காலத்தோடு ஒரு கண்ணாமூச்சு

காலத்தோடு ஒரு கண்ணாமூச்சு


"காலம் பொன் போன்றது

கடமை கண் போன்றது"


ஒவ்வொருவருக்கும் காலையில்

எழும்பியதுமே கையில் இருபத்து

நான்குமணி நேரத்தைக் கொடுத்துதான்

அனுப்புகிறார் கடவுள்.

கிடைத்த அந்த இருபத்து நான்குமணி

நேரமும் எப்படி செலவிடப்படுகிறது

என்பதில்தான் ஒருவருடைய வெற்றி

தோல்வி அடங்கியிருக்கிறது.


இன்னும் கொஞ்சம் தூங்கட்டும்.

இன்னும் கொஞ்சம் உறங்கட்டும்.

இன்னும் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு

நித்திரை செய்யட்டும் என்பாயோ?

 உன் தரித்திரம்

வழிப் போக்கனைப் போலவும்

உன் வறுமை ஆயுதம் அணிந்தவனைப்

போலவும் வரும்"

என்கிறது பைபிள்.


நேரத்தைப் படுக்கையில் கழித்தால்

ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படுவாய்.

எவ்வளவு பெரிய உண்மை!


இருக்கிற நேரத்தில் பாதி நேரத்தைப் 

படுக்கையில்

கழிப்போர் உண்டு.

ஊர் வம்பு பேசி ஒரு காசுக்கும்

பிரயோசனமில்லாமல் நேரத்தை

விரயம் செய்வோர் உண்டு.

நாளை பார்த்துக் கொள்ளலாம்...

நாளை பார்த்துக் கொள்ளலாம்

என்று நாளையும் பொழுதையும்

நகர்த்தித் தள்ளுவோர் உண்டு.


நாம் விரும்புகிறோமோ இல்லையோ

காலையிலேயே காலமென்னும் வரம் 

நம் கைகளில் கொடுக்கப்பட்டுவிட்டது.


வரம் வாங்கி வந்த நாம்

வரும் வழியிலேயே பறிகொடுத்துவிட்டு

நிற்கலாமா?


பணத்தைப் பார்த்துப் பார்த்து

செலவு செய்யும்நாம் காலத்தைத்

திட்டமிட்டுச் செலவழிப்பதில்லை.


காலமெல்லாம் எதற்கெல்லாமோ காத்திருந்து

காத்திருந்து இருந்த காலத்தைத்

தொலைத்துவிட்டு காத்திருப்பதிலேயே

நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறோம்.


கல்வியை எப்படி ஒருவராலும் திருட முடியாதோ 

அதேபோன்று காலமும் யாராலும்

திருடிக் கொண்டு செல்ல முடியாது.


ஆனால் நம்மையும் அறியாமல்

நமக்குக் கொடுக்கப்பட்ட காலம்

திருட்டு போய்க் கொண்டிருக்கிறது.

அதை என்றாவது நாம் உணர்ந்திருக்கிறோமா?


யார் யாரெல்லாமோ நமது காலத்தைத்

திருடிக் கொண்டிருக்கின்றனர்.

எவை எவையெல்லாமோ நம் 

காலத்தைக் களவாட காத்திருக்கிறது.

திருடியவர் யார் என்றுகூட தெரியாமல்

திருட்டு கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.


கைபேசியோடு கணினியோடு 

தொலைக்காட்சியோடு என்று கிடைத்த

காலத்தைக் கூறுபோட்டுக் கொடுத்துவிட்டு

நேரமில்லை நேரமில்லை என்று

நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்.


முழு நேரமும் வலைத்தளத்தில் மூழ்கிக்

கிடக்கும் அண்ணனுக்கு அப்பாவுக்கு

மருந்து வாங்கித் தர  அருகிலுள்ள 

கடைக்குச் சென்றுவர நேரமில்லை.


பேஸ்புக்கில் லைக்கிற்காகத் தவமாய்த்

தவமிருக்கும்  தங்கைக்கு ,அம்மாவிற்கு

உதவி செய்து லைக் வாங்க மனமில்லை.


கிராமத்தில் வசிக்கும் வயதானப்

பெற்றோரைப் பார்த்து வர நகரத்தில்

வேலை பார்க்கும் மகனுக்கு நேரமில்லை.


பொழுதத்தனையும் தொலைக்காட்சிமுன்

கழிக்கும் மனைவிக்கு வீட்டுக்கு வரும்

கணவனோடு பேச நேரமில்லை.


வீடியோ கேம் விளையாடி பொழுதைக்

கழிக்கும் தம்பிக்கு வீட்டுப்பாடம்

எழுத நேரமில்லை.


நேரமில்லை...நேரமில்லை...நேரமில்லை.


யாரைக் கேட்டாலும் நேரமில்லை...

நேரமில்லை...


நேரம் எங்கே போய் ஒளிந்து

கொண்டது?


இருபத்து நான்கு மணி நேரம்

நான்கு மணி நேரமாகச் சுருங்கிப்

போயிற்றா?


காலம் சுருங்குமா?


மனம்தான் சுருங்கிப் போயிற்று.

மனமிருந்தால் மணியும் உண்டு.

பணியும் உண்டு.பணிசெய்

அணியும் உண்டு.


கொடுத்த நேரத்தைச் சரியாகப்

பயன்படுத்தத் தெரியாமல்

நேரமில்லை என்ற ஒற்றைச்

சொல்லைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு

நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்.


யாரையோ ஏமாற்ற நீங்கள் நேரமில்லை

என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கலாம்.


ஆனால் இது அடுத்தவரை ஏமாற்றும் 

சொல் அல்ல.


உண்மையிலேயே நீங்கள்

உங்களையே ஏமாற்றும் சொல்தான்

இந்த நேரமில்லை.


நேரமில்லை என்ற வார்த்தையை

மனிதர்களைத் தவிர வேறு யாரேனும்

பயன்படுத்துகிறார்களா ? 


இதென்ன கேள்வி? 

பேசத் தெரிந்தவர்கள்

மட்டும்தானே இந்த வார்த்தையைப்

பயன்படுத்த முடியும்.

கதிரவன் நேரமில்லை என்று

கத்த முடியுமா ?

செடி கொடிகள்தான் நேரமில்லை என்று

விடுமுறை எடுக்க முடியுமா?

காற்றுதான்  வீசி வீசி ஓய்ந்து போய்விட்டேன்

என்று ஓய்வெடுத்துக் கொள்ளுமா?

என்று கேட்பீர்கள்.


நல்ல கேள்வி?


எப்போதாவது கதிரவன் எனக்கு 

வர நேரமில்லை என்று தன் பணியை

நிறுத்தி வைத்ததுண்டா?


மரம், செடி கொடிகள் தமக்கு நேரமில்லை 

என்று காய்ப்பதை நிறுத்தி வைத்ததுண்டா?


காற்று வீச நேரமில்லை என்று

ஓய்வெடுத்துச் சென்றதுண்டா?


கதிரவன் உதிக்க நேரமில்லை என்று

அடம்பிடித்து நிறுத்திக் கொண்டால்.....


மரம், செடி கொடிகள் ஒரு வருடத்திற்கு

எங்களுக்கு காய்ப்பதற்கு நேரமில்லை

என்று அப்படியே நின்றுவிட்டால்....


ஒரே ஒரு நாளைக்கு வீசமாட்டேன்

என்று காற்று தன் பணியை நிறுத்தி

வைத்துக் கொண்டால்.....


அம்மாடியோவ்...வேண்டாமடா சாமி

என்று கத்த வேண்டும் போல் இருக்கிறதல்லவா!


பயப்படாதீர்கள்.

இவை ஒருபோதும் நேரமில்லை என்று

தம் பணியை நிறுத்திக் கொள்ளப்

போவதில்லை.


நாம் மட்டும் இந்த நேரமில்லை 

என்ற சொல்லை மடியில்

கட்டிக் கொண்டு ஏன் திரிய வேண்டும்?


காலமும் பணமும் இருக்கும்வரைதான்

மதிப்பு.

கடந்து போய்விட்டால்....


ஒரு காலத்துல நான்....

எங்க அப்பா காலத்துல இப்படி...

எங்க தாத்தா காலத்துல எல்லாம்

அப்படி என்று பழையப் பாட்டைப்

பாடிக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.


நமக்குக் கொடுக்கப்பட்ட காலத்தில்

நாம் என்ன செய்தோம் என்பதில்தான்

நம்மை நாம் அடையாளப்படுத்திக்

கொள்ள முடியும். 


காலத்தைத் திருட்டு கொடுத்துவிட்டு

திருதிருவென்று விழித்துக் 

கொண்டிருக்கிறோமா?


காலத்தின் அருமை தெரியாது அங்கங்கே 

கழித்துவிட்டோமா? இல்லை

களித்துவிட்டோமா?


கழித்தும் களித்தும் இழந்துவிட்டு

காலம் இல்லை என்றால் எப்படி?


காலம் எவ்வளவு விலைமதிப்பற்றது

என்பது ஒரு ஓட்டப்பந்தய வீரனுக்குத்

தெரிந்திருக்கும்.

அரை வினாடியில் கிடைக்கவிருந்த

வெற்றி கைவிட்டுப் போயிருக்கும்.

அந்த அரைவினாடி நேரம் அவனுடைய

வாழ்க்கையை எப்படியெல்லாம் 

புரட்டிப் போட்டிருக்கும் ?


ஒரு நிமிட நேரத்தில் ரயிலை

விட்டுவிட்டு எத்தனைமுறை பேந்தப் பேந்த

விழித்திருப்போம்.

அதனால் எத்தனை வேலைகள்

தாமதப்பட்டிருக்கும்? வேலை

நடைபெறாமல்கூட போயிருக்கலாம்.

ஒரு நிமிட மதிப்பு ரயிலைத்

தவறவிட்டவருக்குத் தெரியும்.



விபத்தில் சிக்கிய ஒருவனுக்கு தகுந்த

நேரத்தில் செய்யப்படும் உதவி

அவன் உயிரையே காப்பாற்றிவிடும்.

சரியான நேரத்தில் வந்து சேர்த்தீர்கள்.

இன்னும் ஒரு ஐந்து நிமிடம்

தாமதித்து வந்திருந்தால்  உயிரே

போயிருக்கும் என்பார்

டாக்டர்.

அப்போது பாதிக்கப்பட்ட நபர்

கண்ணீர் மல்க கையெடுத்துக்

கும்பிடுவார் பாருங்க..

அந்தத் தருணம் ....

வார்த்தையால் சொல்லமுடியாத

நன்றியைக் கண்களால் தெரிவிக்கும்

உணர்வுப் பூர்வமான நேரம்.

அந்த ஐந்து நிமிட நேரத்திற்கு

ஈடு இணையாக எதுவும் கொடுத்துவிட

முடியுமா?


உயிர் பிழைத்தவருக்குத்தான்

தெரியும் அந்த ஐந்து நிமிடத்தின் மதிப்பு.

ஐந்து நிமிட நேரம் ஒரு வாழ்க்கையையே

காப்பாற்றியிருக்கிறது.


ஒவ்வொரு நிமிடமும் விலைமதிப்பற்றது.

ஆண்டாண்டு அழுது புலம்பினாலும்

கடந்த காலம் கைக்கு வருமா?


கால ஓட்டத்தைக் கைகளால்

தடுத்துவிட முடியுமா?


"நான் நேரத்தை வீணாக்கினேன்;

இப்போது நேரம் என்னை வீணாக்குகிறது"

என்றார் ஷேக்ஸ்பியர்.


ஆமாம்....நேரத்தை நாம் வீணாக்கினால்

ஒருநாள் நேரம் நம்மை வீணாக்கிவிடும்.


நேரமே வாழ்க்கையை நிர்ணயிக்கும்

ஆற்றல் மிக்கது.



காலத்தின் மதிப்பு தெரியாதவன்

மனிதன் என்ற எண்ணிக்கையில்

மறைந்து போவான்.

மறக்கப்படுவான்.


உரிய காலம் ,உகந்த காலம், 

உதவாத காலம் என்று பாகுபாடு பார்க்காது

எல்லாக் காலத்தையும் தமக்கு உரிய

காலமாக மாற்றும் திறன் படைத்த

ஒருவரால்தான் வரலாற்றேடுகளில் 

தம் பெயரைப் பதிவு

செய்ய முடியும்.


நாளை என்பது ஒரு ஏமாற்று வேலை.

இன்று என்பது மட்டுமே உண்மை.

உண்மையான நாளில் உண்மையாக

உழைக்கத் தெரிந்தவர்களுக்கு 

காலம் வெற்றி என்னும் மகுடத்தைச்

சூட்டி அழகு பார்க்கும்.


நேரத்தோடு வேண்டாம் கண்ணாமூச்சி

விளையாட்டு.


நேரமில்லை என்ற சொல்லோடு

கொள்ளுங்கள் பிணக்கு.

இன்றே தொடங்கட்டும் உங்கள்

வெற்றிக்கணக்கு !



.










.










"

Comments