குலோத்துங்க சோழன் அவையில் ஔவை
குலோத்துங்க சோழன் அவையில் ஔவை
ஔவையின் மீது அரசர்களுக்கு எல்லாம்
மரியாதை உண்டு.
ஔவையிடம் பேச தனிக்கவனம் வேண்டும்.
ஏடாகூடாவாக எதையாவது சொல்லி
மாட்டிக் கொண்டு விழித்த கதைகள்
ஏராளம் உண்டு.
எந்தப் பக்கம் நின்று பேசினாலும்
எதிர்ப்பக்கம் நின்று கோல் அடித்துவிட்டு
போய்க் கொண்டே இருப்பார்.
படைப்பாளிகள் ,கலைஞர் என்று எல்லா
தரப்பினரிடமும் ஏதோ ஒருவிதமான
ஒரு போட்டி மனப்பான்மை எப்போதும்
இருக்கும்.
அனைவருமே தங்களுக்கு
போதிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும்
என்று எதிர்பார்ப்பது இயல்பு. ஆனால்
படைப்பாளிகள் அனைவருக்கும் திறமைக்கு
ஏற்ற அங்கீகாரம் கிடைக்கிறதா என்றால்
இல்லை என்பதுதான் பெரும்பான்மையான
படைப்பாளிகளிடமிருந்து வரும் பதிலாக இருக்கும்.
அவர்கள் படைப்பில் தரம் இருக்கலாம்.
ஆனால் அவற்றை வெளியில் கொண்டு சேர்க்கும்
வழிமுறைகள் சரியாக இல்லாமையால்
அவர்கள் திறமை உலகுக்குத் தெரியாமலேயே
இருந்துவிடும்.
விளம்பரங்களும் விளம்பரப்படுத்த
ஆட்களும் இருந்தால் மட்டுமே ஒருவரை அறிவாளி
என்று உலகம் அடையாளம் கண்டு கொள்ளும்.
கம்பருக்கு குலோத்துங்க சோழன் புரவலராக
வாய்த்தது போல எல்லா திறமையான
புலவர்களுக்கும் வாய்த்துவிட வில்லை. அதனால்
அவர்களது படைப்புகள் பெரிய அளவில்
பேசப்படவில்லை.
அதனால் அவர்கள் திறமை அற்றவர்கள்
என்று கருதிவிடக் கூடாது.
இந்த ஆதங்கம் எப்போதும் ஔவையின்
மனதில் இருந்து கொண்டே இருந்தது.
ஒருநாள் குலோத்துங்க சோழன் அரசவைக்கு
வருகிறார் ஔவை.
அப்போது மன்னர் கம்பரைப் பார்த்து
கம்பரின் புலமையோ புலமை என
வானளாவப் புகழ்ந்து கொண்டிருக்கிறார்.
ஒரு நமட்டுச் சிரிப்போடு அவைக்குள்
நுழைகிறார் ஔவை.
ஔவையின் சிரிப்பில் இருந்த விசமத்தைப்
புரிந்து கொண்ட சோழ மன்னன்
"ஔவையே தங்கள் சிரிப்பிற்கான
காரணம் என்னவென்று தெரிந்து
கொள்ளலாமா? " என்று கேட்கிறார்.
"கம்பரைப் போல் வேறு எவரும் இல்லை
என்று புகழ்ந்தீர்களே அதைக் கேட்டதும்
நகைப்பாக இருக்கிறது."
"இதில் நகைப்பதற்கு என்ன இருக்கிறது?"
"கம்பர் மட்டும்தான் திறமையான புலவரா?"
"இதில் என்ன சந்தேகம் ?"
"மன்னா,ஒரு புலவரைப் பாராட்டும்போது
அவர் பாடலில் உள்ள பொருள் நயம், சொல்நயம்,
சொல்ல வந்த கருத்து, அதை வெளிப்படுத்தியவிதம்
என்று எத்தனையோ காரணிகளைக்
கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வெறுமனே கம்பர் தங்கள்அரசவை புலவர்
என்பதற்காக அவர் படைப்புகள் எல்லாவற்றையும்
பாராட்டிவிடக் கூடாது."
"கம்பர் பாடல்கள் என்றும் தரம்
தாழ்ந்ததாக இருந்ததில்லையே"
"அது உங்களுடைய கருத்து..."
அத்தோடு ஔவை மன்னனை விட்டுவிடவில்லை.
"விரகர் இருவர் புகழ்ந்திட வேண்டும்
விரல்நிறைய மோதிரங்கள் வேண்டும்
- அரையதினில்
பஞ்சேனும் பட்டேனும் வேண்டும்
- அவர்கவிதை
நஞ்சேனும் மேம்பேனும் நன்று"
இல்லையா ?என்று பட்டென்று கேட்டு விட்டார்.
அதாவது சோழ மன்னன் அவையில்
புகழேந்தி புலவரும்
செயச்கொண்டாரும் இருந்து கொண்டு
ஆமாம்...ஆமாம் என்பதுபோல
தலையாட்டிக் கொண்டிருந்தார்கள்.
இதைத்தான் ஔவை,
"கவிஞனுக்கு அருகில் இருவர் அமர்ந்து
புகழ்ந்து கொண்டிருக்க வேண்டும்.
பகட்டுக்காக விரல் நிறைய மோதிரங்கள்
அணிந்திடல் வேண்டும்.
அணிந்திடும் ஆடையும் அங்க வஸ்திரமும்
விலை உயர்ந்த பட்டாலும் பருத்தியாலும்
செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்.
இப்படிப் பகட்டாக இருப்பவர் கவிதை
நஞ்சைப் போல கசப்பாக இருந்தாலும்
அருமை...அருமை..
என்று ஆர்ப்பரித்துக் கொண்டாடுவீர்கள்"
என்று நேரடியாகவே குலோத்துங்க சோழன்
அவையில் பட்டு வஸ்திரமும் விரல்நிறைய
மோதிரமுமாய் அமர்ந்திருந்த கம்பரைப்
போட்டுத் தாக்கினார் ஔவை.
கம்பரின் முகம் அப்படியே மாறிப்போயிற்று
இருந்தாலும் சமாளித்துக் கொண்டு
அமர்ந்திருந்தார்.
மன்னனுக்கு பலர் அறிய
அவையில் வைத்து கம்பரை ஔவை
இகழ்ந்து பேசியதை ஏற்றுக் கொள்ள
முடியவில்லை.
ஔவையையும் பகைத்துக் கொள்ள மனம்
இடங்கொடுக்கவில்லை.
"ஔவையே, வெறுமனே கம்பர் என்பதற்காக
நான் புகழ்ந்திடவில்லை.கம்பரின் கவிநயம்
கண்டேன் புகழ்ந்தேன். கம்பர் என்ன
சாதாரண புலவரா ?
கம்பரைப் போல 10500 பாடல்கள் கொண்ட
இராம காவியம் படைத்திட
யாரால் கூடும்?
கம்பர் போல விருத்தப்பா பாடும்
திறன் யாருக்கு உண்டு? "
"கம்பருக்கு விருத்தம் பாடுவதில் புலமை
உண்டு . நான் ஒத்துக் கொள்கிறேன்.
ஆனால் இதோ இங்கு இருக்கிறாரே
புகழேந்தி அவரைப்ப்போல வெண்பா
பாடுவதற்கு எவரேனும் உளரோ?
வெண்பாவுக்குப் புகழேந்தி என்பது
தாங்கள் அறியாததா என்ன ? "
"நன்றாகத் தெரியும்."
"அதோ அங்கே அமர்ந்திருக்கிறாரே ஒட்டகூத்தர்.
அவர்மட்டும் என்ன சாமானியமானவரா?
உலா இலக்கியத்திற்கு முடிசூடா மன்னன்
ஒட்ட கூத்தராயிற்றே..."
"அதையும் நான் மறுப்பதற்கில்லை"
"இப்படி ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு
திறமை இருக்கும்போது ஒருரை மட்டும்
அரசவையில் அமர வைத்து புகழ்வது
ஏற்புடையதல்ல.
வாய்ப்பு கிடைக்காததால் அவர்கள்
வறுமையில் வாடலாம். அதனால் அவர்களிடம்
திறமை இல்லை என்பது அர்த்தமல்ல."
"இப்போது நீங்கள் என்ன
சொல்ல வருகிறீர்கள் ? நான் கம்பரைப்
புகழ்ந்தது குற்றமா?
புகழேந்தியையும் செயங்கொண்டாரையும்
அருகில் வைத்திருந்தது குற்றமா?
எது குற்றம் என்கிறீர்?
"சொல்கிறேன் கேளுங்கள்."
"வான்குருவி யின்கூடு வல்லரக்குத்
தொல்கரையான்
தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரிதால்
யாம்பெரிதும்
வல்லோமே என்று வலிமைசொல்
வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது"
என்று பாடி மன்னன் கேட்ட கேள்விக்கு
விளக்கமளித்தார் ஔவை.
மன்னரால் மறுமொழி பேசிட முடியவில்லை.
அவையிலிருந்த அனைவரும் வாயடைத்துப்போய்
ஔவையையே வியந்து பார்த்துக்
கொண்டிருந்தனர்.
அனைவரும் வாயடைத்து போகும்படி
அப்படி என்ன சொல்லிவிட்டார் ஔவை?
ஒன்றும் இல்லங்க....
எளிமையான விளக்கம்தான் கேளுங்கள்.
தூக்கணாங்குருவியைப் போன்று அறிவார்ந்த
வழியில் தலைகீழாக கூடு கட்டி ,
அதற்குள் வெளிச்சம் வேண்டும் என்பதற்காக
மின்மினிப் பூச்சிகளை ஒட்டி
வாழும் தூக்கணாங்குருவிபோல
வேறு எந்தப் பறவையாலும் கூடு கட்டி
வாழ்ந்திடக் கூடுமோ?
கரையான் தன் எச்சிலால் மண்ணைக்
குழப்பி நேர்த்தியான புற்றினை
கட்டியிருக்குமே...அதுபோன்று தூக்கணாங்குருவியால்
ஒரு புற்று உருவாக்கிட முடியுமா?
இல்லை.... பொசுக் பொசுக்கென்று புற்றுக்குள்
ஓடி மறையுமே பாம்பு...
அதனால்தான் கரையானைப் போன்று
புற்று உருவாக்கி வாழ்ந்திட முடியுமா?
பூக்களில் இருந்து துளித்துளியாகத்
தேனைச் சேகரித்து வைக்கும் அறுங்கோண
வடிவ சிற்றறைகள் கொண்ட தேனடைகளை
உருவாக்கி நம்மை வியக்க வைக்கும்
தேனீக்களைப் போன்று தேனடைகள்
கட்டி சேமிக்கும் திறன் வேறு
எங்கும் கண்டீரோ?
எத்தனைமுறை வீழ்ந்தாலும்
தன் வலையைப் பின்னி முடிக்கும்வரை
ஓயாத சிலந்தியைப் போன்று சிக்கலான
சிலந்திவலையைப் பின்ன
வேறு எந்தப் பூச்சியாலும் கூடுமோ?
இல்லை....தறி நெய்யும்
ஒரு தொழிலாளியால்தான் கூடுமா?
அவரவர்க்கு என்று தனித்திறமை ஒன்று
உண்டு. ஒருவர் செய்ததுபோல மற்றவர்
செய்ய வேண்டும் என்பது அவசியமல்ல.
ஒவ்வொருவரும் தனக்கென தனிப்பாணி
அமைத்து அதில் பயணித்துக் கொண்டிருப்பர்.
ஒவ்வொருவருக்குள்ளும் தனித்திறமையும்
அறிவும் ஒளிந்து கொண்டிருக்கிறது.
கம்பருக்கு ஒரு குலோத்துங்க சோழனும்
சடையப்ப வள்ளலும் கைதூக்கிவிட
கிடைத்ததுபோல
யாராவது கிடைத்திருந்தால்
மற்ற புலவர்களும் தங்கள் வறுமை நீங்கி,
காப்பியங்கள் படைத்துஉயர்நிலை
அடைந்திருப்பர் என்பதைச்
சொல்லாமல் சொல்லி வைத்தார் ஔவை.
ஔவையின் பாடலின் அர்த்தம் புரிந்த
குலோத்துங்க மன்னன் உண்மை நிலையை
உணர்ந்து கொண்டார்.
அப்பப்பா.....என்ன அறிவு...
என்ன..அறிவு!
காலத்தை வென்ற கருத்தை நச்சென்று
எடுத்துரைத்துவிட்டார். மன்னருக்காகப்
பாடினார் என்று சாமானியமாக கடந்து
போக முடியுமா?
அறிவில்லாதவர் என்று் எவருமிலர்.
ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு
சிறப்பு இருக்கிறது.
யாரையும் தாழ்வாக நினைக்கக்
கூடாது. அனைவரையும் சமமாக
மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
அவரவர் துறையில் அவரவருக்கு என்று
நல்ல புலமை இருக்கும்.
வாய்ப்பும் சூழலும்தான்
ஒருவருக்கு சரியான அங்கீகாரத்தைப்
பெற்றுக் கொடுக்கும்.
இவ்வளவு பெரிய உலகியல் உண்மையைக்
கூறியவர் யார் என்று பாருங்கள்...
வெறும் கூழுக்காக பாடிய ஔவை.
Comments
Post a Comment