நிற்பதுவே நடப்பதுவே....

நிற்பதுவே நடப்பதுவே....


உலகில் இருப்பவை யாவும்
பொய்யா? மெய்யா?
எது உண்மை?
எது பொய்?
இருக்கிறது ஆனால் இல்லை.
இப்படி ஒரு குழப்பமான
கேள்விகள்
நம் அனைவர் மனதிலும்
அவ்வப்போது வந்து போகும்.
அதற்கு விடை தெரியாது
அப்படியே கடந்து வந்திருப்போம்.

அப்படி ஒரு கேள்வி
பாரதியின் மனதிற்குள் எழ
தன் உள்ளத்தில் தோன்றியதை
உலகை நோக்கி வினவுகிறார் பாரதி.
அவரே கேள்வி கேட்டு
முடிவுரையாகப் பதிலையும்
தந்து இப்படித்தான் உலகம்
இருக்குமோ என்று நம்மையும்
சிந்திக்க வைத்திருக்கிறார்.

பாரதி" உலகத்தை நோக்கி
வினவுதல்" என்ற தலைப்பில் எழுதிய
அந்தப் பாடல் உங்களுக்காக...

நிற்பதுவே நடப்பதுவே
பறப்பதுவே
நீங்களெல்லாம்
சொற்பனந் தானா?
பல தோற்ற
மயக்கங்களோ?

கற்பதுவே
கேட்பதுவே
கருதுவதே
நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ?
உம்மில்
ஆழ்ந்த
பொருளில்லையோ?

வானகமே
இளவெயிலே
மரச்செறிவே
நீங்களெல்லாம்
கானலின் நீரோ?
வெறுங்
காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம்
கனவினைப்போற்
புதைந்தழிந்ததே
போனதால்

நானுமோர் கனவோ?-
இந்த
ஞாலமும் பொய்தானோ?

காலமென்றே
ஒரு நினைவும்
காட்சியென்றே
பலநினைவும்
கோலமும் பொய்களோ?
அங்குக்
குணங்களும் பொய்களோ?
சோலையில் மரங்களெல்லாம்
தோன்றுவதோர்
விதையிலென்றால்
சோலை பொய்யாமோ?
இதைச் சொல்லோடு
சேர்ப்பாரோ?

காண்பதெல்லாம்
மறையுமென்றால்
மறைந்ததெல்லாம்
காண்பமன்றோ?
வீண்படு பொய்யிலே

நித்தம்
விதி தொடர்ந்திடுமோ?
காண்பதுவே உறுதி காணோம்
காண்பதெல்லாம்
இறுதியில்லை
காண்பது சக்தியாம்-இந்தக்
காட்சி நித்தியமாம்
             -பாரதியார்

             -
நிலையாய் நிற்கும் தன்மை கொண்டவை
மரங்களும் மலைகளும் செடிகொடிகளுமாகும்.
நடப்பவை விலங்கு வகைகள்.
பறப்பவை பறவை இனங்கள்.

இந்த நிற்பவற்றையும் நடப்பவற்றையும் 
பறப்பவனவற்றையும் பார்த்து
தனது முதல் கேள்வியைத் கேட்கிறார்
பாரதி.

நிற்பதுவே,
நடப்பதுவே,
பறப்பதுவே
உங்களை நான் நாளும்
பார்த்துக்கொண்டு
இருக்கிறேன்.
இவை நனவா? இல்லை
என் கனவில் வந்த அழகிய
காட்சிகளா? அல்லது
இல்லாத ஒன்று இருப்பதுபோல்
தோன்றுமே அப்படிப்பட்ட
கானல் நீர் போன்ற
தோற்ற மயக்கமா?

நாம் நாளும் எத்தனையோ
காட்சிகளைப் பார்க்கிறோம்.
அவற்றிலிருந்து எத்தனையோ கருத்துகளைக்
கற்றுக் கொள்கிறோம். கற்றவற்றிலிருந்து
சில முடிவான கருத்துகளை
நம் மனதுக்கு ஏற்புடையவற்றை
செயல்படுத்திக்கொண்டு
போய்க்கொண்டே இருக்கிறோம்.
இப்படி நாம்
நாள்தோறும் இதுதான் உண்மை
என்று செய்து கொண்டிருப்பவை
யாவும்
மாயை தானோ?
இவற்றால் நமக்கு எந்தப்
பயனும் இல்லையோ?

அதிகாலைப் பொழுது,
மத்தியான வேளை,
பொன்மாலைப்பொழுது
என்று வானம் மாறிமாறி
வண்ணஜாலம் காட்டி நம்மை
ஆனந்தமடையச்
செய்யும்.
உள்ளம் அவற்றைக் கண்டு
உற்சாகக் கும்மாளமிடும்.
துள்ளித் குதித்து
ஆனந்த கூத்தாட வைக்கும்.
இவையும் ஒரு காட்சிப்
பிழைதானா?
கானல் நீர்தானா?

சான்றோர்கள், பேரறிஞர்கள்,
வீரர்கள்,மன்னர்கள்
என்று உலகுக்கு செயற்கரிய
செய்தவர்கள் பலர்
இவ்வுலகில் வாழ்ந்தனர்.
அவர்கள் இன்று நம்மோடு இல்லை.
அவர்களின் செயல்கள் எல்லாம்
முடிந்து போன ஒரு கனவாகிப்
போனது.

அவர்களைப்போன்று நானும்
கனவாகி ஒன்றுமில்லாமல்
போய்விடுவேனோ?
இந்த உலகமே பொய்தானோ?

காலம்,காட்சி,
அதன் நினைவு
யாவும் பொய்யாகுமோ?
அதன் குணங்களும் பொய்களோ?
ஒரு விதையில்தான்
சோலை உருவாகிறது.
சோலை எப்படி பொய்யாகும்?
அதனையும் பொய் என்ற
சொல்லோடு சேர்த்தனரோ?

காண்பதெல்லாம் மறையும்
என்றால் மறைந்தவற்றைக்
காணும் காலமும் வருமல்லவா!
காண்பதில் உறுதியும் இல்லை
இறுதியும் இல்லை.

என்று சொல்லி முடிக்கிறார்
பாரதி.

நேற்று இருந்தது
இன்று இல்லை.
இன்று இருப்பது
நாளை இருக்குமா
இருக்காதா இப்படி
ஒரு உறுதித் தன்மை இல்லாத
நிலையிலேயே உலகம்
இயங்கிக் கொண்டிருக்கிறது.

நிற்பவை எதுவும்
நிலையாக இருக்கும்
என்று சொல்வதற்கில்லை.
நாம் நிலைத்திருக்கும் என்று
நினைத்திருந்தவை எல்லாம்
என்றும் நிரந்தரமாக  இருக்குமா
என்பதும் கேள்விக்குறிதான்.

ஆனால் உலகம் பொய்யில்லை
என்பதுதான் உண்மை.

அருமையான பாடல்.நம் மனதிலும்
சில நேரங்களில் இப்படிப்பட்ட
கருத்துகள் எழுவதுண்டு.

முடிவு அவரவர் மனதிற்கு ஏற்ப
...மனநிலைக்கு ஏற்ப....
சூழ்நிலைக்கு ஏற்ப
மாறுபடலாம். வேறுபடலாம்.
ஆனால் அனைவரின் சிந்தனையையும்
தூண்டும் அருமையான பாடல்
என்பதில் யாருக்கும்
மாற்றுக்கருத்து  இருக்க முடியாது.



Comments

Popular Posts