நட்ட கல்லை தெய்வம் என்று...
நட்ட கல்லை தெய்வம் என்று....
தமிழகத்தைச் சார்ந்த பதினெட்டு சித்தர்கள்
சித்தர்களுள் தலையாயச் சித்தர்களாக
கருதப்படுகின்றனர்.
இவர்கள் தவிர இன்னும் நூற்றுக்கணக்கான
சித்தர்களும் உண்டு.
சித்தர்கள் தங்களுக்கென்று தனிப்பட்ட
வாழ்க்கை முறையை வகுத்துக் கொண்டு
இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்தவர்கள் .
பேரறிவு படைத்தவர்கள்.
எண் பெருஞ் சித்திகள் அதாவது அட்டமா
சித்திகளைப் பெற்றவர்கள்.
சித்தர்கள் என்றாலே நிறைமொழி மாந்தர்
என்று பொருள்படுவதாக பழந்தமிழ்
நூல்களில் குறிப்புகள் உள்ளன.
சித்தர்கள் வான சாத்திரம் ,கைரேகை சாத்திரம்
தாவரவியல் நூல், சோதிட நூல்,கணித நூல்,
மாந்திரிகம் இரசவாதம் ,வைத்தியம்
போன்ற பல்வேறு துறைசார்
இலக்கியங்களைப் படைத்துள்ளனர்.
பண்டைய அறிவியல் அறிவின் சிகரமாம்
சித்தவைத்தியம் பற்றி சித்தர்கள் பல பாடல்கள்
பாடியுள்ளனர்.
நமது உடம்புதான் பரமாத்மா. ஆதலால்
கடவுளைத்தேடி எங்கும் அலைய வேண்டாம்.
உன்னுள்ளும் இருப்பான் .
என்னுள்ளும் இருப்பான்.
உருவம் இல்லா உண்மை .
அவன்தான் இறைவன் என்ற கொள்கை
உடையவர்கள் சித்தர்கள்.
சிவவாக்கிய சித்தர் சித்தர்களுள் தனித்துவம்
வாய்ந்தவராக கருதப்படுகிறார்.
இவருடைய பாடல்கள் எல்லாம் கேள்வி
கேட்பது போலவே தொடங்கி முடிவில் அதன்
பதிலும் கொண்டதாக முடிக்கப்பட்டிருக்கும்.
புறவழிபாடு செய்பவர்களைப் பார்த்து
கேள்வி கேட்கும் பாங்கு இவரை
பகுத்தறிவு கொள்கை சார்ந்தவரோ என
எண்ண வைப்பதாக இருக்கும்.
இவருடைய பாக்களில் ஞானக் கருத்துகள்
மிகுந்திருக்கும்.
துள்ளல் ஓசை கொண்ட இவருடைய பாடல்கள்
படிப்போரின் சிந்தனையைத்
தூண்டுவதாக இருக்கும்.
இவர் தனது பாடல்களில் இறைவன் பெயரால் நடக்கும் அட்டூழியங்கள், சாதி சமய சீர்கேடுகள்,
இறைவனுக்கு உருவம் கற்பித்தல்,
போலி் குருமார்கள் ஆகியோரை
கடுமையாக சாடியிருப்பார்.
அதற்கு சான்றாக பல பாடல்கள் உள்ளன.
"நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொண மொணன்று சொல்லு மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ ?"
என்ற அவருடைய பாடல்
அனைவராலும் நன்கு அறியப்பட்டப் பாடலாகும்.
ஒரு கல்லை தெய்வம் என்று சொல்லி
பூக்கள் போன்றவற்றால் அர்ச்சனை
செய்து...ஏதோ புரியாதபடி மந்திரங்களைச்
சொல்வதில் என்ன பயன் கிடைத்து
விடப்போகிறது. காய் கறி ஆக்கிய
சட்டியால் அதன் சுவையை அறிந்து
கொள்ள முடியுமா...என்ன?
அதுதான் இல்லை ...அதனை எடுத்துப்
பரிமாறிய அகப்பையால் அதன் சுவையை
நுகர்ந்து கொள்ள முடியுமா என்றால்...
அதுவும் கூடாதல்லவா!
வெளிப்புற பூசைகளாலும்
சடங்குகளாலும் ஒன்றும் கிடைத்துவிடப்
போவதில்லை.
இறைவன் உள்ளத்தில் இருக்கிறான்.
உள்ளத்தில் உள்ள இறைவனை
மனத்தூய்மை கொண்டு நித்தம்
தொழுது கொள்ளுங்கள் .
இறைவன் அருள் கிடைக்கும் என்கிறார்
சிவவாக்கியர்.
Comments
Post a Comment