வாள்போல பகைவரை அஞ்சற்க .....வாள்போல பகைவரை அஞ்சற்க....
         
"வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு "
                        குறள் : 882


வாள் - வெட்டும் ஒரு கூர்மையான கருவி
போல் - போன்ற
பகைவரை - எதிரியைக் கண்டு
அஞ்சற்க - பயப்பட வேண்டாம்
அஞ்சுக - பயப்படுவீராக
கேள்போல்- உறவினர்போல் உடனிருக்கும்
பகைவர்- எதிரி
தொடர்பு - நட்பு, உறவு


வாளைப் போன்ற வெளிப்படையான பகைவரைக்
கண்டு அஞ்ச வேண்டியதில்லை .ஆனால்
உறவினரைப் போல இருந்து உட்பகை
கொண்டிருப்பவரோடு தொடர்பு வைத்துக் கொள்ள
அஞ்சுதல் வேண்டும்.

விளக்கம். :.  

பகைவர் என்றால் வெளிப்படையாக 
பகைமை கொள்பவராக இருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட பகைவரிடம் நாம்
எப்படி ஒதுங்கி வாழ்ந்து கொள்ள முடியுமோ
அப்படி ஒதுங்கி வாழ்ந்து கொள்வோம்.
அதனால் அப்படிப்பட்ட பகைவரால் நமக்கு
பெரிய அளவில் எந்தப் பாதிப்பும்
வந்துவிடப் போவதில்லை.

ஆனால் உறவினர்போல கூடவே
இருந்துகொண்டு மனதிற்குள் பகைமையை
வளர்த்துக் கொள்பவரிடம் எச்சரிக்கையாக
இருக்க வேண்டும்.
அவர் பகைவர் என்பது கடைசிவரை நமக்குத்
தெரியாமலேயே போய்விடும்.
அவரால் ஏதாவது துன்பம் வந்து
நேர்ந்தபோது தான் இதுவரை
 கூடவே பகைமையை 
வைத்திருந்திருக்கிறோமே என்று
வருந்துவோம்.

உறவாடிக் கெடுக்கும் உட்பகை.
எப்போது... எந்தவிதத்தில்... எந்த நேரத்தில்
நம்மைக் கவிழ்ப்பார் என்பது தெரியாததால்
நம்மால் பாதுகாப்பாக இருக்க முடியாது.

வெளியில் தெரியும்படி இருக்கும்
எத்தனை பகையாயினும் சமாளித்து விடலாம்.
ஆனால் உறவே பகையாக உடனிருக்கும் போது
நம்மால் ஒன்றும் செய்யமுடியாது.
இவர்களால் நாம் பாதிக்கப்படுவது
திண்ணம். 

வாளால் நடக்கும் போர் நேரடி மோதல்.
உட்பகை கொரில்லா தாக்குதல்.
கொரில்லா தாக்குதலால் அழிவு
நிச்சயம்.

அதனால்தான்
"வாளை கையில் வைத்து வெளிப்படையாக 
மோத வருபவரைக் கண்டு
அஞ்ச வேண்டாம்.
உறவுபோல் நடிந்து 
உட்பகையை வளர்த்து வைத்திருப்பவரைக்
கண்டு அஞ்சிய ஒதுங்கி சென்று விடுங்கள்"
என்கிறார் வள்ளுவர்.


"உள்ளொன்று வைத்து புறமொன்று
பேசுவார் உறவு கலவாமை வேண்டும்."
 என்ற வள்ளலாரின் அருட்பா வரிகள்
 இங்கு நோக்கத்தக்கது.


English couplet:

"Dread not the foes that as drawn swords appear.
Friendship of foes, who seem like kinsmen, fear"

Explanation:

Fear not foes who say they would cut like a sword.
But fear the friendship of foes who seemingly act
like relations.

Transliteration :

"Vaalpola pakaivarai anjarkka anjuka
Kaelpol pakaivar thotarpu"


Comments

Popular Posts