உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்...

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்...

அரசன் முதல் பாமரன் வரை 
அனைவருக்கும் அறிவுரையும் அறவுரையும் தந்து
வழிகாட்டும் திருக்குறளையும் ஆத்திசூடியையும்
படிக்காதவர் எவரும் இருக்க முடியாது.

பேச்சுத் துணைக்கும் இவர்கள் வேண்டும்.
ஆட்சித்துணைக்கும் இவர்கள் வர வேண்டும்.

தமிழில் படிப்பதற்கும் பகிர்ந்து கொள்ளுவதற்கும்
ஏராளமான நூல்கள் உள்ளன.
எல்லா நூல்களிலும் உள்ள மொத்தக் கருத்தையும்
கத்தையாக தன்னுள் அடக்கி வைத்திருக்கும்
நூல் திருக்குறள்.
பயண நேரங்களில் பேச்சுத் துணைக்கு
வைத்திருக்க வேண்டிய நூல்.

இன்று உலக நாடுகள் எல்லாம்
உற்று நோக்கும் இந்திய பாராளுமன்ற
உரையில் திருவள்ளுவரும் ஔவையும்
ஆட்சி செய்கிறார்கள் என்பதை அறியும்போது
மகிழ்ச்சி மேலிடுகிறது.

அப்படி என்ன   பெரிதாக
ஆட்சி செய்துவிடப் போகிறது... ஏதோ போகிற போக்கில்
ஒன்றிரண்டு வரிகளைச் சொல்லி
இருப்பார்கள் என்று நினைக்கத் தோன்றும்.

அந்த ஒன்றிரண்டு வரிகளும் உலகம்
முழுவதிலும் பேசுபொருளாகிவிடும்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட
வரிகள். இன்றைய சூழலுக்கும் உகந்ததாக
இருப்பதில்தான் அதன் பெருமை
நிலைநிறுத்தப்படுகிறது.

இன்று நாட்டில் விவசாயம் சார்ந்த சிக்கல்கள்
எழுந்துள்ளன.
விவசாயிகளும் விவசாயமும்
அரசின் கவனத்தில் இல்லையோ என்று 
ஐயுறுவோருக்குப் பதிலாக அமைந்தது
"பூமி திருத்தி உண் "என்ற ஔவையின்
அமுதமொழி.
உணவு என்றால் அது விவசாயத்தால்
மட்டுமே கிடைப்பதாக இருக்கும்.
"விவசாயம் செய்து அதில் கிடைக்கும்
பொருட்களைக் கொண்டு வாழ்க"
என்பதுதான் இதன் பொருள்.

நீ உண்ணும் உணவு உனது உழைப்பால்
வந்ததாக இருக்க வேண்டும்.

நாடு வளம்பெற அடிப்படை விவசாயம்.
அந்த விவசாயம் வளர்ச்சி அடைந்தால்
மட்டுமே அனைவரும் வயிறார உண்டு
வாயார வாழ்த்தி மகிழ்ச்சியாக வாழலாம்.

 அதனால்தான் பாரதி,
"உழவுக்கும் தொழிலுக்கும் 
வந்தனை செய்வோம் _ வீணில்
உண்டு களித்திருப்போரை 
நிந்தனை செய்வோம்"
என்றார்.

ஒரு நாட்டில் விவசாயமும் நடைபெற வேண்டும்.
தொழில் வளர்ச்சியும்  முன்னிலையில் இருத்தல்
வேண்டும்.இவை இரண்டும்
நல்லமுறையில் நடைபெற்றால் மட்டுமே
ஒருநாடு தன்னிறைவு பெற்ற நாடாக
உலக அரங்கில் பீடு நடை போட முடியும்.

விவசாயம்தான் உலகத்திற்கு உயிர்நாடி
போன்றது.

"உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃதாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து"

அச்சாணி இல்லா வண்டி நகர முடியாமல்
தடுமாற்றம் கண்டு தலைகீழாகக் கவிழ்ந்துவிடும்.
அதனால்தான் உழுவார் உலகத்தார்க்கு 
அச்சாணி போன்றவர் என்கிறார் வள்ளுவர்.

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர் "
என்றார் வள்ளுவர்.

வாழ்பவர் என்று ஒருவர் உண்டு என்றால்
அவர் விவசாயி மட்டுமே ஆவார்.
மற்றவர்கள் எல்லாம் அவரைத் தொழுது.
அவர் பின்னால் சென்று 
உயிர் வாழ்பவராகவே இருப்பர்.
அதனால் உழவருக்கு உயரிய மரியாதை
தர வேண்டும் என்று
 சொல்லித் தந்திருக்கிறார் வள்ளுவர்.

ஔவை தனது நல்வழியில், 

"ஆற்றங்கரையின் மரமும் அரசு அறிய
வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே _ ஏற்றம்
உழுது உண்டு வாழ்வதற்கு ஒப்பு இல்லை கண்டீர்
பழுது உண்டு வேறே ஓர் பணிக்கு "
என்றார்.

ஆற்றங்கரையோரம் நிற்கும் மரம் 
 நீர் வளத்தின் காரணமாக நன்கு 
 செழித்து வளர்ந்து நிற்கும்.
ஆனால் அந்த மரம்கூட ஒருநாள் வேரோடு
 சாய்ந்து வீழ்ந்து போகலாம்.
அரசு வேலையில் உயர்வான பணியில்
அமர்ந்திருப்பவர்களுக்கும்  ஒருநாள்
 பணி இல்லாமல் வீட்டில் இருக்க வேண்டிய
 காலம் வரலாம்.
ஆனால் உழுது ...அதனால் கிடைக்கும்
 பொருட்களை உண்டு உயிர் வாழும்
 உழவர் வாழ்க்கையைப் போன்று 
 உயர்வான வாழ்க்கை ஏதுமில்லை.

உழவுத்தொழில் செய்பவர்கள் ஓய்வு
எடுத்துக் கொண்டால் மக்கள் வயிறு 
உணவு இல்லாமல் காய்ந்து போகும்.
எத்தொழில் செய்பவருக்கும் 
உணவளிப்பவர்கள் உழவர்கள்.
உழவுத்தொழில் செய்பவர்கள் தங்கள்
உழைப்பை மட்டுமே நம்பி 
உயிர் வாழ்கிறார்கள்  .
ஆனால் விவசாயிகளின் உழைப்பில்தான்
மற்றவர்கள் உயிர் வாழ முடியும்.

"மற்ற வேலைகளுக்குப்  பழுது உண்டு.
உழவுத் தொழிலுக்குப் பழுதே இல்லை"
என்கிறார் ஔவை.

பழுதில்லாத ஒரே தொழில் உழவுத் தொழில்
என்பதால் வள்ளுவர்,
" சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
 உழந்தும் உழவே தலை "
 என்றார்.

உலகமே ஏர் பிடிக்கும் உழவர் பின்னால்தான்
உழன்று கொண்டிருக்கிறது.சுழன்று 
கொண்டிருக்கிறது.ஏர் பிடிக்கும் கை
நின்று போனால் உலகமும் தன்
இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும்.

அதனால்தான்,
"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே "
என்பர்.

உயிர் கொடுத்த தாய்க்கு எப்போதுமே முதல்
மரியாதை உண்டு.
உயிர் உடலோடு நிலைத்திருப்பதற்கு 
இன்றுவரை காரணமாக இருப்பவர் உழவர்.
அந்த உழவர்களுக்கும் உரிய மரியாதை 
செய்ய வேண்டும். 
அது நம் கடமை.
கடமையாற்றாதிருப்பது மடமை.
மடமை அறுத்து அறிவார்ந்த வழிகளில்
செயல்பட்டுக் கொண்டிருக்கும் நாம்
உழவருக்கு உரிய மரியாதை செய்வோம்.

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்ய
கற்றுத் தருவோம்.







 

 

Comments

  1. உழவுத்தொழிலை போற்றி காக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை மக்கள் அறிந்து செயல்பட வேண்டும்.விவசாயம் சார்ந்த சிக்கல்களை அரசு ஏற்று தீர்த்து வைக்க வேண்டும்.

    ReplyDelete

Post a Comment

Popular Posts