சிரிப்பு மத்தாப்பு

             சிரிப்பு மத்தாப்பு

"வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்"

ஆனால் எவ்வளவுதான் சிரிக்க வைத்தாலும்
சிரிக்காமல்  கஞ்சி போட்ட சட்டை
மாதிரி எப்போதும் சிலர் விறைப்பாகவே
இருப்பார்கள்.

அது அவர்கள் சுபாவம் .
அவர்களையும் சிரிக்க வைக்க வேண்டும்
என்று கங்கணம் கட்டி சிரிப்பை 
அள்ளி விடுவோர் உண்டு.

பொதுவாக பேச்சாளர் அனைவருக்குமே
நகைச்சுவை உணர்வு இருக்கும்.

அப்படிப் பேசினால்தான் பேச்சில் ஒரு
சுவாரசியம் இருக்கும்.
கூட்டத்தினரைக் கடைசிவரை
இருக்கையில் இருக்க வைக்க முடியும்.

கிருபானந்த வாரியார் பேச்சில் நல்ல நகைச்சுவை
இருக்கும்.
சிலேடைப் பேச்சும் இருக்கும்.
மேலோட்டமாக ஒரு பொருளும் பிரித்துப்
பொருள் கொண்டால் இன்னொரு பொருளும்
வைத்துப் பேசுவார்.
சிலேடைப்புலி கி. வ. ஜகநாதன் பேச்சுக்குப் பேச்சு
இரட்டை அர்த்தம் கொண்ட சொற்களைப்
பயன்படுத்துவார்.

ஒருமுறை கி.வா. ஜ  வாரியாரின்
 சொற்பொழிவைக் கேட்க வந்திருந்தார்.
கடைசிவரை இருந்து கேட்டுவிட்டுப் போங்கள்
என்று கேட்டுக் கொண்டார் வாரியார்.

எனக்கு வேறு பணி இருக்கிறது. 
இறுதிவரை இருக்க முடியுமா என்று
தெரியவில்லை. என்று சொல்லிவிட்டு
சொற்பொழிவு கேட்க அமர்ந்தார் கி. வா. ஜ.

வாரியாரின் பேச்சில் நேரம் போனதே தெரியவில்லை.
கடைசிவரை இருந்து சொற்பொழிவைக்
கேட்டார் கி.வா. ஜ.
கூட்டம் முடிந்ததும் வாரியார் கடைசிவரை இருந்து
கேட்டீர்களே என்று கூறி
மகிழ்ச்சியடைந்தார்.

உங்கள் சொற்பொழிவு அருந்  தேன்.
அதை அருந்தேன் என்று எவன்
சொல்லுவான்? 
அருந்தவே இருந்தேன். நீங்கள் சொல்லின்
செல்வர் அல்லவா என்று பாராட்டினார்
கி. வா. ஜ.

வாரியாரோ" நான் சொல்லின் செல்வர் அல்ல.
அது அனுமனுக்கு உள்ள பட்டம் அல்லவா?"
என்றார்.

"உண்மைதான் நீங்கள் சொல்லின் செல்வர்
அல்ல. நீங்கள் சொல்லின் எல்லோரும்
செல்லாமல் இருந்தல்லவா கேட்கிறோம்"
என்று இரட்டை அர்த்தத்தில் பேசி
வாரியாரையே சிரிக்க வைத்தார்  கி. வா. ஜ.


அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி
போன்றவர்களும் இரு பொருள்படப்
பேசி அனைவரையும் சிரிக்கவும் சிந்திக்கவும்
வைப்பர்.

சிலேடையாக மட்டுமல்ல வார்த்தை 
விளையாட்டிலும் வல்லவர்கள் நம்
தமிழ் அறிஞர் பெருமக்கள்.

கலைஞரின் பேச்சில்  நல்ல நகைச்சுவை
மட்டுமல்லாது சிலேடைக்கும் பஞ்சம்
இருக்காது.
ஒருமுறை  கலைஞர் அவர்கள் ஒரு 
மருத்துவரிடம் சென்றிருக்கிறார்.

மருத்துவர் கலைஞரைப் பரிசோதிக்கும் போது
"கொஞ்சம் மூச்சை இழுத்துப் புடிங்க"
என்றார்.
கலைஞரும் மருத்துவர் சொன்னதுபோலவே 
மூச்சை இழுத்துப் பிடித்தார்.
மறுபடியும் மருத்துவர்" இப்போ மூச்சை விடுங்க"
என்றாராம்.
"மூச்சை விடக்கூடாது என்றுதானே டாக்டர்
 மருத்துவமனைக்கு வந்திருக்கிறேன்.
 நீங்கள் மூச்சை விடச் சொல்கிறீர்களே"
 என்று கேட்டாராம் கலைஞர்.
 அதைக் கேட்டதும் மருத்துவர் சிரித்து விட்டார்.
வேறென்ன செய்திருக்க முடியும் ?


மருத்துவமனையில்கூட கலைஞரால்
எப்படி நகைச்சுவையாகப்
பேச முடிந்தது ?
 
வியப்பாக இருக்கிறதல்லவா!

இதே போன்றுதான்
இங்கேயும்  ஒரு மருத்துவரிடம் ஒரு புலவர்
சென்றிருக்கிறார்.

மருத்துவரும் அருகில் அமர வைத்து
"என்ன செய்கிறது ? "என்று கேட்டிருக்கிறார்.
வந்திருந்தவரோ தமிழில் புலமை 
மிக்கவராயிற்றே...

கால் வலித்தாலும் வாய் வலிக்காமல்
வார்த்தைகளை அடுக்கி... மருத்துவரிடம்
புதிராக  கவியால் தன் கால் வலிக்கான
காரணத்தைக் கூறினார்.

புலவர் கூறிய பாடல் இதோ...

"அக்காலை பொழுதினிலே
முக்காலை ஊன்றி
மூவிரண்டு போகையிலே
ஐந்துதலை நாகமொன்று
ஆழ்ந்து கடித்ததுவே"

என்றார் புலவர்.

மருத்துவரும் நல்ல தமிழ்ப் புலமை
உள்ளவர்தான்.
மருத்துவருக்குப் புலவருக்கு
என்ன செய்கிறது ? என்பது புரிந்து போயிற்று.

உங்களுக்குப் புரியவில்லையா ?

இதோ அந்த பாடலுக்கான பொருளும்
விளக்கமும் வருகிறது.
படித்தால் அசந்து போவீர்கள்.

அக்காலை பொழுதினிலே _ அந்தக் காலை
நேரத்தில்

முக்காலை ஊன்றி _ இரண்டு காலோடு மூன்றாவது
காலான  ஊன்று கோலை ஊன்றி

மூவிரண்டு போகும் போது_  
மூவிரண்டு = ஆறு
அதாவது ஆற்றுக்குப் போகும்போது

ஐந்து தலை நாகமொன்று _ ஐந்து முட்கள் 
கொண்ட நெருஞ்சிமுள்ளொன்று

ஆழ்ந்து கடித்ததுவே _ஆழமாக குத்திவிட்டது


"அந்தக் காலை நேரத்தில்
 ஊன்று கோலை ஊன்றியபடி 
 ஆற்றுப்பக்கம் நான் போகும்போது 
 அங்கே கிடந்த ஐந்து முட்கள் கொண்ட 
 நெருஞ்சிமுள் ஒன்று என் காலில் குத்திவிட்டது"
 இதுதான் புலவர் மருத்துவரிடம் கூறியது.

மருத்துவரும் நாமும் புலவரிடம் கொஞ்சம்
தமிழில் விளையாடிப் பார்ப்போமே என்று
புதிராகவே  மருந்து  என்ன
என்பதைக் கூறினார்.

"பத்துரதன் புத்திரனின் மித்திரனின்
சத்துருவின் பத்தினியின்
கால் வாங்கி தேய்"

என்பதுதான் மருத்துவர் கூறிய மருந்து.

 பாடலைக் கேட்டதும் தலை சுற்றுகிறதா?
 
 தலை மட்டுமா சுற்றுகிறது...காலும் அல்லவா
 தள்ளாடுகிறது  என்கிறீர்களா?
 
 காலைத் தரையில் தேய்ப்பதைத் தவிர
 என்னாலும் வேறொன்றும் 
 செய்ய முடியவில்லை.
 
 புலவர்கூட பரவாயில்லை.
 சிறிது பொருள் புரிந்தது.
 மருத்துவரின் பாடல் புரியவே இல்லை.
 மருத்துவர் தமிழ் ஆய்வாளராக இருக்குமோ...
 என்ற ஐயம் எழுகிறதல்லவா!

என்ன மருந்து கூறியிருப்பார்
பொருள் என்ன என்று பார்ப்போமா?

பத்துரதன் என்றால் தசரதன்.
பத்துரதன் புத்திரன் என்பவன் ராமன்.
புத்திரனின் மித்திரன் அதாவது ராமனின்
நண்பன் சுக்ரீவன்.
மித்திரனின் சத்துரு அதாவது சுக்ரீவனின்
எதிரி வாலி.
சத்துருவின் பத்தினி தாரை அதாவது
சுக்ரீவனின் எதிரியான வாலியின் 
மனைவி தாரை.

தாரை என்ற பெயரிலுள்ள தா என்பதின்
காலை  எடுத்துவிட்டால் ....
தாரை என்பது தரை ஆகிவிடும்.

காலில் இருக்கும் முள்ளை எடுத்துவிட்டு
காலைத் தரையில் தேய்த்தால் 
 எல்லாம் சரியாகிவிடும் " என்றாராம்
மருத்துவர்.

"முள்ளை எடுத்துவிட்டுக் 
காலைத் தரையில் தேயுங்கள் " என்று 
 ஒற்றை வரியில் சொல்லிவிட்டால் போதும். 
 
அதற்கு தசரதனின் மகன் ராமன்.
ராமனின் நண்பன் சுக்ரீவன்.
சுக்ரீவனின் எதிரி வாலி.
வாலியின் மனைவி தாரை என்று
ஒரு வரலாற்றுக் காவியத்தையே நம்
கண்முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டார்
மருத்துவர்.


நல்ல நோயாளி...நல்ல மருத்துவர்.

 

Comments

Post a Comment

Popular Posts