தும்முச் செறுப்ப அழுதாள்....
தும்முச் செறுப்ப அழுதாள்.....
"தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்தீரோ என்று "
குறள் : 1318
தும்மு - தும்மல்
செறுப்ப - அடக்க
அழுதாள் - கலங்கி அழுதாள்
நுமர் - உம்முடையவர்
உள்ளல் - நினைத்தல்
எம்மை - எங்களை
மறைத்தீரோ - மறைக்கின்றீரோ
என்று - என்பதாக
தும்மலை அடக்கினேன். உமக்கு வேண்டியவர்
நினைப்பதை என்னிடமிருந்து மறைக்கிறீரோ
என்று சொல்லி அழுதாள்.
விளக்கம் :
தும்மல் சாதாரணமான ஒரு செயல்.
ஆனால் நமக்கு அருமையானவர் யாராவது
நினைப்பதால்தான் தும்மல் வரும் என்பது
நம்மவர்களின் நம்பிக்கை.
தும்மல் வந்தால் நூறாண்டு வாழ்க என
வாழ்த்துவது நம் மரபு.
யாரோ ...எங்கோ இருப்பவர் நினைக்கும்போது
தும்மல் வருகிறது.
அருகில் அருமையானவர் அமர்ந்திருக்கும்போது
தும்மல் வருவதில் ஞாயம் இல்லை.
அன்புக்கு உரியவர் பக்கத்தில் நம் கண்
எதிரிலேயே இருக்கிறார்.
அப்படியானால் யார் நினைப்பதால் இந்தத்
தும்மல் வந்திருக்கும்?
இப்படி ஒரு ஐயம் யாருக்கும்
எழுவது இயல்புதானே!
இந்த ஐயம்தான் இங்கே ஒரு
தலைவிக்கும் வந்திருக்கிறது.
தலைவனுக்கு தும்மல் வந்திருக்கிறது.
அவன் அதை அடக்க நினைக்கிறான்.
அதை பார்த்து விடுகிறாள் தலைவி.
எதற்காக தும்மலை அடக்கினீர் ?
என்னைவிட அதிகமாக நேசிக்கிற யாரோ
ஒருவர் உம்மை நினைக்கிறார்.
அது எனக்குத் தெரியக்கூடாது
என்று நினைக்கிறீர். அதனால்தான் தும்மலை
என்னிடமிருந்து மறைக்க முயன்றீர்
இல்லையா...
கேட்டு ஊடல் கொண்டாள்.
அத்தோடு விட்டுவிடவில்லை.
கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்துவிட்டாளாம்.
சாதாரண தும்மல் .
இதுவும் ஊடலுக்குக் காரணமாக
இருக்க வேண்டுமா என்ன!
வியப்பாக இருக்கிறது இல்லையா!
இல்லாததையும் இருப்பதையும்
வைத்துப் புனைவதால் வருவதுதானே
ஊடல்.
ஊடலில்லா காதலில் சுவை இருக்காது.
காதலை எவ்வளவு நுட்பமாக சின்ன
சின்ன நிகழ்வுகள்மூலம் செதுக்கி
காட்சிப்படுத்தியிருக்கிறார் வள்ளுவர்.
English couplet :
And so next time I checked my sneezing, she wept
and cried,( that woman difficult to please)
'your thoughts from me you hide.
Explanation :
"When I suppressed my sneezing, she wept saying,"I suppose
you ( did so ) to hide from me your own
People's rememberance of you "
Transliteration :
"Thummuch cheruppa Azhudhaal Numarullal
Emmai Maraiththiro Endu "
தும்மலுக்கும் அழனான கருத்தை தந்து பதிவிட்டது மிகச் சிறப்பு.
ReplyDelete