சாதி இரண்டொழிய வேறில்லை....

சாதி இரண்டொழிய வேறில்லை.....

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா 
செய்தொழில் வேற்றுமையான்"

என்றார் வள்ளுவர்.

பிறப்பால் அனைவரும் சமம்.
செய்யும் தொழிலில் காட்டும்
திறனுக்கு ஏற்ப வேறுபாடுகள்
கண்டறிய முடியுமே  தவிர
பிறப்பால் வேறுபாடு இல்லை.


பிறப்பில் வேறுபாடு இல்லை எனில்
இடையில் எங்கிருந்து நுழைந்தது இந்தப்
சாதியப் பாகுபாடு.?
உயர்ந்தவர் தாழ்ந்தவர் மேலோர் கீழோர்
என்ற பகுப்பு எதனால் ஏற்பட்டது.?

பணத்தால் எழுந்திருக்கலாம்.
செய்யும் தொழிலில் வேறுபாடு இருக்கலாம்.
ஆனால் அது எப்படி ஒரு குறிப்பிட்ட தொழில் செய்யும்
பிரிவினர் தீண்டத்தகாதவர் 
என்று ஒதுக்குவதற்கு
காரணமாக இருக்க முடியும்? 
தொழில் என்று பார்க்க வேண்டுமே தவிர 
இது உயர்ந்த வேலை இது தாழ்ந்த
 வேலை என்று சொல்ல முடியாது.
ஒரு தொழிலில் தேர்ச்சி பெற்றவர்
எல்லா தொழிலிலும் தேர்ச்சி பெற்றிருக்க மாட்டார்.
அவரவர் தொழிலில் அவரவர் பெரிய
 ஆளாக இருப்பார்.
 சாதாரண கொத்தனார் வேலைதானே என்று 
 சொல்லுவோம்.
 செய்து பாருங்களேன். அதிலுள்ள நுட்பம்
 தெரியாமல் விழிபிதுங்கிப் போவோம்.
 சமையல் என்ன பெரிய வேலையா..?
 என்று வீட்டில் மூச்சுக்கு முந்நூறு முறை
 சொல்லிச்சொல்லி சமையல் செய்பவர்களை
 வெறுப்பேற்றுவோம்..
 நீங்கள் செய்து பாருங்களேன்..
 அப்போது புரியும்...எவ்வளவு கடினம் என்பது.

செய்யும் தொழிலை வைத்தும் 
உயர்வுதாழ்வு என்று சொல்லுதல்
தவறு என்றுதான் கூறுவேன்.

தீண்டாமை..தீண்டாமை என்கிறோமே...
அது இந்தக் காலத்திலும் இருக்கிறதா
என்று கேட்கத் தோன்றும்.
பெரும்நகரங்களில் பெரும்பாலும்
இத்தகைய மனநிலை இல்லாமல்
போய்விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆனால் குக்கிராமங்களில் இன்றும்
முற்றிலுமாக ஒழிந்துவிட்டது என்று
சொல்ல முடியாது.
ஐயாயிரம் பெரியார் வந்தாலும்
திருத்த முடியாது இந்த சாதியவாதிகளை.

சாதி என்னும் பாகுபாடு இருக்கும்வரை
சமூகநீதி முற்றிலுமாக கிடைத்துவிடும்
என்று நம்பமுடியாது.

ஒருகாலத்தில் சாதிய அமைப்பு
இருந்திருக்கலாம். 
ஆனால் இன்று அவை எல்லாவற்றையும்
தாண்டி எவ்வளவோ தொலைவு
வந்துவிட்டோம். ஆனால் கூடவே சாதியையும்
கூட்டி வந்துவிட்டோம் என்பது
 வேதனையான விசயம்.
சாதி என்றால் என்ன என்றே தெரியாமல்
நகரத்தில் பிறந்து வளர்ந்தவர்களும்
 இன்று சாதி அமைப்புகளை 
 வைத்துக்கொண்டு
சாதி கூட்டங்களை நடத்திக்கொண்டு
வருவது சற்று நெருடலாகத்தான்
உள்ளது.
 
 சாதி என்ற பெயரால் ஏற்றத்தாழ்வு
 அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்படுகிறது.
 அது முற்றிலும் களையப்பட வேண்டும்
 என்றால் சமூக நீதியை நோக்கியே
 நம் பயணம் இருக்க வேண்டும.
 
இப்போது ஔவை சாதியைப் பற்றி
என்ன கூறுகிறார் என்று கேளுங்கள்.

"சாதி இரண்டொழிய வேறில்லை
சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின்-மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார்
இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ளபடி"

என்கிறார் ஔவை.

உலகில் எத்தனை சாதி உண்டு
என்று கேட்டால் இரண்டே சாதிதான்
உண்டு.
ஒன்று ஆண்சாதி.
இன்னொன்று பெண்சாதி என்று
சிலர் பெருமையாகச் பேசுவர்.

ஆண்,பெண் என்பது சாதி அல்ல.
அது இனம்.

ஆனால் ஔவையாரும் சாதி
இரண்டுதான் என்கிறார்.
அவர் ஆண் ,பெண் என்று
சொல்லி விளையாட்டு பண்ணிக்கொண்டு
கடந்து போகவில்லை.

அறநூல்களில் உள்ளபடி
பார்ப்போமானால் சாதி
இரண்டு மட்டுமே உண்டு.
ஒன்று பிறருக்கு கொடுத்து
உதவும் பண்பு கொண்ட
உயர் குலத்தவர்.
 மற்றது பிறருக்கு
கொடுக்கும் பண்பு இல்லாத
இழிகுலத்தவர் .

கொடுக்கும் பண்பு தான்
ஒருவரை மேலோர்  ,கீழோர் என்று
பகுத்து வைக்கும்.
மற்றபடி சாதி என்று  ஒன்று இல்லை
என்பது ஔவையின் கருத்து.

பாரதியாருக்கும் சாதியப் பாகுபாட்டில்
உடன்பாடில்லை.
அதனால்தான்,

"சாதிகள் இல்லையடி பாப்பா"
என்று பாப்பாவிற்குச்  சொல்லித்
தந்தவர் "குல தாழ்ச்சி உயர்ச்சி
சொல்லல் பாவம்"
என்று சொல்லி,
சாதி உயர்வு தாழ்வு கற்பித்தல்
ஒரு பாவம் என்றே பதிவு
செய்கிருக்கிறார். 

"சாதி இரண்டொழிய
வேறில்லை என்றே
தமிழ்மகள் சொல்லிய சொல்
அமிழ்தம் "
என்று ஔவை சொன்ன
கருத்தில் நானும் உடன்படுகிறேன்
என்று உறுதிபடுத்தியுள்ளார்
 பாரதி.


சாதி இரண்டொழிய வேறில்லை
என்பது ஔவையின் கருத்து 
மட்டுமல்ல  நம் அனைவரின்
கருத்தாகவும்  இருக்க வேண்டும்.
அப்போதுதான் உயர்வுதாழ்வு பார்க்காத
ஒரு சமூகம் உருவாகும்.


சாதி இரண்டொழிய வேறில்லை
என்பதை ஒரு விழுமியமாகவே
கற்பிப்போம்.
நாளைய தலைமுறை நல்லிணக்கமாக வாழ
பாதையமைத்துக் கொடுப்போம்.

.

Comments