வல்லணங்கு

வல்லணங்கு
அவளுக்கும் எனக்கும் அப்படி என்னதான்
இருக்கிறது?
ஏனிந்த கண்ணாம்மூச்சு விளையாட்டு.?


என்ன நடக்கிறது?
ஒன்றுமே புரியவில்லை.
யாரிடம் போய் கேட்பது?
என்ன கேட்பது?

சே...சே....யாராவது தப்பாக நினைத்து விட்டால்.....
அதற்காக?
மனசுக்குள்ளே  வைத்துப்
பூட்டி வைக்கப் போகிறாயா?

நீ மூடி மறைத்தால்....
யாருக்கும் தெரியாமல் போய்விடுமா?

தெரிகிற காலத்தில் தெரிந்துவிட்டுப்
போகட்டும் என்று சாதாரணமாக 
விட்டுவிடுகிற
காரியமா இது?

நீரு பூத்த நெருப்புபோல
உள்ளுக்குள்ளேயே வைத்து
எத்தனை நாள் கனன்று கொண்டிருப்பது?

விடை தேட முடியாமலும் 
விடை கேட்க முடியாமலும் 
ஆண்டுகள் பல உருண்டோடி விட்டன.
இதற்கிடையில் அங்கொன்றும்
இங்கொன்றுமாக எத்தனையோ நிகழ்வுகள்!

அவை எல்லாம் நடந்து முடிந்த
சிறிது காலத்தில் துடைத்துப் போட்ட
வானமாக 
மனம் ஒன்றுமில்லாமல் ஆனது.

 அப்படியே போயிருக்கலாமே?
இடையில் ஏன் இந்த இணக்கும் பிணக்கும்.?

இணக்கம் இல்லாது
ஓடிய நாட்கள் இனிமையாக இருந்தன
யாரைப் பற்றிய சிந்தனையும் இல்லை.

ஆனால் இடையில் இந்த ஒட்டு
வேண்டும் என்று யார் அழுதது?
விதி செய்த சதியா?
சதிகாரர்கள் பின்னிய பாச வலையா?
இல்லை ...இல்லை மோசக்கரர்களின்
சதி வலை.
வேறென்ன சொல்ல முடியும்?
நெடுநெடு என்று வளர்ந்ததுதான்
மிச்சம்.
துரோகிகளை அடையாளம்
காணும் விவேகம் இல்லை.
எந்தனை முறை தொழுத கையுள்ளும்
படை இருக்கும் என்று படித்திருக்கிறேன்.

வெளியிலிருந்து வரும் பகையைவகட
உள்பதை பொல்லாதது. அழிக்காமல்
விடாது என்று படித்திருக்கிறேன்.

ஆனால் கடைசிவரை ஒதுங்கி 
இருந்திருக்க வேண்டும் என்ற
விழிப்புணர்வு ஏன் இல்லாமல்
போனது.

இப்போது சிக்கலில் மாட்டிவிட்டு
சிரிப்பது தானே அவர்கள் தொழில்.

இப்போது நிகழ்ந்ததை ஜீரணிக்க
முடியாமல் தவிக்கிறேன்.

அந்த நிகழ்வு அப்பப்போ வந்து கார்மேகம்
சூழ்ந்து வானத்தைக் கலங்கடிப்பதுபோல
கலங்கடித்து.....

போனால் போகட்டும் என்று 
விடுவிட முடியாமல்
மொத்தமாக மறந்தும் போக முடியாமல்....

எத்தனை காலத்திற்குத்தான்
இதை மனதிலேயே சுமந்து கொண்டிருப்பாய்?

எவ்வளவோ கடந்து வந்துவிட்டாய்...
அந்தச் சுமையை மட்டும் கட்டிக்கொண்டு 
திரிவதில் என்ன சுகம் கண்டாய்?

மனசு இடையிடையே 
நான் மாட்டேன்.... நான் மாட்டேன்
என்று என்னிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு
ஒரு பத்து நாள் எந்த நினைப்பும்
இல்லாமல்  இருக்கும்.

அதற்குள் அவள்  நினைவு.
பழையவற்றை நினைவுபடுத்தி 
விளையாட்டுக்காட்ட...

அன்று முழுவதும் தூக்கமில்லாமல்.....
ஒருவித துக்கஉணர்வு தொண்டையை 
அடைக்க...

நெஞ்சுக்குழிக்குள் ஏதோ ஒன்று
உருள.....
வயிற்றுக்குள் என்னமோ
பிசைவது போல இருக்கும்.
இயல்பாக இருக்க முடியாமல்
எந்த வேலையும் செய்ய முடியாமல்....
வியர்த்து விறுவிறுத்துக்கொண்டு வரும்.
பேச முடியாது...யாரிடமும் பேச
மனமும் வராது.

உள்ளுக்குள்ளேயே 
குமுறி....குமுறி அழும்.
இந்தக் குமுறலுக்குப் பின்னணி 
என்ன என்பதுகூட
தெரியாமல் ....அந்த மனநிலையை 
வெளிப்படுத்தவும்
வடிகாலில்லாமல் அடக்கி அடக்கி வைத்து
இறுதியாக ஒரு மன நோய்க்குக்
தள்ளப்படுவேனோ என்ற அச்சம்
மெதுவாக எட்டிப் பார்த்து கேள்வி
கேட்க ஆரம்பித்தது.

மாறு அல்லது மாற்று.
இதில் எது உனக்கு சாத்தியமோ அதைச்
செய்துகொண்டு போய்க்கொண்டே இரு
என்றது மனம்.
யாரையும் மாற்றும் அளவுக்குக்கோ
கேள்வி கேட்கும் அளவுக்கோ
திராணி இல்லை.
அப்படியானால் நான்தான் மாறியே
ஆக வேண்டும்.
எப்படி மாறுவது?
ஒன்றுமே புரியவில்லை.

இது போன்ற மனநிலையில்
எத்தனை நாள்தான் வாழ்வது?

எவளோ ஒருத்திக்காக 
நான் அன்றாடம் நொந்து 
போக வேண்டிய சூழல்
வந்தது எப்படி?

பிறரைப் சார்ந்து வாழும் காலத்தில்
நிறைய அடி வாங்க 
வேண்டியிருந்திருக்கும்.

அப்படி வந்து விழுந்த அடிதான் இது.

வெறும் அடி என்றால் காலம் துடைத்துப்
போட்டுவிடும்.
இது காலத்தையே புரட்டிப்
போட்ட அடியாயிற்றே....
எப்படி மறக்க முடியும்?

மறந்துவிடு மறந்துவிடு...
அடுத்தவர்களுக்கு அறிவுரை
செய்யலாம்.
தலைவலியும் காய்ச்சலும்
தனக்கு வந்தால்தான் தெரியும்..

அதனால் வரும் வலியும்
வேதனையும் காலத்திற்கும்
தொடரும்போதுதான் 
மறக்கவும் முடியாமலும்
மறைக்கவும் முடியாமல்
படும் அவஸ்தை அப்பப்பா....
எங்கே போய் முறையிடுவது
யாரிடம் போய் ஆறுதல் தேடுவது? 

எல்லாவற்றையும் விட்டு விலகி வாழ
வேண்டுமானால் நாம் நம்மை மாற்றித்தான்
ஆக வேண்டும்.

பிற செயல்களில் நம்மை ஈடுபடுத்திக்
கொள்ளும் போதுதான் பழைய
கடினமான நினைவுகளிலிருந்து நம்மை
விடுவித்துக் கெள்ள முடியும்.

சொல்லி மாளாது...சொல்லவும் முடியாது.
யாருக்குமே இந்த நிலைமை
வரக்கூடாதுங்க....
நினைவு என்ற ஒன்றை இறைவன்
ஏன் படைத்தான்.?
என் நிம்மதியை ஏன் பறித்தான்?

உள்ளுக்குள்ளேயே புழுங்கி....புழுங்கி
புலம்பி...புலம்பி...
எங்காவது காட்டில் போய் தனியாக
உட்கார்ந்து வாய்விட்டுஅழணும்போல் 
தோன்றும்
அப்படி என்ன தவறு
செய்துவிட்டேன்?

இவை எல்லாவற்றுக்கும் காரணம்
அவள் மட்டும்தானா.....?
இல்லை அவளோடு சேர்ந்தவர்களும் தான்
காரணம் என்று மனம் சொன்னாலும்....
முழுதாக அப்படி ஒப்புதல் வாக்குமூலம் 
கொடுத்துவிட்டு ஒதுக்கிவிட முடியவில்லை.
நானும்தான் காரணமாக 
இருப்பேனோ?

மறுபடியும் மறுபடியும் புறப்படும்
இடத்திலேயே வந்து நிற்கும் பேருந்துபோல....
மனமும் அங்கேயும் இங்கேயும் சுற்றி
பழைய இடத்திலேயே வந்து நின்றது.

சுற்றிச் சுற்றி வரும் செக்கு மாடு போல
அவளைச் சுற்றி சுற்றியே
நின்று......அப்பப்பா....

இதற்கு மருந்துதான் என்ன? 

காயப்பட்ட இடம் எது என்று வெளிப்படையாக
தெரிந்தால் தானே மருந்து பூசி 
காயத்தை ஆற்ற
முடியும்?

காயப்பட்ட இடம் வெளியில் தெரியாத போது....
எங்கே கொண்டு மருந்தைப் தடவுவது?

மருந்தாக என்னத்தைக் தடவுவது.?
அப்படியானால்....அப்படியானால்....
என் பக்க நியாயதைச்
 சொல்ல முடியாமலேயே 
போய் விட்டதே!

கிடைக்கும் சந்தர்ப்பங்களில் வாயை மூடி
சும்மா இருந்துவிட்டு இப்போ லபோ
லபோ என்று
அடித்துக் கொள்வதால்  உன் பக்க
நியாயம்
தெரிந்துவிடுடப் போகிறதா என்ன?
மனம் கொட்டி கொட்டி என்னை
 மேலும் ரணமாக்கியது.


யாருக்கு வேணும் உன் நியாயம்?
நீ குற்றவாளி...
நீ குற்றவாளி.என்று 
தீர்ப்பு எழுதி பல காலம் ஆகிவிட்டது.
தீர்ப்புகள் திருத்தப்பட மாட்டாது.


உன்னை
எல்லோரும் நம்பணுமே....
எல்லோருக்கும் நம்பிக்கை கொடுக்கிற
 இடத்தில் நீ இருக்கிறாயா?
 
நம்பிக்கை கொடுக்கும் இடத்தில் இருக்க
வேண்டும். இல்லை என்றால் ....

இறுதி யாத்திரை வரை இதே
புலம்பல் தான் தொடரும்.

புரிகிறது...வாழ்க்கையில்
 நல்லூழ் இருந்தால்
இப்படிப் புலம்பல் தேவை இருந்திருக்காதே!

கழுதையா இருந்தாலும் கால்காசு 
யோகத்தோடு பிறக்கணும்
என்பார்கள்.
இந்தக் கழுதைக்குக் கால் காசு என்ன 
அரைக்கால்
காசுக்குக்கூட யோகம் கிடையாது.
விறகு வெட்ட போனால் கொடி கிடைக்காது.
உப்பு விற்றுப் போனால் மழைவந்து
நிற்கும்.
பஞ்சு விற்கப்போனால் காற்று வந்து
மொத்த பஞ்சினையும் அள்ளி விட்டுப் போய்விடும்.

முடிவுதான் என்ன? 
ஆரம்பித்து வைத்தவன் முடித்து
வைத்தால்தான் முடிவு ஏற்படும்.

காலம் இத்தோடு முடிந்து போகப்
போகிறதா என்ன?

என்ன இது?

இவ்வளவு நேரமும் அவளைப்
பற்றிய புலம்பலா?

அவள்.....என்ற நினைப்பே இல்லாமல்
இருக்க நினைத்தேன்.

காலம் செய்த சதி
மறுபடியும் மறுபடியும் அவள் நினைப்பில்
மாட்டிக்கொண்டு விழிபிதுங்கி
நிற்கிறேன்.

யாரவள்?   என்னைக் கொல்லாமல்
கொல்லும்  அந்த வல்லணங்கு யாரவள்?



Comments

Popular Posts