புறநானூறு கூறும் புலவரின் தன்மானம்

புறநானூறு கூறும் புலவரின் தன்மானம்

நம் அனைவருக்கும் புலவர் என்றதும்
வறுமை தான் கண்முன் வந்து நிற்கும்.

புலவர்கள் மன்னர்களையும் செல்வந்தர்களையும்
புகழ்ந்து பாடி பரிசில் பெற்று
வாழ்க்கை நடத்துபவர்கள் தான்
மறுப்பதற்கில்லை.
ஆனால் வறுமையிலும் ஒரு செம்மை இருக்கும். 
தன்மானம் இருக்கும்.
நேர்மை இருக்கும்.
தகுதி இல்லாத எவரையும் புகழ்ந்து
பாடாப் பண்பு இருக்கும்.

அறிவும் புலமையும் வள்ளல் தன்மையும்
தகுதியும்  உள்ள அரசன் என்று
அறிந்தால் எவ்வளவு தொலைவானாலும்
சென்று பாடி பரிசில் பெற்று வருவர்.

எது எப்படியோ பரிசிலுக்காகத்தானே
பாட்டு என்று நினைப்பீர்கள்.
அப்படி நினைத்திருந்தால் உங்கள்
கருத்தை இன்றோடு மாற்றிக் கொள்ளுங்கள்.

தன் பாடலுக்குத்தான் பரிசில் பெற்றுக்
கொள்வார்களே தவிர வெறுமனே
புலவர் வந்திருக்கிறார் ஏதாவது
கொடுத்தனுப்புங்கள் என்று சொல்லி
பொருள் கொடுத்தால்
பெற்றுக்கொள்ள மறுத்துவிடுவார்கள்.


 பெருஞ்சித்திரனார்  என்ற புலவர் ஒருமுறை
வெளிமான் என்ற மன்னனைக் 
காணச் செல்கின்றார்.
மன்னன் புலவர் வந்திருப்பதை அறிந்து
தன் தம்பிடம்  புலவருக்கு நிறைய
பொருள்கொடுத்து அனுப்பும்படி
கூறுகிறார்.
அவன் தம்பிக்கோ  புலவருக்கு இவ்வளவு பொருள்
கொடுக்க வேண்டுமா என்று ஒரு எண்ணம்.
மன்னன் சொன்னதைவிடக் 
குறைவானப் பொருளையும்
பாடலையும் கேட்கவில்லை. புலவரையும்
பார்க்கவில்லை. பொருள்
மட்டும் வந்தது.

பெருஞ்சித்திரனாருக்குக் கோபம்.
நமது புலமையை மதிக்காது
கொடுக்கப்படும் பொருளை வாங்கிக்கொள்ள
மனம் உடன்படவில்லை.

இப்போது குமண மன்னனிடம்
செல்கிறார். அவன் புலவர்
கேட்டுக்கொண்டதுக்கு இணங்க
பொருளும் கொடுத்து யானையையும்
 பரிசாக அளித்தார்.
இப்போது புலவருக்குப் பெருமிதம் .

நேரே இளவெளிமான்
அரண்மனைக்குள் செல்கிறார்.

.நீ எனக்கு சிறிது பொருள் தந்தாய்.
வள்ளல் குமணன் எனக்கு 
என்ன என்னவெல்லாம்
பரிசாகத் தந்திருக்கிறார் பார்
என்கிறார் புலவர்.



"இரவலர் புரவலர் நீயும் அல்லை
புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்
இரவலர் உண்மையும் காண்இனி 
இரவலர்க்கு
ஈவோர் உண்மையும் காண்,இனி;
நின்னூர்க்
கடிமரம் வருந்தத் தந்து யாம்பிணித்த
நெடுநல் யானைஎம் பரிசில்
கடுமான் தோன்றல்!செல்வல் யானே!"

என்று  கூறினார்.

அதாவது,
 இரவலரைப் பேணுபவன் நீ மட்டும் இல்லை.
உன்னைவிட்டால்
இரவலர்களைப் பேணுபவர் இல்லாமலும்
இல்லை.புரவலன் ஒருவன்
எனக்கு யானையைப் பரிசிலாகத் தந்துள்ளான்.
அந்த யானையை உன்
ஊர்க் காவல் மரத்திலேயே கட்டி வைத்துவிட்டேன்.
அந்தப் பெருமிதத்துடன்
நான் இப்போது இங்கிருந்து
செல்கிறேன் என்று 
மிடுக்காகச் சொல்லிவிட்டு 
அங்கிருந்து போய்விட்டார்.

தனக்கு என்ன மரியாதை 
செய்யாத இடத்தில் பொருளும்
 வாங்குவதில்லை.

ஒருமுறை மட்டும் இப்படி நடைபெறவில்லை.

இதுபோல்  பின்பு 
ஒருமுறை பெருஞ்சித்திரனார் 
 அதியமானைப் பாடி
பரிசில் பெற அவன் அரண்மனைக்குச்
சென்றிருக்கிறார்.
அதியமான் பெரிய வள்ளல்.
புலவர்களை மதிக்கும் பண்பு
கொண்ட மன்னன்தான் . மாற்றுக்கருத்து
இல்லை.

ஆனால் பெருஞ்சித்திரனார் சென்றபோது
அவர் என்ன மனநிலையில் இருந்தாரோ 
தெரியவில்லை.
புலவர் வந்திருக்கிறார் என்றதும் பொருள்
கொடுத்து அனுப்புங்கள் என்று சொல்லிவிட்டார்.

புலவரின் பாடலைக் கேட்க வில்லை.
வந்த புலவரையும் பார்க்கவில்லை.
பரிசில் மட்டும் வந்தது.
அந்தப் பரிசிலை பெருஞ்சித்திரனார்
வாங்குவாரா என்ன?

பரிசில் பெற மறுத்துப் பாடிய மற்றொரு பாடல்
இதோ உங்களுக்காக...

குன்றும் மலையும் பலபின் ஒழிய
வந்தனென் பரிசில் கொண்டெனென்
செலற்குஎன
நின்ற என்நயந்து அருளி
இதுகொண்டு
ஈங்கனம் செல்கதான் என்
என்னை
யாங்குஅறிந் தனனோ
தாங்கரும் காவலன்?

காணாது அந்த இப்பொருட்கு
மாயோன்
வாணிகம் பரிசிலன் அல்லேன்;
பேணித்
தினையனைத்து ஆயினும் இனிது அவர்
துணைஅளவு அறிந்து
நல்கினர் விடினே!


குன்றுகளையும் மலைகளையும் கடந்து
நான் பரிசில் பெறுவதற்காக மட்டும்தான்
வந்தேன் என்று எண்ணினானா அதியமான்.?
என்மேல் அன்பு கொண்டு இப்பொருளை
எடுத்துச் செல்க என்று 
உங்கள் மூலமாகச் சொல்லி
அனுப்பியிருக்கிறான்.

என்னைப் பற்றி அதியமானுக்கு என்ன தெரியும்?
என்னைக் காணாமல்...
என் பாடலைக் கேளாமல்
அவன் அளிக்கும் பொருளை ஏற்றுக்
கொள்வதற்கு நான் பாடலை விற்றுப்
பொருளீட்டும் 
வாணிகப் பரிசிலன் அல்லன்.
என்னை விரும்பி,என் புலமையை மெச்சி
தினையளவு பொருள் தந்திருந்தாலும்
அதனை நான் பெருமையாகக் கருதி
பெற்றிருப்பேன். வாழ்த்தியிருப்பேன்.
மகிழ்ச்சியோடு சென்றிருப்பேன்.
என்னையோ என் பாடலையோ மதியாதவரிடமிருந்து
எந்தப் பொருளையும்
பெறுவதில்லை என்று
கோபத்தோடு சென்றுவிட்டாராம்
பெருஞ்சித்திரனார்.


என்ன பெரிய பாட்டு?
இதற்குப்போய் மன்னர்கள்
பொன்னைக் கொடுக்கிறார்கள்.
யானையைக் கொடுக்கிறார்கள்.
நிலங்களைக் கொடுக்கிறார்கள்
என்று கேட்கத் தோன்றும்.

பாடலின் சிறப்பு பாடியவருக்கும்
பாட்டைப்பற்றி ஓரளவாவது புலமை
உள்ளவர்களுக்கும் மட்டுமே
புரியும்.

நாலு வரி பாட்டு எழுதுவதற்கு என்ன ?
என்று சாதாரணமாக குறைசொல்லிப்
பேசுபவர்களைக் கேட்டிருக்கிறேன். 
எழுதிப் பாருங்கள்.
முதல்வரி சரியாக அமைந்தால் 
இரண்டாவது வரியில்
எங்கோ இடிப்பதுபோல் இருக்கும்.
எல்லா வரிகளும் சரியாக அமைந்தாலும்
கடைசிச் சொல் சரியாக அமையாமல்
தலைவலியைக் கொடுக்கும்.

இப்படி பார்த்துப் பார்த்து செதுக்கிச்
செதுக்கிக்
கொண்டு வந்து கொடுத்தப் பாடலைக்
கேட்காமலே பரிசில் வழங்கப்
சொன்னால் எப்படி இருக்கும்.?

தன் புலமைக்கு மரியாதை கொடுக்கவில்லை
என்றுதானே தோன்றும்.
வறுமை ஒருபுறம் இருந்தாலும்
தன்மானம் என்று ஒன்று உண்டல்லவா?

"காணாது ஈந்த இப்பொருட்கு யான்ஓர்
வாணிகப் பரிசிலன் அல்லென்"

எவ்வளவு அருமையான வரி?
பணம் ஈட்டும் நோக்கில் 
கொடுக்கல் வாங்கலுக்காக
வந்து நிற்கும் வணிகர் அல்லர் நாங்கள்!

 தன்மானத்தை வெளிப்படுத்திய
அருமையான வரிகள் இல்லையா?



Comments

Popular Posts