தொல்காப்பியர் கூறும் ஆறறிவு
தொல்காப்பியர் கூறும் ஆறறிவு
அறிவு என்றதுமே மனிதனுக்கு
மட்டுமே உரியது. வேறு எந்த உயிருக்கும்
அறிவு என்பதே கிடையாது என்று நாம்
நினைக்கிறோம்.
அதனால்தான் வேறு விலங்குகளையோ
உயிர்களையோ ஒரு
பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை.
செடிக்கு உயிருண்டு என்று
படித்திருக்கிறோம்.
ஆனால் இலைகளைப் பறித்து வீசிக்
கொண்டே செல்வோம்.
அவற்றிற்கும் உணர்வு உண்டு
என்ற சிந்தனையே மனதில் இருக்காது.
நாயைக் கண்டதும் கல்லை எடுத்து வீசுவோம்.
நாய் பேச முடியாததால் அதற்கு
என்ன அறிவு இருக்கப்போகிறது என்று மட்டமாக
நினைத்துக் கொள்வோம்.
ஒரு செயலுக்கு எதிர்வினை ஆற்றும்
திறன் இருந்தாலே அந்த உயிருக்கு
அறிவு இருக்கிறது என்றுதானே
கருதப்பட வேண்டும்.
ஆனால் நாம் என்ன நினைக்கிறோம்?
படித்தால் மட்டுமே அறிவு பெற முடியும்.
படிப்பறிவு பெற்றவர்கள் மட்டுமே அறிவுடையவர்கள்.
புத்தகம் வாசிக்கத் தெரியாதவர்கள்
அறிவற்றவர்கள். பணம் பண்ணத்
தெரிந்தவர்கள் அறிவுடையவர்கள்.
நல்ல பதவியில் இருப்பவர்கள்
மேலான அறிவுடையவர்கள்
என்று அறிவுக்கும் அறிவின்மைக்கும் ஒரு வரம்பு
வைத்திருக்கிறோம்.
மனிதர்களையே ஒரு சாரார் அறிவற்றவர்கள்
என்று நாம் ஒதுக்கி வைத்திருக்கும் போது
மற்ற உயிர்களை நாம் எப்படி அறிவுடையனவாக
ஏற்றுக்கொள்வோம்.?
நீங்கள் ஏற்றுக் கொண்டாலும் சரி.
ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரி.
உயிருள்ளவை அனைத்துக்கும் அறிவு
உண்டு என்கிறார் தொல்காப்பியர்.
தொல்காப்பியரே சொல்லிவிட்டாரா?
தொல்காப்பியர் சொன்னால் ஒத்துக்கொண்டு
தானே ஆக வேண்டும்.
அறிவு என்பது பேசத் தெரிந்தவர்களுக்கு
மட்டும் உரியதல்ல.
தொடு உணர்ச்சி இருந்தாலே போதும்.
அதுவும் ஓர் அறிவுதான் என்பது
தொல்காப்பியர் கருத்து.
அத்தோடு விட்டுவிடாமல் எல்லா
உயிர்களையும் அவற்றின் செயல்பாடுகளுக்கு ஏற்ப
வகைப்படுத்தி நம்முன்
கொண்டு வந்து நிறுத்துகிறார் தொல்காப்பியர்.
தொல்காப்பியர் பார்வையில் உயிர்கள்
எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன
என்பதைப் பாருங்கள்.
ஒன்றறிவு அதுவே உற்று அறிவதுவே
இரண்டறிவு அதுவே அதனொடு நாக்கே
மூன்றறிவு அதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவு அதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவு அதுவே அவற்றொடு செவியே
ஆறறிவு அதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே!
இது தொல்காப்பியம் மரபியலில் வரும் நூற்பா.
1.உற்றறிதல் அதாவது தொடு உணர்வு
உள்ள உயிர்கள் ஓரறிவு உள்ள உயிர்கள்
எனப்படும்.
2. உற்றறிதலோடு நாக்கும் சேர்த்துக்கொண்டால்
அதாவது சுவையுணர்வும் கொண்டவை ஈரறிவு
கொண்ட உயிர்கள்.
3. உற்றறிதல்,சுவையறிதல் இவற்றோடு
மூக்கால் முகர்ந்து உணரும் அறிவும்
சேர்ந்து கொண்டால் அப்படிப்பட்ட
உயிர்கள் மூவறிவு கொண்டவையாம்.
4. உற்றறிதல்,சுவையறிதல்,
மோப்பம் இவற்றோடு
கண்ணால் பார்க்கும் திறனும்
சேர்ந்து கொண்டிருந்தால் அவை
நான்கறிவு கொண்ட உயிர்களாம்.
5. உற்றறிதல்,சுவையறிதல்,
மோப்பம்,
பார்த்தல் இவற்றோடு காது அதாவது
கேட்கும் திறனும் சேர்ந்து கொண்டால்
அவை ஐந்தறிவு கொண்ட உயிர்களாம்.
6. உற்றறிதல், சுவையறிதல் மோப்பம்,
,பார்த்தல்,கேட்டல் ஆகிய திறன்களோடு
மனம் அதாவது பகுத்தறியும் திறனும்
சேர்ந்து கொண்டால்
அவைதான் ஆறறிவு கொண்ட உயிர்களாம்.
அருமையான வகைப்பாடு இல்லையா?
இப்படி சொல்லிவிட்டால் போதுமா?
ஓரறிவு உள்ள உயிர்கள்
ஈரறிவு உள்ள உயிர்கள்
எவை எவை என்று எங்களுக்குத்
தெரிய வேண்டாமா?
எடுத்துக்காட்டு கொடுக்க வேண்டாமா?
என்ற உங்கள்
உள்ளக் கிடக்கை
தொல்காப்பியர் வரை
சென்றிருக்கிறது. அதனால்தான்
அடுத்து அவற்றைப் பற்றிய விளக்கங்களையும்
உங்கள் முன் வைக்கிறார் தொல்காப்பியர்.
1. "புல்லும் மரனும் ஓர் அறிவினவே
பிறவும் உளவே, அக்கிளைப் பிறப்பே"
புல்,மரம் ஆகியவை ஓரறிவு
உயிர்கள் வகையினைச் சார்ந்ததாகும்.
மரம்,செடி, கொடி,புல்,பூண்டு
இவை எல்லாம் ஓரறிவு உயிர்கள்.
2. ஈரறிவு உள்ள உயிர்களாவன...
"நந்தும் முரளும் ஈரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே"
அதாவது சங்கு நத்தை,நொள்ளை,
போன்றவை ஈரறிவு உள்ள உயிர்களாம்.
3. மூவறிவு உள்ள உயிர்களாவன....
"சிதலு மெறும்பு மூவறிவி னவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே"
கரையான், எறும்பு,சிதல் ,
அட்டை போன்றவை மூவறிவு உள்ள உயிர்கள்.
4. நாலறிவு உள்ள உயிர்களாவன....
"நண்டும் தும்பியும் நான்கறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே"
வண்டு,தும்பி,ஞிமிறு,சுறும்பு
ஆகியவை நாலறிவு உள்ள
உயிர்களாம்.
5. ஐயறிவு உள்ள உயிர்களாவன....
"மாவும் மாக்களும் ஐயறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே"
மாவென்பன நான்கு கால்கள் கொண்ட
விலங்குகள்.
மாக்கள் எனப்படுபவர் மனவுணர்ச்சி இல்லாதவர்.
அக்கிளைப் பிறப்பே என்பதால்
குரங்கும் ஐயறிவு
வகைப்பாட்டிற்குள் அடங்கும்
பறவை , விலங்குகள் ஐயறிவு உள்ள உயிர்கள்.
6. ஆறறிவு உள்ள உயிர்களாவன....
மேற்குறிப்பிட்ட ஐந்து அறிவோடு
பகுத்தறியும் அறிவும் பெற்றவர்கள்
ஆறறிவு உள்ளவர்களாம்.
மனிதன் ஆறறிவு உள்ள உயிர்.
பகுத்தறியும் திறன் பெறாதவர்கள்
மாக்கள்.
ஓரறிவு உள்ள உயிரினம் தொடங்கி
ஆறறிவு உள்ள உயிர் வரை பகுத்து
ஆய்ந்து வகைப்படுத்தி அவற்றிற்கான
எடுத்துக்காட்டுகளையும் தந்து ஐயம்
இருந்தால் ஆய்வு செய்து பார்த்துக் கொள்ளுங்கள்
என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
எழுதி வைத்த தொல்காப்பியரின்
அறிவியல் அறிவை என்னவென்பது?
சிந்திக்கும் திறன் அதிகம் பெற்றவர்கள்
தமிழர் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து
இருக்க முடியாது.
தமிழ் தொன்மையான மொழி மட்டுமல்ல.
பரிணாமக் கொள்கையை உலகுக்கு
எடுத்துரைத்த முதன்மொழி. முதன்மையான
மொழி என்பதில் தமிழருக்குப்
பெருமிதம் உண்டு.
நினைவில் வைத்துக் கொள்க..
ஓரறிவு- புல்,மரம்
ஈரறிவு- சங்கு, நத்தை
மூவறிவு-. எறும்பு,கரையான்
நாலறிவு- வண்டு, தும்பி
ஐயறிவு- பறவை,விலங்கு
ஆறிறிவு- மனிதன்
Comments
Post a Comment