தொல்காப்பியர் பார்வையில் புல்

தொல்காப்பியர் பார்வையில் புல்


புல் என்றதுமே அறுகம்புல் ,கோரைப்புல்
என்று வயலோரமாகவும் ஆற்றோரமாகவும்
நீர்நிலைகள் அருகிலும்
குத்துக் குத்தாக வளர்ந்திருக்கும்
சிறிய செடிகள்தான் நினைவுக்கு வரும்.

இவைதான் புற்கள் என்பது நமக்குத் தெரியும்.
தென்னைமரமும் பனைமரமும் புல்
என்றால் மனம் ஒத்துக்கொள்ள மறுக்கும்.
ஆனால் தென்னை மரமும் பனைமரமும்
புல் என்கிறார் தொல்காப்பியர்.

யாரு தொல்காப்பியரா?
தொல்காப்பியர் சொன்னால் 
உண்மை இருக்கத்தான்
செய்யும் என்பீர்கள்.

தொல்காப்பியர் தென்னை பனை எல்லாம்
புல் என்பதற்கு அவர்கூறும் காரணம்
நம்மை அசர வைக்கிறது
ஆச்சரியப்பட வைக்கிறது.
தொல்காப்பியரின்
தாவரவியல் புலமையை எண்ணி
வியக்க வைக்கிறது

அப்படி என்ன ஆச்சரியப்படும்படி
சொல்லிவிட்டார் என்கிறீர்களா?

மரத்தின் தண்டுப்பகுதி இருக்கிறதல்லவா?
அது கூடுபோல சத்து இல்லாமல்
இருக்கும் மரங்களைப் பார்த்திருப்பீர்கள்.
தென்னை, பனை மரங்களை
வெட்டும்போது உள்ளே சோறு 
போன்ற பகுதி இருக்கும் .
அப்படிப்பட்ட மரங்கள் எல்லாம்
புல் வகையைச் சார்ந்தனவாம்.

அப்படியானால் தென்னை ,பனை மரங்கள் 
எல்லாம்
புல்லா ?என்று கேட்பீர்கள்.
நான்சொல்வதைவிட
தொல்காப்பியரிடமே கேட்டு
தெரிந்து கொள்வோமே!

"புல்லும் மரனும் ஓரறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே!"

என்கிறார் தொல்காப்பியர்.

புல்லும் மரமும் ஓரறிவு கொண்ட
உயிர்களாம்.

ஓரறிவு என்பதை எப்படித் கண்டுபிடிப்பது
என்ற கேள்வி எழலாம்.

தொடு உணர்ச்சி கொண்டவை ஓரறிவு
உயிர்கள் என்று அதற்கும் விளக்கம்
தருகிறார் தொல்காப்பியர்.


இப்போது புல்லுக்கும் மரத்திற்கும்
உள்ள வேறுபாடு என்ன என்பதைக் 
கூறுகிறார்
கேளுங்கள்.

"புறக் காழனவே புல்லெனப்  படுமே
அகக் காழனவே மரமெனப் படுமே"

என்கிறார்.

அது என்ன புறக்காழனவே
அகக்காழனவே?

அதாவது வைரம் பாய்ந்த தண்டுப்
பகுதியைக்
கொண்டவை  மரங்கள். அதனைத்தான்
அகக்காழனவே என்கிறார்.
அவைதான் மரங்கள்.

வெளிப்புறம் உறுதியாகவும்
உள்ளே உறுதியற்ற தன்மையும்
கொண்டவை புல் வகைகளாகும்.
அதனைத்தான் புறக்காழனவே
என்கிறார் தொல்காப்பியர்.

அதோடு நம்மை விட்டுவிடவில்லை.

"தோடே மடலே ஓலை என்றா
ஏடே இதலே பாளை என்றா
ஈர்க்கு குலையே நேர்ந்தன பிறவும்
புல்லொடு வருமெனச் சொல்லினர் புலவர்"

என்று புல் எப்படி இருக்கும்
என்பதை
விளக்கமாகக் கூறியுள்ளார்.

தோடு ,மடல் ,ஓலை,ஏடு,
இதழ்,பாளை,ஈர்க்கு,
குலை ஆகியவற்றை உடையவை
புல் எனப்படும்.

வாழை மரம்
பனை மரம்
தென்னை மரம்
ஈச்சம் மரம்
இவை எல்லாம் மரமில்லை என்கிறார்
தொல்காப்பியர்.

தாமரை, கழுநீர் போன்ற தாவரங்களும்
புல் வகையைச் சார்ந்ததாம்.

இப்படிப் புல்லைத் தனியாக
வகைப்படுத்திக் சொன்ன
தொல்காப்பியர் ,
மரத்திற்கும் புல்லுக்கும் பொதுவான
 உறுப்புகளும் உண்டு என்கிறார்.

"காயே பழமே தோலே செதிளே
வீழோ டென்றாங் கவையும் அன்ன"

அதாவது
காய்,பழம்,தோல்
செதில்,விழுது ஆகியவை
புல்லுக்கும் மரத்திற்கும்
பொதுவானவையாம்.


நினைவில் கொள்க

தண்டின் உட்பகுதி உறுதித்தன்மை
கொண்டிருப்பது மரம்.

தண்டின் உட்பகுதி உறுதித்தன்மை
இல்லாதிருப்பது புல்.
Comments