மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகு....

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகு...


"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே"
என்று படித்திருக்கிறோம்.
அதனால்தான்
வேளாண்மை உயிர்நாடி என்கிறோம்.
விவசாயி வேளாண் தொழில்
செய்யாவிட்டால்...எந்தத் தொழில்
வளர்ச்சியடைந்தும் பயனில்லை.

ஒரு வயிற்றுச் சாப்பாட்டுக்குத்தான்
இத்தனை ஓட்டமும் ...ஓயா உழைப்பும்..
தூங்கா விழிகளும்... ஓய்வறியா
உடம்பும்....ஓட்டமும் நடையும்...

ஆனால் வயிற்றுக்குச் சாப்பாடு
கிடைத்துவிட்டால் மட்டும் போதுமா?
 
அதனால் திருப்திபட்டுக்கொள்கிறோமா
 என்றால்
இல்லை என்பதுதான் உண்மை.

ஒன்று கிடைத்தால் இன்னொன்றின்மீது
நாட்டம். அதுவும் கிடைத்துவிட்டால்....
இன்னும் கொஞ்சம் வசதி வாய்ப்பைப்
பெருக்கிக் கொள்ளலாமோ என்று
ஆசை வந்து பிடறியைப் பிடித்து முன்னே
தள்ள உட்கார நேரமில்லாமல்...
சாப்பிட நேரம் எடுத்துக் கொள்ளாமல்..
பணத்தின் பின்னால்...
 பதவியின் பின்னால்...
பேரும் புகழும் பெற்றுவிட வேண்டும்
என்ற ஒரு போதையில் ..... இப்படியாக நமது ஓட்டம்
 ஒருநாளும் நின்றபாடில்லை.

சரி.எல்லாம் கிடைத்துவிட்டது.
இனி நிம்மதியாக வாழலாம் என்றால்
வருமான வரித்துறை அதிகாரிகள்
எந்த நேரத்தில் வந்து நிற்பார்களோ 
என்ற ஒரு கலக்கம்.
இரவெல்லாம் தூக்கத்தைக் கெடுக்கிறது.

 ஒருசாரார்  நிலைமை இப்படி இருக்க
இன்னொரு சாரார் நிலைமையோ வேறு
ஒரு திசையில் பயணிக்கிறது.
உண்ண உணவும் 
உடுக்கை உடையும் இருக்க ஒரு வீடும்
 இருந்தால் போதும்ங்க....
எங்களுக்கு பெரிய பெரிய ஆசை
 எல்லாம் இல்லைங்க
என்கின்று ஒரு எளிமையான
வாழ்க்கைக்குள் தங்களை முடங்கிக் கொள்ள
நினைக்கின்றனர்.

இவர்கள் மட்டும் நிம்மதியாக வாழ்ந்துவிட
முடியுமா?

நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை.
வெளியில் சென்றால் முழுதாக
மனிதன் வீடு வந்து சேர முடியுமா?
என்ற கேள்வி வந்து முன் நிற்கிறது.

காரணம் அரசு சரியில்லை.
எங்கும் கொலை கொள்ளை ,திருட்டு ,
வழிப்பறி.போராட்டம்.
ஒரு பாதுகாப்பு உணர்வு
இல்லா நிலைமை.

இப்படி இருக்கும்போது எப்படி
நிம்மதியாக வாழ முடியும்?

வீட்டில் நாம் நிம்மதியாகத்
தூங்குகிறோம் என்றால் அதற்குக்
காரணம் வயிறார சாப்பிட்டதால்
அல்ல.
நிறைய பணம் சம்பாதித்ததால் அல்ல.
ஒரு நிம்மதி...ஒரு பாதுகாப்பு உணர்வு
இரண்டும் இருந்தால்தான் நிம்மதியாகத்
தூங்க முடியும்.

அந்த நிம்மதியைக் கொடுப்பதற்கு
நல்ல அரசு வேண்டும்.

அரசைச் சார்ந்ததுதான் மக்களின்
வாழ்க்கை.
ராமன் ஆண்டாலும் ராவணன் 
ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை.
என்று சொல்வதெல்லாம் அறிவற்றவர்களின்
பிதற்றல்.

நல்ல ஆட்சியாளன் வேண்டும்.
நான் சொல்லவில்லைங்க.... மோசிகீரனார்
என்ற புலவர் சொல்கிறார்.
பாடலைக் கேளுங்கள்.

நெல்லும் உயிரன்றே ;
நீரும் உயிர் அன்றே;
மன்னன் உயிர்த்தே
மலர்தலை உலகம்;
அதனால் யான் உயிர்
என்பது அறிகை 
வேல்மிகு தானை
வேந்தர்க்குக் கடனே!
   -    புறநானூறு
   -    பாடல் எண்  186
    
உயிர் வாழ சோறு வேண்டும்.
நீர் வேண்டும்.
நீரின்றமையாது இவ்வுலகு
மறுப்பதற்கில்லை.
அது மட்டும் உயிர்வாழ 
போதமானதாகுமா?

நெல்லும் உயிர் அன்றே
அதாவது நெல் உயிர் இல்லை.
நீரும் உயிர் அன்றே அதாவது
நீரும் உயிர் இல்லை.

"அப்படியானால் யார் உயிராம்?"

" யார் உயிர் தெரியுமா?
 மன்னன்தாங்க உயிர்."
 இதுதான் மோசிகீரனார் நம்
 கேள்விக்குத் தந்த பதில்.

"மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகு"
என்கிறார் மோசிகீரனார்.

என்னது?
மன்னன்தான் நாட்டு
மக்களுக்கு உயிரா?
எப்படிங்க.....ஒன்றும் புரியலியே
என்று மனதுக்குள் ஒரு போராட்டம்
ஓடிக்கொண்டிருக்குமே!

செங்கோல்
நெறி நில்லாது ஆட்சி புரியும்
கொடுங்கோலன் ஆட்சியாளராக
அமைந்துவிட்டால்.....

மக்கள் நலன் பேணும் மாட்சிமை
மன்னனிடம் இல்லாமல் போய்விட்டால்....

வரி என்ற பெயரில் மக்கள் பணத்தை அள்ளும்
மன்னன் அமைந்துவிட்டால்...

வீரமில்லாத பேடி மன்னனாக 
வாய்த்துவிட்டால்....

அண்டை நாடுகளோடு பகையை 
வளர்த்துக்கொண்டு  ஒரு பாதுகாப்பு
இல்லா நிலைமையை உருவாக்கி
வைக்கும் ஆட்சியாளர் அமைந்துவிட்டால்...

எப்படி நிம்மதியாக
வாழ முடியும்?
எப்போது என்ன நிகழுமோ என்ற 
அச்சம் ஆட்டிப்படைத்துவிடுமே!

இப்போது சொல்லுங்கள் .
வெறும் உணவும் நீருமா
உயிர் ?

அந்த உயிர் இறுதிவரை நம்
உடம்பில் இருக்க வேண்டும்.
உயிருக்கு பாதுகாப்பு வேண்டும்.
உயிருக்கு உத்தரவாதம் வேண்டும்.
அது எப்போது கிடைக்கும்?

நல்ல ஆட்சியாளன்
அமைந்து விட்டால்
குடிமக்கள் அச்சமின்றி வாழலாம்.
நம் உயிருக்கு உத்தரவாதம் 
தருவது மன்னனால் மட்டுமே முடியும்.

அரசைச் சார்ந்ததுதான் மக்களின்
வாழ்க்கை. அதனால்தான்,

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகு

என்று ஓங்கி அடித்து சொல்லிவிட்டார்
மோசிகீரனார்.

இராமன் ஆண்டாலும் இராவணன் 
ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை.
என்று சொல்வதெல்லாம் அறிவற்றவர்களின்
பிதற்றல்.

"மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகு"

இதுதான் உண்மை.
உண்மையைத் தவிர
வேறொன்றுமில்லை.

சிந்திக்க வேண்டிய வரி.

Comments

Popular Posts