அவமானம் வேண்டாம்
அவமானம் வேண்டாம்
கிண்டலும் கேலியும் நக்கலும் நையாண்டியும்
செய்து பிறர் மனதைக் காயப்படுத்துவதற்கு என்றே ஒரு சிலர் இருப்பர்.
அவருக்கு அது விளையாட்டாக இருக்கலாம். ஒருவரைப் பார்த்து நாம் செய்யும் கிண்டலும் கேலியும் அவர் உள்ளத்தை எவ்வளவு காயப்படுத்தும் .அவர் உள்ளம் எப்படி கூனிக் குறுகிக் போகும் என்பது காயப்பட்ட வருக்குத்தான் தெரியும்.
ஒரு சொல் வெல்லும்
ஒருசொல் கொல்லும்"
என்பார்கள்.
வெல்லும் சொல்லை விட்டுவிட்டு
கொல்லும் சொல்லைக் கையில் எடுத்துப்
பேசுவதால் எத்தனை எத்தனை தற்கொலைகள்
நாளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
வாழ வழி இல்லையே எனத் தற்கொலை செய்து
கொள்ளுபவர்களைவிட என்னை அவமானப்
படுத்திவிட்டார்களே என்று தற்கொலை
செய்பவர்கள்தான் உலகில் அதிகம்.
நான் என்ன அப்படி பெரிசாக சொல்லி
விட்டேன். இதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொண்டாரே என்பது சொல்லியவர்கள்
தரப்பு வாதமாக இருக்கலாம்.
அவமானப்பட்டவர்களுக்கு அல்லவா
தெரியும் அதன் வலியும் வேதனையும்.
அப்படியே நெஞ்சைப் பிடுங்கி வெளியே
வீசுவதுபோல் இருக்கும்.
உள்ளுக்குள்ளே கத்தியால் குடைந்து போல
இருக்கும்.
பணம் இருந்தால்
யாரையும் எப்படி வேண்டுமானாலும்
பேசலாம் என்பது
சில அரைகுறை அறிவாளிகளின் நினைப்பு.
அவமானங்கள் நம்மில் பலருக்கும் ஏற்பட்டிருக்கலாம்.
யாரிடம் சொல்லி அழுவது எனத் தெரியாமல்
தலையணையைக் கண்ணீரால் நனைத்திருப்போம்.
விளையாட்டாக செய்யும் கிண்டல்கூட
மற்றவர்களைக் காயப்படுத்தும் என்பது
பலருக்குப் புரிவதில்லை.
அவமானப்படுத்துகிறவர்கள் மனதில் உங்களைப்
பற்றி பொறாமை குடி கொண்டிருக்கும்போதுதான்
ஒருவர் நம்மை அவமானப்படுத்த முற்படுகிறார்.
எதிரியை வீழ்த்த நினைப்பவர்கள் கையில்
எடுக்கும் ஆயுதங்களுள்ஒன்று அவமானம்.
"திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று "
என்றார் வள்ளுவர். ஒருவன் செய்யும் இழிச்செயலுக்காக
வருந்தி நீங்களும் அதே மாதிரியான
கீழ்த்தரமான செயலில் இறங்கிவிடாதிருங்கள்.
நீங்கள் உங்கள் வழியில் செல்லுங்கள்.
அவமானம் நமது பெருமையைக்
குலைத்து மற்றவர்கள்முன் நம்மை
இகழ்ச்சிப்படுத்தும் நோக்கோடு
நம்மீது வீசப்படும் அம்பு.
அது காயப்படுத்தாமல் திரும்பாது.
நமது ஆற்றலைக் கேலி செய்ய வேண்டும்
என்று திட்டமிட்டு நடத்தப்படும் சதி.
நமது உயர்வுக்குக் கேடு செய்ய வேண்டும்
என்ற நோக்கோடு நிகழ்த்தப்படும்
வஞ்சகச் செயல்.
இதை எல்லாம் பெரிய விசயமாக
எடுக்காதே. விட்டுவிடு என்று
சொல்லுபவர்களுக்கு அது எளிது.
"தீயினால் சுட்டபுண்உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு"
என்றார் வள்ளுவர்.
தீயினால் சுட்டது புண்.
அது நாளடைவில் ஆறிப்போகும்.
ஆனால் நாவினால் சொல்லும் சூடு சொல்
வடுவாகிப் போகும். என்றும் நம்மால்
மறைக்க முடியாத வடுவாகக் கண்முன்
நிற்கும். பார்க்கும்போதெல்லாம் அவமானமாக இருக்கும்.
அவமானத்தை வெறுமனே அவமானமாக எடுத்துக்
கொள்ளாமல் வெற்றியை நோக்கிய நகர்ச்சியாக
எடுத்துக் கொள்பவர்களும் உண்டு.
சின்ன வயதில் சரியாக பேசமுடியாத
நிலையில் இருந்ததால்
திக்குவாயன் ...திக்குவாயன் என்று
எல்லோரும் கிண்டல் செய்தனர்.
அவமானத்தால் கூனிக்குறுகிப் போன
சிறுவன் அம்மாவிடம் வந்து முறையிட்டான்.
" கூழாங்கற்களை வாயில் போட்டு
பேசப்பழகு ....உன்னால் மற்றவர்களைவிட நன்றாகப்
பேச முடியும் "என்றார் அம்மா.
நாளும் பயிற்சி செய்தான்.திக்குவாய்
போயே போனது.
சிறு வயதில் திக்குவாயன் என்று
அவமானப்படுத்தப்பட்ட அந்தச் சிறுவன்தான்
உலகப் புகழ்பெற்ற
பேச்சாளர் டெமாஸ்தனிஸ் .
முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம்
லிங்கனுக்கும் இப்படிப்பட்ட ஒரு அவமானம்
நிகழ்ந்ததாம்.சாதாரண குடும்பத்தில்
பிறந்த ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க அதிபர்
ஆவதற்கு முன்பாக அரசு அலுவலகம்
ஒன்றுக்குச் சென்றிருக்கிறார்.
அலுவலகத்தில் இருந்த அதிகாரிக்கு லிங்கனின்
முகத்தைப் பார்த்ததும் கிண்டலடிக்க வேண்டும்
என்று தோன்றி இருக்கிறது. அதனால்
பிற அலுவலர்கள் முன்பாக வைத்து
குரங்கு மூஞ்சி என்று சொல்லிவிட்டார்.
லிங்கனுக்கு அவமானமாக இருந்திருக்கிறது.
ஆனால் என்ன செய்வது? சொன்னது அதிகாரியாயிற்றே...
எதுவுமே சொல்லாமல் அந்த இடத்தைவிட்டு கடந்து
வந்துவிட்டார். அவமானத்தால் நெஞ்சைப் பிளந்ததுபோல்
இருந்தது.அப்படியே கூனிக்குறுகிப் போனார்.
மனதிற்குள் இருந்த வருத்தத்தை வெளியில்
காட்டிக் கொள்ளவில்லை.
பல தோல்விகளைச் சந்தித்தாலும் விடாமுயற்சியாகப்
போராடி வெள்ளை மாளிகையை அலங்கரிக்கும்
அமெரிக்க அதிபர் என்ற உயர் பதவியைப்
பெற்றுவிட்டார்.
அத்தோடு நின்றுவிடவில்லை. தன்னை அவமானப்
படுத்திய அந்த அதிகாரியை நினைவில் வைத்து
உயர்பதவி கொடுத்து கௌரவித்தார்.
அனைவரும் ஆச்சரியப்பட்டுப் போயினர்.
உங்களைக் குரங்கு மூஞ்சி என்று
சொல்லி அவமானப்படுத்தியவனுக்கு
உயர் பதவியா...என்று கேட்டனர்.
" நான் காயப்பட்டது உண்மை.
ஆனால் அவர் அன்று என்னைக் காயப்படுத்தி
இருக்காவிட்டால் எனக்குள் இந்தப் பதவியை
அடைந்தே ஆகவேண்டும் என்ற வைராக்கியம்
வந்திருக்காது. நான் என்னை இந்த நிலைக்கு
உயர்த்தி இருக்கவும் முடியாது "என்றார்
ஆபிரகாம் லிங்கன்.
ஜெயிக்க வேண்டும் என்ற உத்வேகம்
உள்ளுக்குள் கனன்று கொண்டே
இருக்க வேண்டும்.
அது நடைபெறும்வரை ஓயாதவர்கள்தான்
வெற்றியாளர் ஆகின்றனர்.
ஆபிரகாம் லிங்கன் தனக்கு இழைக்கப்பட்ட
அவமானங்களை வெகுமானங்களாக எடுத்து
உழைத்தார். உலக வரலாற்றில் இடம்பிடித்தார்.
ஆயிரம் உறவுகள் தரமுடியாத
பலத்தை ஒரு அவமானம் தந்துவிடும்.
அவமானம் வந்துவிட்டதே என
வெகுண்டெழுவதில் எந்த பலனும்
கிடைக்கப் போவதில்லை.
அவமானத்தைத் தன் தன்மானத்திற்கு
விடப்பட்ட சவாலாக எடுத்துக்
கொண்டால் மட்டுமே தன்னை அவமானப்
படுத்தியவர்களை ஜெயிக்க முடியும்.
அது அவர்கள் தன்னம்பிக்கை.
அதற்காக அவமானப்படுத்துவது பெரிய
குற்றமல்ல என்று நினைத்துவிடாதீர்கள்.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில்
உள்ள சிறுவன் குவாடனின் வீடியோவை பலர் இணையத்தில்
பார்த்திருக்கலாம்.பள்ளியில் உடன்படிக்கும்
மாணவர்கள் குள்ளையன் என்று சொல்லி
கிண்டல் செய்துவிட்டனர்.இயல்பாகவே
தான் மற்றவர்களைப் போல இல்லையே என்ற
தாழ்வுமனப்பான்மை அந்தச் சிறுவனைப்
பிடுங்கித் தின்றிருக்கும்.
போதாக்குறைக்கு உடன் பயிலும்
மாணவர்களின் கிண்டலும் கேலியும்
அந்தப் பிஞ்சு உள்ளத்தை அப்படியே பிய்த்து
வீசிவிட்டது. பள்ளியில் இருந்து ஓடிவருகிறான்.
அம்மாவைக் கட்டிப்பிடித்துக் கதறுகிறான்.
" ஒரு கயிறோ ......கத்தியோ
இருந்தால் என்கிட்ட கொடுங்கம்மா..
நான் செத்துடறேன் "என்கிறான்.என்னை யாராவது கொன்னுடுங்களேன்...
என் நெஞ்சிலேயே குத்திட்டு செத்துப் போகிறேன்"
என்று கதறுகிறான்.
அம்மாவுக்குத் தாங்க முடியவில்லை.
பெற்றப் பிள்ளை மனம் நொடிந்துக்
கலங்குவதை அப்படியே வீடியோ
பதிவிட்டிருந்தார். பார்த்தவர்கள்
உள்ளம் பதறுகிறது.
கண்ணீர் வடிகிறது.
ஒன்பது வயது குழந்தை. வளர்ச்சியில்லாமல்
பிறந்தது அவன் குற்றமா...யார் குற்றம்?
பிறப்பு உன் கையில் இல்லை.
இறைவன் படைப்பு அப்படி என்று
சமாதானப்பட்டுக் கொள்கிறோம்.
அப்படி என்றால்...யாரை நொந்து கொள்வது?
கிண்டல் ஒரு பிஞ்சு உள்ளத்தை எவ்வளவு
காயப்படுத்தியிருக்கிறது பாருங்கள்!
இனியாவது மாற்றுத் திறனாளிகளைக்
கிண்டல் செய்து அவமானப்படுத்தாமல்
இருப்போம்.
அவமானங்களை உணர்வுப் பூர்வமாக
எதிர் கொள்ளும்போதுதான் தற்கொலைகள்
நிகழ்கின்றன.
"நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு "
என்றார் திருவள்ளுவர்.
விளையாட்டுக்காகக்கூட ஒருவரை இகழ்ந்து
பேசிவிடாதீர்கள். அது அவர்களுக்கு மிக்கத்
துன்பத்தைக் கொடுக்கும் என்று
வள்ளுவர் சொல்கிறார்.
பள்ளியில் விளையாட்டாக மற்ற சிறுவர்கள்
சொன்ன வார்த்தை அந்தச் சிறுவனை
எப்படி காயப்படுத்தியிருக்கிறது பாருங்கள்.
விளையாட்டு வினையாக முடிந்துவிடும்.
அவமானப்படுத்தும் எண்ணம் வேண்டவே வேண்டாம்.
Comments
Post a Comment