டியோடு
மிட்டாய்ப் பெட்டியும் 
வீட்டிற்குள் ஏட்டிப் பார்த்து
குறுநகை புரியும்
வசந்த காலம் வராமலா போய்விடும்...

என்றென்றும் கிண்ணிப் பெட்டி
நினைவுகளுடன் நான்.
Comments

Popular Posts