வெள்ளந்தி மனிதர்கள் யார் ?

வெள்ளந்தி மனிதர்கள் யார் ?


கள்ளங்கபடமற்ற அப்பாவியாக ஒருவர் 
இருந்தால் அவரை வெள்ளந்தியாக இருக்கிறாரே 
என்று கூறுவோம்.

கிராமம் சார்ந்த கதைகளில் எப்படியும்
வெள்ளந்தி மனிதர்கள் கதாப்பாத்திரம்
இல்லாமல் இருக்காது. 
அப்படிப்பட்ட கதைகளை வாசித்து...
வாசித்து ...கிராமப்புற மக்கள் என்றால்
வெள்ளந்தியாக இருப்பார்கள் என்று
மனதிற்குள் ஒரு கணக்குப் போட்டு 
வைத்துக் கொண்டோம்.

கிராமப்புற மக்கள் என்றால்
கள்ளம் கபடமற்றவர்கள்.
எளிதில் யாரிடமும் ஏமாந்து விடுவார்கள்.
நகர்ப்புற மக்கள்  என்றால் ஏமாற்றுக்காரர்கள்.
ஏமாற்றுவதும் பணம் பண்ணுவதும்தான்
இவர்கள் தொழில்.

இப்படித்தான் திரைப்படங்களிலும்
தொலைக்காட்சித் தொடர்களிலும்  காட்டப்படுவதால்
அனைவர் மனதிலும் அப்படிப்பட்ட
ஒரு கருத்து ஆழமாகப் பதிந்து போய்விட்டது.

உண்மை நிலை இதுதானா? 
எனக்குள்ளே எழுந்த
கேள்விக்கு விடை தேட முற்பட்டேன்.

இன்றைய காலக்கட்டத்தில் கிராமம் ...
நகரம் என்று தனித்தனியாகப்
 பிரிவுபட்டுக்  கிடக்கவில்லை. 
எல்லோரும் தொலைத் தொடர்பு சாதனங்களால்
ஒருங்கிணைக்கப்பட்டு விட்டோம்.
நகர்ப்புற மாணவனுக்குக் கிடைக்கிற 
அத்தனை தகவல் தொடர்பு வசதி
 வாய்ப்புகளும் கிராமப்புற மாணவனுக்கும் 
 கிடைக்கிறது.
இருவரும் எல்லா செய்திகளையும் தெரிந்து
வைத்திருக்கின்றனர்.
அதனால் ஒன்றும் தெரியாத வெள்ளந்திகள்
என்று யாரும் இருக்க முடியாது.

ஒருசில பெரியவர்கள் இதற்கு விதிவிலக்காக
இருக்கலாம்.

எல்லாம் தெரிந்துவிட்டால் போதுமா? 

பழைய கள்ளங் கபடம் இன்னும்
கிராமங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது 
என்ற நினைப்பில் வெள்ளந்தி மக்கள் 
கிராமத்தினர் மட்டுமே என்று
சொல்லிக் கொண்டு திரிகிறோம்.

 ஒளிவு மறைவு இல்லாமல் மனதில் 
 பட்டதை அப்படியே பேசிவிடுபவர்கள்
 வெள்ளந்தி மனிதர்கள் என்றால் அதற்கு ஒரு
 குறிப்பிட்ட இடம்தான் சாத்தியப்படுமா?

கதைகளில் விவசாயிகளைச் 
சொல்ல வேண்டுமா
உடனே வெள்ளந்தி மனிதர்கள் என்று
சொல்லிவிட வேண்டியது....

பக்கத்து வீட்டுக்காரன் மாடு தன்
தோட்டத்தில் மேய்ந்து விட்டால்...
வீச்சறுவாளை வீசி மாட்டை வெட்டிவிடும்
விவசாயிகள் உண்டு.

வாய்க்கால் தாவாவுக்காக வீம்பு பிடித்து
நீதி மன்ற வாசலில் வருடக்கணக்காக 
காத்திருக்கும் பாசக்கார அண்ணன் 
தம்பிமார் உண்டு. 

இப்படி இருக்கும்போது...கிராமத்தினர் மட்டுமே
வெள்ளந்தியாக இருப்பர் என்று எப்படி
கூறிவிட முடியும்?

நகரங்களில் உறவுகள் இல்லாத
பலதரப்பட்ட மக்கள் இருப்பதால் இந்த
பிரச்சனைகள் குறைவு என்றுதான்
சொல்ல வேண்டும்.

நகரத்தில் யாரைப் பற்றியுமே எதுவுமே கண்டு
கொள்ளாத மனிதர்கள்.
பிறர் விசயத்தில் இருந்து எப்போதும் 
ஒதுங்கியே இருக்கும் மக்கள்.
இவர்களால் யாருக்குமே எந்த
பிரச்சினையும் இல்லை.

தானுண்டு. தன் வேலை உண்டு என்று
ஓடிக்கொண்டே இருக்கும் மனிதர்கள்.
இது பரவாயில்லையே என்று தோணும்.


பணிக்குச் செல்லும்போது பரிச்சயமானவர்களில்
வெள்ளந்தி பட்டியலில் யாராவது இருக்கிறார்களா?
என்ற தேடல் எனக்குள் வந்தது.
உண்மையாகப் பேசும்... பழகும் பலர்
என் நட்பு வட்டத்தில் உண்டு.
 
இதுதானே வெள்ளந்தி....
 .
அவர்களின் வெள்ளந்தியான பேச்சு
எனக்குப் பிடித்திருந்தது.
மெத்தப் படித்தவர்கள்தான்.
ஆனால் அவர்கள் பேச்சில் 
உண்மை இருந்தது.
அதனால் கள்ளம் கபடம் 
காணாமல் போனது.

இப்போது படிக்காதவர்கள் மட்டுமே
வெள்ளந்தி மனிதர்கள் 
என்ற என் முடிவை மாற்ற வேண்டியதாயிற்று.
படிக்காதவர்கள் மட்டுமல்ல..
படித்தவர்களிலும் வெள்ளந்தி மனிதர்கள்
உண்டு என்பதைத் தெரிந்து கொண்டேன்.

இப்போது நகரத்தில் இருப்பவர்கள் 
வெள்ளந்தி மனிதர்களா? 
கிராமத்தில் இருப்பவர்கள் வெள்ளந்தி
மனிதர்களா? என்று ஆய்வு நடத்துவதைவிட
உண்மையாய் நடக்கும் ....பேசும் ...
அனைவருமே வெள்ளந்திகள்தான். 

அவர்கள் கிராமத்திலும் இருக்கலாம். 
நகரத்திலும் இருக்கலாம். 
இருக்கும் இடத்தை மட்டும் வைத்துக் கொண்டு
வெள்ளந்தி மனிதர்கள் பகுப்பு
இருக்கக்கூடாது .

அதனால் வெள்ளந்தி மனிதர்கள் கிராமத்து
மக்களாகத்தான் இருக்க வேண்டும் 
என்று ஒரு சாராருக்கு முத்திரை குத்தி
வைத்திருப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

நான் கிராமத்தில் பிறந்ததால்
கிராமத்தைப் பற்றியும் தெரியும்.
மும்பைக்கு வந்த பின்னர் நகரத்தைப் பற்றியும்
ஓரளவு தெரிந்து கொண்டேன்
இரண்டு பக்கமும் தெரிந்து கொண்டதால்தான்
எனக்கு வெள்ளந்தி மனிதர்களைப் பற்றிய
ஒரு குழப்பமே  ஏற்பட்டது.

இந்தக் குழப்பம் மிகுதியாகி அதைப் 
பற்றிய தேடலுக்குள் என்னைத் தள்ளியது
நான் சிலர் மூலம் கேள்விப்பட்ட செய்தி.

சமீபத்தில் ஒரு காவல்துறை உயர் அதிகாரி
குற்றச்செயல்கள் பற்றி என்னோடு பேசினார்.

பேசி முடித்ததும் "நீங்கள் இவ்வளவு வெள்ளந்தியாக
இருப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை
படித்து பணியில் இருக்கிறீர்கள்.....மேலும்
மும்பையில் இருக்கிறீர்கள். இன்னும் மாறாமல்
அப்படியே இருக்கிறீர்களே! கிராமத்தைப்
பற்றிய உங்கள் எண்ணத்தை இனிமேலாவது
மாற்றிக் கொள்ளுங்கள்  "என்றார்.
 
"அப்படி என்ன பெரிய மாற்றம் நடந்துவிட்டது "
என்றேன்.

"கிராமத்து மக்கள் வெள்ளந்திகள் என்று
நினைத்தால் நீங்கள் ஏமாந்து போவீர்கள்"
என்றார்.

அப்போதுதான் இந்த வெள்ளந்தி மனிதர்களைப்
பற்றிய தேடல் எனக்குள் வந்தது.

சொன்னவர் உளவுத்துறையைச் சார்ந்த அதிகாரி.
கண்டிப்பாக உண்மை இருக்குமல்லவா!

அதற்குப் பின்னர்தான்
யார் வெள்ளந்தி மனிதர்...
யார் வெள்ளந்தி மனிதர்.....
என்ற கேள்வி என்னைத் தூங்க விடாமல்
துரத்தியது.

உண்மை என்ற ஒற்றைச் சொல்லுக்குள்
இந்த வெள்ளந்திகள் அடங்கிவிடுவார்கள்.
உண்மையாக செயல்படும் ஒருவரிடம்
கள்ளங் கபடம் என்ற பேச்சுக்கே இடம்
இருக்காது. 
அவர்கள்தான் வெள்ளந்தி மனிதர்கள்.

உண்மையாகப் பேசுகிறவர்கள் யாராக
இருந்தாலும் எங்கே இருந்தாலும் அவர்கள்
வெள்ளந்தி மனிதர்கள்தான்.

ஒன்றும் அறியாதர்கள் என்ற பட்டியலில்
வருபவர்கள் அறியாமையில்
இருப்பவர்களே தவிர கள்ளங்கபடம்
அற்றவர்கள் அல்ல.

இந்த வெள்ளந்திகள் கிராமத்திலும்
இருக்கலாம் .நகரத்திலும் இருக்கலாம்.
படித்தவர்களிலும் இருக்கலாம்.
படிக்காதவர்களிலும் இருக்கலாம் .
இப்போது மனதிற்குள் இப்படி ஒரு முடிவுரை
எழுதி வைத்துக் கொண்டேன்.

இருப்பினும் யார் வெள்ளந்தி மனிதர் 
என்ற தேடல் எனக்குள் இன்னும் இருந்து 
கொண்டுதான் இருக்கிறது.

தேடலுக்கான விடை உங்களிடம் இருந்தால்
தெரிவியுங்கள்.

Comments

Popular Posts