அடாத மழை
அடாத மழை
அடாத மழையே
விடாது ஒப்பாரி வைத்ததேனோ?
வருந்தி அழைத்தேன்
வராது அடம் பிடித்தாய்
ஆயிரம் கோடி கண்கள்
கெஞ்சியும் மிஞ்சி நின்றாய்
பார்வையை நிராகரித்தாய்
பாவத்தைத் தொலைத்து நின்றாய்இரங்க மனமில்லாது
எங்கோ ஓடி ஒளிந்தாய்
எங்கிருந்தோ பறந்து வந்தாய்
கடல் மேல் நிலை கொண்டாய்
கண்கட்டி வித்தை காட்டி
கண்ணாம்மூச்சு விளையாட்டு
காட்டினாய்
விடுகதைப் போட்டு நின்றாய்
விடுவி என்று க்ளூ கொடுக்காது
விலகிப் போனாய்
இயன்ற மட்டும் முயன்று பார்த்தும்
திரும்பாது முகம் திருப்பிக்
கொண்டாய்
கணினியாலும் கணிக்க முடியாத
அறிவிலி நீ என்றே கொக்கரித்தாய்
எதிர்பாராது நின்றிருந்த வேளையில்
திருப்பி அடித்து திணற வைத்தாய்
திக்குமுக்காட வைத்து
திசை தெரியாது ஓட விட்டாய்!
அள்ளிய நீரனைத்தையும் ஆக்ரோசமாய்க்
கொட்டித் தீர்த்து கும்மாளமிட்டாய்
பார்த்து நின்ற யாவரையும்
பரிகாசம் செய்துவிட்டாய்
காடு மலை ஏறி வந்தாய்
வீட்டிற்குள் ஏன் நுழைந்தாய்?
இருப்பதை அள்ளிக் செல்ல
ஈட்டிக்காரனாய் ஏன் நடந்தாய்?
பாறையில் முட்டி மோதி
உருட்டி விளையாடினாய் பொறுதிருந்தோம்
உயிர்களோடு விளையாடி
உன் வன்மம் தீர்த்ததேனோ?
இயற்கைக்கு எதிராய் எவர்வரினும்
இடர் உனக்கு மானிடா என்றாய்
இயற்கையோடு விளையாடாதே
இயற்கையும் உன்னோடு விளையாடும்
புரிய வைக்க பொங்கி வந்து புதைகுழியில் தள்ளிவிட்டாய்
ஏதேதோ போதித்தாய் சாதித்தாய்
எம்மை சாய்த்து நீ வென்றுவிட்டாய்!
Comments
Post a Comment