அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவை போல்...

அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவை போல்....

நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஓர்
அங்கமாக இருப்பவர்கள் உறவுகள்.
உறவுகள் சூழ இருந்தால்தான்
மனதில் ஒரு மகிழ்ச்சி இருக்கும்.
உறவு என்பது வெறுமனே இரத்த சம்பந்தப்பட்ட
உறவுகள் என்பதல்ல.
குடும்ப உறவுகளைத் தாண்டியும்
நட்பும் உறவாகவே கருதப்படும்.
நம் இன்ப துன்ப காலங்களில் நட்பும்
கரம் கோத்து உடன் நடப்பதுண்டு.

இப்படி நம்மைச் சுற்றி எப்போதும்
ஒரு உறவு வளையம் இருந்து 
கொண்டே இருக்கும்.

அதில் முதன்மையான உறவு
குடும்ப உறவு என்றார் ஔவை.

"கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுதல் கோடி  பெறும் "
என்று தனது தனிப்பாடலில் சொல்லி
வைத்தவர் ஔவை.

இதே ஔவை இன்னொரு பாடலில்
தனது கருத்தில் சற்று மாறுபடுகிறார்.
மாறுபடுகிறார் என்பதைவிட உறவுகள்
வேண்டும். மறுப்பதற்கில்லை. ஆனால்
யார் ..யாரோடு உறவு வைத்துக்
கொள்ள வேண்டும் என்பதை தேர்வு செய்வதில்
கவனமாக இருங்கள்  என அறிவுரை
செய்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

எல்லா உறவும் உறவல்ல.
யார் ...யார் ...உறவினர்....
யார் யாரெல்லாம் உறவினர் அல்லர்
என்பதை இந்தப் பாடலைப் படித்த பின்னர்
நீங்களே முடிவு செய்து 
கொள்ளுங்கள் என்கிறார் ஔவை.

ஔவையின் பாடல்கள் பொழுதுபோகாமல் 
எழுதப்பட்டவை அல்ல.
அனுபவச் சாறு பிழிந்து கொடுக்கப்பட்ட
வாழ்வியல் விருந்து.
எந்த அகவையில்
உள்ளவரும் அருந்தி இன்பம்
காணவல்ல அருமருந்து.
மூதுரையின் ஒவ்வொரு பாடலுமே
தெரிந்து கொள்ள வேண்டிய உயரிய
வாழ்க்கைப் பாடங்களைச் சுமந்து
நிற்கும்.

அவற்றுள்  உறவு பற்றிச் சொல்லப்பட்ட
பாடல் இதோ:

அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவு அல்லர் - அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும்  நெய்தலும் போலவே
ஒட்டி யுறுவார் உறவு 

                                  -  மூதுரை


நீர்ப்பறவைகள் குளத்தில் நீர் நிறைந்திருக்கையில்
அதைச் சுற்றிச் சுற்றி வந்து அதில்
கிடக்கும் மீன்களை உண்டு வாழ்ந்து
மகிழ்ந்திருக்கும்.
குளத்தில் நீர் வற்றிவிட்டால் ....
அந்தப் பக்கமே திரும்பிப் பார்க்காமல் 
வேறு திசையை நோக்கி...
அதாவது நீர்நிலைகளை நோக்கிச்
சென்றுவிடும்.வளங்களை நாடி ஓடிவிடும்.
அது போல நாம் வசதியாக வாழும்போது...
 உறவு என்று சொல்லிக் கொண்டு ஒரு கூட்டம்
 நம்மைச் சுற்றி இருந்து கொண்டே
இருக்கும்.
 
நமக்கு வறுமையோ ஒரு துன்பமோ 
அல்லது ஏதோ ஒரு நொடியோ ஏற்பட்டு விட்டால்.....
நம்மை அப்படியே நிராதரவாக விட்டுவிட்டு
காணாமல் போய்விடும்.
இதுதான் உண்மை.
அப்படிப்பட்டவர்கள் உறவினர்கள்
என்று சொல்லிக் கொள்ள 
அருகதையற்றவர்கள் என்கிறார் ஔவை.

நீர் இருந்தாலும் ....
இல்லாமல் போனாலும் கொட்டி, 
ஆம்பல், நெய்தல் போன்ற நீர்த்தாவரங்கள்
குளத்தைவிட்டு எங்கும் சென்றுவிடுவதில்லை.
செல்ல வாய்ப்பும் இல்லை.
குளம் இருக்கும்வரை ...அதாவது
 கடைசிவரை குளத்திலேயே கிடக்கும்.
 நீர் வற்றிய காலத்தும்
 குளத்தைவிட்டு நீங்கா இத்தாவரங்கள் போல
 இன்பதுன்ப காலங்களில் உடன் 
 இருப்பவர்களே உண்மையான
உறவுகள் என்கிறார் ஔவை.

இருக்கும் வரை சுற்றி சுற்றி உறவுகள் வரும்.
வசதி இருந்தால் என் தாத்தா....என் மாமா ...
என் சித்தப்பா....என் பெரியப்பா... 
என் அண்ணன் ....என் தம்பி
என் மாமா... என் ஒன்றுவிட்ட மாமா
பிள்ளை....என் பாட்டியுடைய தம்பியுடைய
மகளுடைய மருமகன் ....
என்று எல்லாவிதமான உறவு முறைகளையும்
சொல்லிக் கொண்டாடும் உலகம் இது.
வறுமை வந்துவிட்டால்...
இடர் நேர்ந்துவிட்டால்...
நம்மிடம் உதவி கேட்டுவிடுவார்களோ 
என எட்ட நின்று கண்டு கொள்ளாமலே
போய்விடும்
கிட்டவர அஞ்சும்.
தொட்டும் தொடாமலும் பட்டும் படாமலும்
பேசும்.
என் உறவினர்  என்று சொல்லிக்
கொள்வதே அவமானம் என்பதுபோல்

அவமானப்பட்டு விலகியே
நிற்கும்.
இதுதான்டா உலகம்.
அப்படிப்பட்டவர்கள் உனக்கு உறவுகளே 
கிடையாது.
அவர்களை உறவு என்று நம்பி
ஏமாந்துவிடாதே என்று சொல்லித் தருகிறார் ஔவை.
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போல
என்ன நேர்ந்தாலும் உன்னோடு இருப்பவரை 
மட்டுமே உறவினர் என்ற பட்டியலில்
வைத்திரு. மற்றவர்களை அடையாளம்
கண்டு ஒதுங்கி இரு என்று
அறிவுரை வழங்குகிறார் ஔவை.

உண்மை உறவு நமக்குக் கிடைத்த வரம்.
வரமான உறவுகள் வாய்க்காவிட்டாலும்
பரவாயில்லை.குறைந்தபட்சம்
உண்மை உறவு எது என்பதையாவது
தெரிந்து வைத்துக்கொள் என்கிறார் ஔவை.

பல நேரங்களில் நாமும் யார் உண்மையான
உறவு என்று கணிக்கமுடியாமல் தடுமாறி
இருப்போம்.
உறவுகள் விலகி ஓடிய பிறகும்கூட
காரணம் என்னவென்று புரியாது
விழித்திருப்போம்.

அவற்றுக்கெல்லாம் தீர்வாக
அமைந்துள்ளது இந்தப் பாடல்.

எப்போதும் மனதில் பதிய வைத்துக் கொள்ள
வேண்டிய வைர வரிகள்.

வாழ்வியல் உண்மைகளை வாழ்ந்தவர்கள்
சொல்லித் தருவதைவிட வேறு யாரால்
இவ்வளவு அருமையாக 
சொல்லித் தந்துவிட முடியும்?


Comments

Popular Posts