சங்க இலக்கியத்தில் நகைச்சுவை


சங்க இலக்கியத்தில் நகைச்சுவை

நகைச்சுவையை விரும்பாதவர் எவரும்
இருக்க முடியாது.

நகைச்சுவை உணர்வு உள்ள 
ஒருவரால் மட்டுமே 
தான் இருக்கும் இடத்தை மகிழ்ச்சியாக
வைத்துக்கொள்ள முடியும்.

"நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்"
என்பார் வள்ளுவர்.

நகைச்சுவை உணர்வு இல்லாதவர்க்கு
இவ்வுலகம் பகலும் இரவுபோல்தான்
ஒளியற்றதாக இருக்கும் .அதாவது அவர்கள்
வாழ்க்கையில் ஒருநாளும்  மகிழ்ச்சி இருக்காதாம்.

நகைச்சுவை உணர்வு இல்லாதது அவ்வளவு
கொடுமையானதா?

நகைச்சுவைக்கு நம் வாழ்வையே புரட்டிப்
போடும் வல்லமை உண்டு.

காந்தியடிகள் சிறந்த நகைச்சுவை
உணர்வு கொண்டவர்.
அதனால்தான்" நகைச்சுவை உணர்வு
மட்டும் எனக்குள் இல்லை என்றால்
எப்பொழுதோ நான் 
என் வாழ்க்கையை இழந்திருப்பேன்"
என்று கடினமான தருணங்களைக்
கடக்க உதவியது தன்னில்
இருக்கும் நகைச்சுவை உணர்வுதான்
என்று பதிவு செய்திருப்பார் காந்தியடிகள்.

நகைச்சுவை உணர்வு உள்ளவர்களால்
மட்டுமே கடினமான சூழல்களையும்
எளிதாகக் கடந்து போகமுடியும் என்பதற்கு
இது நல்லதொரு எடுத்துக்காட்டு.

திரைப்படங்களில் வரும்
நகைச்சுவை காட்சிகளுக்காகவே
படம் பார்ப்பவர்கள் உண்டு.

 பட்டிமன்றங்களுக்குள்
நம்மைக் கட்டிப் போடுபவர்கள்
பெரும்பாலும் நகைச்சுவை
பேச்சாளர்களாகவே இருக்கும்.


இலக்கிங்களிலும் நல்ல நகைச்சுவை
காட்சிகளைத் தந்து நம்மை
மகிழ்ச்சிப்படுத்திய புலவர்கள் பலர் 
உண்டு.
 அப்படி ஒரு அழகிய 
நகைச்சுவை காட்சியை
அரங்கேற்றி நற்றிணைப்
பக்கம் நம்மைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் ஒரு புலவர்.


அகத்திணைப் பாடல்தான்.
அந்தப் பாடலையும் நகைச்சுவை 
கலந்து தந்தப் பெருமை
அம்மூவனார் என்ற புலவருக்கு உண்டு.

அவர் எழுதிய அந்தப் பாடல் உங்களுக்காக.

பொங்கு திரைபொருத வார்மணல் அடைக்கரைப்

புன்கால் நாவல் பொதிப்புற இருங்கனி

கிளைசெத்து மொய்த்த தும்பி  பழஞ்செத்துப்

பல்கா லலவன் கொண்ட கோட் கூர்ந்து

கொள்ளா நரம்பின்  இமிரும் பூசல்

இரைதேர் நரை யெய்தி விடுக்குந்

துறைகெழு மாந்தை அன்ன இவள்நலம்

பண்டும் இற்றே கண்டிசின் தெய்ய

உழையிற் போகா தளிப்பினும் சிறிய

ஞெகிழ்ந்த கவின் நலம்கொல்லோ மகிழ்ந்தோர்

கட்களி செருக்கத் தன்ன
 
காமம்கொல்லிவள் கண்பசந் ததுவே!
                    -  நற்றிணை
                       பாடல் எண்-.  35

பாடல் விளக்கம்


கடலலையானது பொங்கும் நுரையை அள்ளி வந்து
கடற்கரையில் உள்ள
நாவல் மரத்தில் முட்டி,
மோதி விளையாடுகிறது.
நாவல் மரத்தில் பழுத்துக் கிடக்கும்
நாவல் பழங்கள் காம்பு இற்று
இருப்பதால் கீழே விழுகின்றன.
கீழே விழுந்த நாவற்பழங்கள்
 மரத்தைச் சுற்றி கருநிற
வண்டுகள் போலக் காட்சி   தருகின்றன.

நாவற்பழங்களைப் பார்த்த வண்டுகள்
நம்முடைய இனமான வண்டுகள்தான்
கீழே கிடக்கின்றன என்று மயங்கி
நாவற்பழங்களின்மேல் மொய்த்துக் கிடக்கின்றன.

அந்த வேளையில் அந்தப் பக்கமாக 
நண்டு ஒன்று வருகிறது.

நண்டின் கண்களுக்கு  வண்டும் நாவற்பழம் போலவே தெரிகின்றது.
உடனே நண்டு நாவற்பழத்தைக் கவ்வ...
நண்டின் பிடியில் அகப்பட்ட
வண்டு விடுபட
முடியாமல் திணற...
அந்தத் திணறலில்
ரீ...ரீயென்ற வண்டின் இசை காற்றோடு கலந்து
எங்கும் கேட்டுக் கொண்டிருக்கிறது.

இது என்ன  கூச்சலா?
இல்லை இசையா?
அல்லதுயாரேனும் சிக்கலில் மாட்டிக் கொண்டு குரல் கொடுக்கின்றனரா?
அல்லது வேறு ஏதுமா?
அறிந்து வர வேண்டும் என்ற
ஆவலில் நாரை 
ஒன்று அந்தப் பக்கம் வந்து
எட்டிப் பார்க்கிறது. 

வண்டைப்  பிடித்துக் கொண்டிருந்த
நண்டின் கண்கள் இப்போது நாரையைப் பார்த்துவிடுகிறது.
அவ்வளவுதான்....நண்டு
தப்பித்தோம் பிழைத்தோம் என்று
வண்டை விட்டுவிட்டு ஓடிச்சென்று
வளைக்குள் மறைந்து போகிறது.

கேட்கும் போதே சிரிப்பு
வருகிறதல்லவா!

கடல் .கடற்கரையைச் சுற்றி
நிற்கும் மரங்கள்.
அவற்றைச் சுற்றி, சிந்திச் சிதறிக் 
கிடக்கும் பழங்கள்.
பழங்களைத் தின்ன வரும் வண்டுகள்.
வண்டுகளை கல்விச் செல்ல
காத்திருக்கும் நண்டுகள்.
நண்டுகளைக் கொத்திச் செல்ல
சுற்றித் திரியும் நாரைகள்.
என்று அன்றாட கடற்கரை 
நிகழ்வை 
அழகிய காட்சி அமைப்பாக
அதுவும் நகைச்சுவைபட நம்
கண்முன் கொண்டுவந்து நிறுத்தியுள்ளார்
மூவனார்.

மயக்கமும் மருட்சியும்
கலந்த ஒரு திகிலான காட்சி.

அதனை நகைச்சுவைபட
சொல்லிய பாங்கு ....
காட்சியையும் கதாப்பாத்திரங்களையும் மறுபடியும் மறுபடியும்
நம் கண்முன் கொண்டு வந்து
நிறுத்தி,
உள்ளி உள்ளி நகைக்க
வைத்திருக்கிறது.







Comments

Popular Posts