பல கற்றோம் யாமென்று....

;
கல்


"கற்றது கைம்மண்ணளவு;
கல்லாதது உலகளவு"
என்பார் ஔவை.

ஆனால் நிறைய புத்தகம் படிப்பவர்களுக்கு
நமக்கு எல்லாமே தெரியும் என்ற நினைப்பு
வந்துவிடும்.அதன் காரணமாக இயல்பாக ஒரு
தற்பெருமை வந்து ஒட்டிக் கொள்ளும்.

எல்லாம் தெரியும் என்பது வேறு. 
நமக்கு மட்டும்தான் எல்லாம்
தெரியும் என்பது வேறு.

இப்படிப்பட்ட சிந்தை உள்ளவர்கள் 
வெளியில் காட்டிக் கொள்ளாவிட்டாலும்
மனதிற்குள் ஓர் ஓரத்தில் இந்தப்
பெருமை பதுங்கியிருக்கும்.

நேரம் பார்த்து வெளியில் எட்டிப் பார்க்கும்.

எல்லாம் படித்தவர் எவருமிலர். 

அறிஞர்க்கு அழகு கற்றுணர்ந்து
அடங்கல் என்பார் அதிவீர ராமபாண்டியர்.

அந்த நினைப்பு கொஞ்சமாவது 
மனதில் இருந்தால் தற்பெருமை வராது.

தற்பெருமைக்காரர்களுக்கு
பதிலடி கொடுப்பதுபோல  நாலடியாரில் 
ஒரு பாடல் உள்ளது.

"பல கற்றோம் யாமென்று தற்புகழ வேண்டா
அலர்கதிர் ஞாயிற்றைக் கைக்குடையும் காக்கும்
சிலகற்றார் கண்ணும் உளவாம் பலகற்றார்க்
கச்சாணி யன்னதோர் சொல் "
                                             -   நாலடியார்

பரந்து உலகமெல்லாம் கதிர் பரப்பி 
ஒளிவீசி நிற்கிறது சூரியன்.
அந்த ஒளியை மறைக்க
கையிலுள்ள சிறிய குடை போதும்.

 யாம் நிறைய கற்று விட்டோம்
 என்று ஒருவன் தன்னைத்தானே பெருமையாக
 நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம்.
 
 சில நூல்களை மட்டுமே கற்றவர் பேச்சிலும்
பல கற்றோம் என்று பெருமை கொள்ளும்
மனிதர்கள் பேச்சுக்கு அச்சாணி போன்று 
அமையக்கூடிய இன்றியமையாத நல்ல 
சொற்கள் இருக்கக் கூடும்.
 
 இவருக்கு என்ன அறிவு இருக்கப்
 போகிறது என்று யாரையும் தரக் குறைவாக
 நினைக்க வேண்டாம்.
 படித்தல் வேறு அறிவு வேறு .
 அறிவுசார் வழிகளில் சிந்திக்கும்
 திறன் பெற்றவர்களிடமிருந்து உயர்ந்த
 கருத்துக்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு.
 இவர் என்ன படித்திருக்கிறார். இவருக்கு
 என்ன தெரியப் போகிறது என்ற
நினைப்பு வேண்டவே வேண்டாம்.

மொத்தத்தில்  மெத்தப் படித்துவிட்டோம் என்ற
 தற்பெருமை கொள்ள வேண்டாம்.
 எல்லோரும் அறிவுடையவர்களே 
 என்கிறது நாலடியார்.
 
 

Comments

Popular Posts