போராட்டம் இல்லாமல் வெற்றி இல்லை

போராட்டம் இல்லாமல் வெற்றி இல்லை


வெகுநேரமாக தரையையே பார்த்துக்
கொண்டிருந்தேன்.
என்ன இது சற்று புடைத்துக்கொண்டு...
வெகுநேரம் வரை எனது கண்கள் வேறு எங்கும்
நகர வில்லை. ஒருவேளை ஏதாவது
புழுவாக இருக்குமோ?
மறுநாளும் அதே இடத்தில் வந்து
உட்கார்ந்தேன்
மண் இன்னும் கொஞ்சம் புடைத்திருந்தது.
பக்கவாட்டு மண் சற்று விலகி
காற்றுக்கு இடம் கொடுத்துக் கொண்டிருந்தது.
ஏதோ ஒரு போராட்டம் நடக்கிறது.
ஒரே நாளில் மண்ணை முழுவதும்
அப்புறப்படுத்த முடியவில்லை என்று தெரிந்தது.
சற்று மண்ணை விலக்கிப் பார்ப்போமா என்ற எண்ணம்.
வேண்டாம் எதுவாக இருந்தாலும்
தானாகப் போராடி வெளியே வரட்டும்.
அதனை அதன் போக்கிலேயே விட்டுவிடு.
மனம் தடுத்தது.

மறுநாள் மெதுவாக  தளிர் 
தலைதூக்கி எட்டிப்பார்த்தது.
அதன் தண்டு கூனிக்குறுகி வளைந்து
நெளிந்து  நிமிர முடியாமல் 
போராடிக் கொண்டிருந்தது.
ஓரிரு நாட்களில் தண்டின் போராட்டம்
முடிந்து  கம்பீரமாக இரண்டு 
இலைகளைக் தாங்கி நான் ஜெயிச்சுட்டேன்
என்று சொல்லுவது போல்
மலர்ச்சி தந்தது.
 
விதையின் போராட்டம் செடியாக
வெளிவந்திருக்கிறது.
இதுவரை தான் போராட்டம்..
அப்பாடா...என்று நிம்மதியாக
இருந்து விடுமா?

காற்றிலும் மழையிலும் போராடி தனக்கென
ஓர் இடத்தைத் தக்க வைத்தால்தான்
மரமாக உயர்ந்து நிற்க முடியும்.


விதை செடியாக வளர 
நடத்தும் ஒரு போராட்டம்
செடி நிலையாக நிற்க காற்றோடும்
மழையோடு நடத்துவது ஒரு போராட்டம்.
பூ மலர வேண்டும் என்றால் 
இதழ்களோடு நடத்த வேண்டும்
ஒரு போராட்டம்

நதி ஓட வேண்டுமென்றால் கல்லோடும்
மண்ணோடும் மரங்களின் வேர்களோடும்
நடத்த வேண்டும் ஒரு போராட்டம்.

ஒரு சிறிய கோழி குஞ்சு உலகை
எட்டிப் பார்க்க வேண்டும் என்றாலும்
முட்டையின் ஓட்டோடு நடத்த வேண்டும்
ஒரு போராட்டம்.
மீன்கள் உயிர்வாழ அலைகளோடு 
நடத்த வேண்டும் ஒரு  போராட்டம்.


இப்படி உயிர்களின் வாழ்க்கை எல்லாமே 
ஒரு போராட்டத்தோடுதான்
தொடங்குகிறது.தொடர்ந்து போராடிக்கொண்டும்
இருக்கிறது.

மனிதன் மட்டும் இதற்கு
விதிவிலக்காக இருக்க முடியுமா என்ன?
 .
எந்த ஒரு வெற்றியும் சும்மா
இருந்தால் கிடைத்துவிடப் போவதில்லை.


ஒவ்வொரு வெற்றியாளனுடைய
வாழ்க்கைக்குப் பின்னாலும் ஒரு 
போராட்டக் குணம் இருந்திருக்கும்.

 தனது போராட்டக் குணத்தால் 
போராடிப்போராடி
 எவ்வி எவ்வி.... முட்டிமோதி
 மேலெழும்பும்போதுதான்
வெற்றியாளர் என்ற அங்கீகாரம் கிடைக்கும்.

யாராக இருந்தாலும் முதல் முயற்சியிலேயே நான்
வெற்றி பெற்று விட்டேன்
என்று சொல்லிவிட முடியாது.

எத்தனையோ முறை முயற்சி செய்து
தோல்வி அடைந்தாலும் துவண்டு போகாமல்
மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்தபோது தான்
ஒரு சிலந்தியால்கூட தன் வலையைக்
கட்ட முடிகிறது.

போராடி வெற்றிபெற்று விட்டேன்
என்று வலையின் மீது அமர்ந்து
 சிலந்தி  தனது வெற்றியை கர்வத்தோடு
பதிவு செய்துவிடுகிறது.இப்போது போராட்டத்தில்
கிடைத்த வேதனை எல்லாம் ஒரு
நொடியில் காணாமல் போய்விடுகிறது.
 நம் அனைவரின் கவனமும் சிலந்தி
பெற்ற வெற்றிமீதே இருக்கிறது.
அதனைக் கொண்டாடுகிறோம்.

இவ்வளவுதாங்க உலகம்.
நீயும் போராடு. விழு. எழும்பு. 
மறுபடியும் போராடு. எழும்பு.
வெற்றி நிச்சயம் .
உன் வலிகள் எல்லாம் காணாமல் போகும்
என்ற படிப்பினைதான் சிலந்தி
நமக்குச் சொல்லித்தரும் பாடம்.

துன்பங்கள்,துயரங்கள் இவற்றிலிருந்து
மீண்டுவர , ஜெயிக்க வேண்டும் என்ற
 ஒரு அனல் இருந்து
கொண்டே இருக்க வேண்டும்.
வேண்டும் வேண்டும் என்ற
ஆசை அனலாக இருந்து நம்மைச் சும்மா
இருக்க விடாமல் தூண்ட வேண்டும்.

நாலாபக்கங்களிலும் இருந்து
எதிர்ப்பு இருக்கிற ஒருவனுக்குத் தான்
எப்படியாவது போராடி வெற்றி பெற்றுவிட
வேண்டும் என்ற வெறி இருக்கும்.
அந்த வெறி செயலில் இறங்க வைக்கும்.
எப்படியாவது போராடி மேலே 
வந்தேவிட வேண்டும்
என்ற உந்துதல் மேலே தள்ளும்.


 அது உழைப்பு...உழைப்பு ஓயா உழைப்பு என்று
 பிடறியைப் பிடித்துத் தள்ளும்.
 விடாமுயற்சியோடு போராட வைக்கும்.

போராட்ட குணம் உள்ளுக்குள்
 கனன்று கொண்டே இருக்க
வேண்டும்.
சற்று ஆறப் போட்டுவிட்டாலும்
நமது வளர்ச்சியில் ஒரு 
தொய்வு ஏற்பட்டுவிடும்.

அவமானங்களாலும்  நெருக்கடிகளாலும்  வரும்
போராட்ட குணம்தான் பலருடைய வெற்றிக்கு
காரணமாக இருந்திருக்கிறது.
உலக வரலாற்றைப் புரட்டிப்போட்ட 
ஒவ்வொரு நிகழ்வும் கடைசியாக
வெற்றி பெறுவதற்ககுக் காரணமாக
அமைவது அவர்களுக்குள்
இருந்த உறுதியான போராட்ட குணமாகத்தான்
இருக்கும்.

நீண்ட நெடிய போராட்டங்கள் தான்
வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப்
போட்டிருக்கிறது. புதிய அத்தியாயங்களை
எழுத வைத்திருக்கிறது.

"முடியாது என்பது முட்டாள்களின்
தாரக மந்திரம்."என்பார் நெப்போலியன்.

முடியாது என்று கையைக் கட்டிக்
கொண்டு இருந்தால் இருக்கும்
இடத்திலிருந்து ஒரு இம்மிகூட
நகர்ந்து விட முடியாது.

தண்ணீரில் விழுந்த வண்டுகூட
எப்படியாவது வெளியே வந்துவிட
வேண்டும் என்று போராடி 
உருண்டு புரண்டு இறுதியில் ஏதோ ஒரு இலையைப்
பற்றிக் கொண்டு  கரையேறி விடுகிறது.

நாம் என்ன வண்டைப் போன்ற 
நாலறிவு உள்ள உயிரா?
இல்லையே .!..ஆறறிவு உண்டு என்று 
ஆகாயம் வரை குதிக்கிறோமே.
இந்த விடயத்தில் மட்டும் ஏன் பதுங்கிக்
கிடக்க வேண்டும்.?

நாம் நிற்கிற இடமும் நாம் எடுத்து வைக்கும்
ஒவ்வொரு அடியும் தான் நம்மை
அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும்.

போராட்டம்தான் நம்மை உயிர்ப்புள்ளவர்களாக
வைக்கும்.
உயிர்ப்போடு வாழ்ந்து உயர்வடைய
போரிட்ட குணத்தைக் கையில் 
எடுத்து உழைப்போம்.
வெற்றி கிடைக்கும் வரை
ஓயாதிருப்போம்
வெற்றி நிச்சயம் என்பதை
மனதில் எழுதி வைத்து
செயல்படுவோம்.
வெற்றி பெறுவோம்.

Comments

Popular Posts