கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே....


கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே....

நல்லவரையும் தீயவரையும்
கொண்டதுதான் உலகு.

நல்லவர் யார் என்பதற்கு நாம் ஓர்
அளவுகோல் வைத்திருப்போம். 
தீயவர் யார் என்பதற்கும் ஓர்
அளவுகோல் உண்டு.

நாம் நல்லவர் என்று முடிவுசெய்து
வைத்திருந்த ஒருவர் திடீரென்று தீயவராக
மாறிவிடுகிறார்.
தீயவர் பல நாட்களாக நல்லவராக நம்
கண்களுக்குத் தெரிந்திருக்கிறார்.
இதுதான் உண்மை.

இது என்ன?
இது நம் பார்வையில் ஏற்பட்ட
கோளாறா? அல்லது உண்மையிலேயே அப்படித்தான்
நிகழ்ந்துள்ளதா?
நம்பமுடியவில்லை....வில்லை...வில்லை...
அவரா இவர்? அவரா இப்படி மாறிப் போனார்.
சொல்லிச் சொல்லிப்
புலம்புகிறோம்.

நல்லவர் திடீரென்று இப்படி
கெட்டவராக மாறமுடியுமா?

யாரிடம் போய் கேட்டு
என் ஐயத்தைத் தீர்த்துக் கொள்வது?

 அங்கேயும் இங்கேயும் தேடி
கடைசியில்  கண்ணில் பட்டது
அதிவீரராம பாண்டியன் எழுதிய
 வெற்றி வேற்கை.
 
புரட்டினேன்.

நல்லவர் எப்படி கெட்டவர் ஆவார்.?
ஒருநாளும் அது சாத்தியமில்லை என்று
உச்சந்தலையில் ஓங்கியடித்துச்
சொல்லித் தந்தார் அதிவீரராம பாண்டியன்.

ஆமா இல்ல...!

இவர் சொல்வது நூற்றுக்கு நூறு
உண்மையாக இருக்கிறதே....அப்படியானால்
நல்லவர் ஒருநாளும் தீயவராக
மாறுவதற்கு வாய்ப்பே இல்லையா?


இல்லை...இல்லை...
கீழ்க் கொடுப்பட்ட பாடலை வாசி.
அதன் பின்னரும் ஐயம் இருந்தால் என்னிடம் கேள்
என்று சொல்லிவிட்டு
அவர் பாட்டுக்குப் போய்விட்டார்.

என்னிடம் அவர் சொன்ன அந்தப்
பாடல் இதோ உங்களுக்காக.


"அடியினும் ஆவின் பால் தன்சுவை குன்றாது

சுடினும் செம்பொன் தன்ஒளி கெடாது

அரைக்கினும் சந்தனம் தன் மணம் அறாது

புகைக்கினும் காரகில் பொல்லாங்கு கமழாது

கலக்கினும் தன்கடல் சேறு ஆகாது

ஒருநாள் பழகினும் பெரியோர் கேண்மை
இருநிலம் பிளக்க வேர் வீழ்க்கும்மே
நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை
நீர்மேல் பாசிபோல் வேர் கொள்ளாதே"


நல்லவர்களின் குணம் எந்த
நிலையிலும் மாறாது என்பதற்குச்
சான்றாக இந்த ஐந்து பொருள்களின்
 குணங்களை நம் கண்முன்
 கொண்டுவந்து நிறுத்தி
சொல்லி புரிய வைத்துள்ளார் அதிவீரராம பாண்டியன்.

பால் சுண்டக் காய்ச்சுவதால்
அதன் சுவை குறைந்து போகுமா?
மாறாக சுவை கூடத்தான் செய்யுமே தவிர
ஒருபோதும் பாலின் சுவை 
குறையப் போவதில்லை.

பொன்னை நெருப்பில் போட்டுப்
புடமிட்டுச் சுடுவதால்  பொன் அதன் ஒளியை 
இழந்து போகுமா?

சந்தனத்தைக் கல்லில்
 வைத்து அரைப்பதால்
அதன் மணம் இல்லாமல் போய்விடுமா?

அகிலை நெருப்பில் போட்டு
புகைப்பததால் அதன் மணம்
வராமல் போகுமா?

பாலின் குணம் இனிமை.
பொன்னின் குணம் ஒளி.
சந்தனத்தின் குணம் மணம்.
அகிலின் குணம் நறுமணம்
கடலின் குணம் தெளிந்த நீர்

இவை யாவும் அவற்றிற்கே
உரிய உயரிய இயல்பான
குணம்.

அந்த குணம் எந்த நிலையிலும்
எந்த இடத்திலும் எதற்காகவும்
தனக்கே உரிய இயல்பினை 
இழந்து
போவதில்லை.

ஒருநாள் பழகினாலும் பெரியோர் நட்பு
நிலத்தைப் பிளந்து சென்று
உறுதியாக நிலை நிறுத்தும் 
வேரைப் போன்று
உறுதியாக பற்றிக் கொள்ளும்.
கீழோர் நட்பு நீர் மேல் கிடக்கும்
பாசி வேர் பிடிப்பு இல்லாமல் ஒட்டியும்
ஒட்டாமலும் நீரில் மிதந்து செல்வதுபோல
உண்மையான நெருக்கம் கொள்ளாது
இருக்கும்.


பெரியோர் எதற்காகவும் யாருக்காகவும்
எந்த இடத்திலும் தன் இயல்பான நல்ல
குணத்திலிருது தரம் தாழ்ந்து 
போகமாட்டார்கள்.

முன்பு நல்லவராக இருந்தார் இப்போது
பணம் வந்துவிட்டது அதனால் மாறிவிட்டார்.

வறுமை வந்துவிட்டது அதனால் 
குணங்கெட்டவராக மாறிவிட்டார் .

இப்படி யாராவது கூறினால்
 ஏற்றுக் கொள்ளாதிருங்கள்.
அது உண்மையாக இருக்க முடியாது.

அவர் உண்மையிலேயே நல்லவராக 
இருந்திருந்தால்
அவருக்குள் எந்த மாற்றமும் நிகழாது.நிகழவும் கூடாது.

அப்படி அவர் மாறியிருந்தால்
நல்லவர் வேடத்தில் வாழ்ந்திருப்பார்.
சூழ்நிலை வந்தபோது உண்மையான முகம்
வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.
இதுதான் உண்மை.
உண்மையைத் தவிர வேறொன்றும்
இல்லை.

நல்லவர் எப்போதுமே நல்லவர் தான்.
எவ்வளவு ஆணித்தரமாக சரியான
எடுத்துக்காட்டுகளை முன் வைத்து
உண்மையை உரக்கச் சொல்லி இருக்கிறார்
அதிவீரராம பாண்டியன்.

நேற்று நல்லவர் இன்று கெட்டவராகப் போவதில்லை.
இன்று கெட்டவர் நாளை நல்லவராகப்
போவதுமில்லை.

இதற்கு வலு சேர்ப்பதுபோல
ஔவையும் நல்வழியில் 
ஒரு பாடல் தந்துள்ளார்.

"அட்டாலும் பால் சுவையில் குன்றாது
அளவளவாய்
நட்டாலும் நட்பு அல்லார் நட்பு
அல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே
சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்"
                 -  மூதுரை


சுண்டக் காய்ச்சினாலும் பால் சுவை குன்றாது.
அளவற்ற நட்பு பாராட்டினாலும்
நண்பராக இருக்கும் தகுதியற்ற ஒருவர் 
நண்பராக மாட்டார்.
தன் நிலையிலிருந்து தாழ்ந்த  நிலையிலும்
 மேன்மக்கள் 
எனக் கருதப்படும்
சான்றோர் மேன்மக்களுக்குரிய நற்பண்பு
கொண்டவராகவே இருப்பர்.
சங்கு சுட்டபோதும் அதன்
வெண்மை நிறம் மாறவே மாறாது.

எப்போதும் எந்நிலையிலும்
மேன்மக்கள் மேன்மக்கள் தான்.

அதிவீரராம பாண்டியன் சொன்ன கருத்தும்
ஔவை சொன்னக் கருத்தும்
என்றுதான்.

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே!

இன்னும் யாரிடமாவது கேட்டுத் தெரிந்து
கொள்ள வேண்டுமா?

வாருங்கள்.இதே கருத்தை வலியுறுத்தும்
நீதி வெண்பாவின் பாடல் உங்களுக்காக...

"பொன்னும் கரும்பும் புகழ்பாலும்
சந்தனமும்
சின்னம்பட வருத்தம் செய்தாலும்
முன்பிருந்த
நற்குணமே தோன்றும் நலிந்தாலும்
உத்தமர்பால்
நற்குணமே தோன்றும் நயந்து"

பொன்,கரும்பு,பால் ,சந்தனம்
ஆகியவற்றை எப்படித்தான் 
மாற்ற நினைத்தாலும் அவை ஒருபோதும்
தன் நிலையிலிருந்து மாறப் போவதில்லை.
அதுபோல உத்தமருக்கு எவ்வளவுதான்
துன்பம் தந்தாலும் அவர் ஒருபோதும்
தன் நற்பண்பிலிருந்து தாழ்ந்து
போகும் செயலைச் செய்யப்போவதில்லை.


அதிவீரராம பாண்டியன் ,ஔவை
கூறியதையே பெயர் அறியப்படாத
 புலவர் எழுதிய நீதி வெண்பாவும்
 வலியுறுத்துகிறது.
 
எது எப்படியோ "கெட்டாலும்
மேன்மக்கள் மேன்மக்களே"
என்பதை நம்மாலும் இனி
உரக்கச் சொல்லலாலாம்.
ஊரறியச் சொல்லலாம்.
உலகறியச் சொல்லலாம் இல்லையா?


         







Comments

Popular Posts