வலவன் ஏவா வான ஊர்தி

வலவன் ஏவா வான ஊர்தி 


புறநானூறு பாடல் என்றாலே மன்னர்களைப்

புகழ்ந்து பாடுவதாகத்தான் இருக்கும்.

மிகையான புகழ்தல் இருக்கும்.

காரணம் அப்போதுதான் பரிசில்

கிடைக்கும் என்று அவ்வாறு 

புலவர்கள் பாடுவர்.

ஒரு சில புலவர்கள் மன்னன் தவறு செய்தால்

இடித்துரைப்பதாகவும் பாடல்கள்

பாடியுள்ளனர்.

தூது போன வரலாறும் உண்டு.


எனினும் புலவர்கள் என்றால்

பரிசிலுக்காகப் பாடுபவர்கள் என்ற எண்ணம் 

பரவலாக அனைவர் மனதிலும்

இருப்பதுதான் உண்மை.


பரிசிலுக்காகப் பாடுவதாக இருந்தாலும்

அதில் உலகியல் இருக்கும்.

உணர்வு இருக்கும்.

நம்மைச் சுற்றி நடக்கும்

எதார்த்தத்தை உணர்த்துவதாக இருக்கும்.



மன்னனுக்கு மட்டுமல்லாது

 நமக்கும் சில செய்திகள்

சொல்லப்பட்டிருக்கும். அதனால்தான்

இன்றுவரை புறநானூற்றுப் பாடல்கள்

நம்மால் கொண்டாடப்பட்டு வருகின்றன.




இதோ  கீழே கொடுக்கப்பட்டுள்ள பாடலை

வாசியுங்கள். 

சோழன் நலங்கிள்ளியை

உறையூர் முதுகண்ணன் சாத்தன் என்னும் புலவர்

புகழ்ந்து பாடுகிறார். பாடல் பரிசிலுக்காகப்

பாடப்பட்டதாக இருக்கலாம்.


பாடலுக்குள் அவர் பொதிந்து தந்திருக்கும்

கருத்து என்ன என்று பாருங்கள்.

உலக நிலைமை இதுதானா என்று

மலைப்பாக இருக்கும்.

தொலைநோக்குப் பார்வையோடு

கூடிய ஒரு சிந்தனை இருக்கும்.




பாடல் உங்களுக்காக



சேற்றுவளர் தாமரை பயந்த ஒண்கேழ்


நூற்றிதழ் அலரின் நிறைகண் டன்ன


வேற்றுமை இல்லா விழுதிணைப் பிறந்து


வீற்றிருந்தோரை எண்ணுங் காலை


உரையும் பாட்டும் உடையோர் சிலரே


மரைஇலை போல மாய்ந்திசினோர் பலரே;


புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்


வலவன் ஏவா வான ஊர்தி


எய்துப என்பதம் செய்வினை முடித்தெனக்


கேட்பல்; எந்தை! சேட்சென்னி! நலங்கிள்ளி!


தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும்


மாய்தல் உண்மையும் ,பிறத்தல் உண்மையும்


அறியா தோரையும் அறியக் காட்டித்


திங்கட் புத்தேள் திரிதரும் உலகத்து


வல்லோர் ஆயினும் வல்லுநர் ஆயினும்


வருந்தி வந்தோர் மருங்கி நோக்கி


அருள வல்லை ஆகுமதி; அருளிலர்


கொடா அமை வல்லர் ஆகுக


கெடாஅத் துப்பினின் பகை எதிர்ந் தோரே!

                      -  புறநானூறு

     பாடியவர் : முதுகண்ணன் சாத்தன்


விளக்கம்:


தாமரை சேற்றில் பிறக்கிறது.

ஒளி பொருந்திய தாமரை இதழ்கள்

வரிசையாக ஒரு ஒழுங்குடன்

வேறுபாடு இல்லாது அமைந்திருக்கிறது.


அதுபோல வேற்றுமையில்லா ஒரு குடியில்

பிறந்து அரசுக் கட்டிலில் வீற்றிருக்கும்

வேந்தர்கள் பலர் உண்டு.

அப்படிப்பட்டவர்களை எல்லாம்

எண்ணிப் பார்ப்போமானால்

புலவர்களால் புகழ்ந்து பாடும்

பெருமை ஒரு சில மன்னர்களுக்கு

மட்டுமே வாய்க்கப் பெற்றிருக்கும்.



மற்றவர்கள் எல்லாம் தாமரை இலை மாய்ந்து

போவதுபோல எந்தப் பயனுமின்றி

மாய்ந்து போனவர்களாகவே இருப்பர்.



புலவர்களால் புகழப்படும்

பெருமை வாய்க்கப் பெற்ற மன்னர்களுக்கு

ஒரு சிறப்புத் தகுதி உண்டு.

அது என்னவெனில்

இவ்வுலகில் தாம் ஆற்ற வேண்டிய 

நற்பணிகள் எல்லாம் செய்து முடித்த

பின்னர் அவர்கள் பாகன் இல்லா வான ஊர்தியில்

ஏறி வானுகம் செல்வர் என்று

சான்றோர்கள் சொல்வதைக்

கேள்விப்பட்டிருக்கிறேன்.



மன்னா!


 வளரும் தன்மை கொண்ட

ஒன்று தேய்தலும் 

தேயும்

தன்மை கொண்ட ஒன்று

வளர்தலும் உலக இயல்பு.


பிறந்த ஒன்று இல்லாமல் போவதும்

இல்லாமல் போன ஒன்று மறுபடியும்

கிடைப்பதும்  நடைமுறை வாழ்வில்

நிகழக்கூடிய ஒன்று.


இதனை உணர்த்துவதற்குத்தான்

திங்கள் என்னும் தெய்வம் தேய்வதும்

வளர்வதுமாக நம் கண்முன்னே

வானில் வலம் வந்து

கொண்டிருக்கிறது.


வல்லவரோ வலிமையற்றவரோ

அறிஞரோ அறிவிலியோ

யாராக இருந்தாலும்

வருத்தமுற்று வந்தோரை 

 அவர்கள்  உடல் வாட்டத்தின் மூலம்

கண்டு அவர்கள் கேட்கும் முன்னரே 

வேண்டும் மட்டும் அருள் செய்து

வழங்குவதில் வல்லவன் நீ !


மிக்க வலிமை கொண்ட

என் மன்னாகிய

நலங்கிள்ளியே!

உன்னை எதிர்ப்போர் தாங்கள் வாழுங்காலத்தில்

அருளில்லாதவர்களாகதான் இருக்க வேண்டும்.

அவர்கள் ஈகைத்தன்மை யற்றவர்களாக

 ஆகுவார்கள் ஆகுக" 

 

என்று பாடியிருக்கிறார் முதுகண்ணன் சாத்தன்.


மன்னா! நீ புலவர் பாடும் பெருமைக்கு

உரியவன். வான ஊர்தி ஏறி

வானுலகம் செல்லும்  தகுதி

உனக்கு மட்டுமே உண்டு என்று

சொல்லி கடந்து போகவில்லை.

வானில் வலம்வரும் நிலவு 

வளர்வதும் தேய்வதும் 

இருப்பதும் இல்லாமல் போவதும் 

உலகம் இப்படிப்பட்டதுதான்

என்று உணர்த்துவதற்குதான் என்று அருமையான

ஓர்  இயற்கை நிகழ்வைக் கண் முன்

கொண்டு வந்து நிறுத்தி,

 இந்த நிலவு

மூலமாகவும் நமக்குச் சொல்லப்படும்

ஒரு  செய்தி ஒன்று இருக்கிறது எனப் புரிய வைத்துள்ளார் .


அடுத்து அவர் கூறிய கருத்துதான்

அனைவரையும் புருவம் உயர்த்திப்

அண்ணாந்து பார்க்க வைத்துள்ளது.


"வலவன் ஏவா வான ஊர்தி"


அது என்ன வலவன் ஏவா வான ஊர்தி?

அப்படிப்பட்ட ஊர்தி எதுவாக இருக்கும் என்று கேட்க வைக்கிறது.


மாலுமி இல்லாமலேயே இயக்கப்படும்

வானூர்தி என்பதுதான் இதன் பொருள்.


மாலுமி இல்லாமல் வானூர்தி இயக்கப்படுதல்

சாத்தியமா என்ற கேள்வி எழலாம்.


இன்றைய காலகட்டத்தில்

எல்லாம் சாத்தியமே!


 சாத்தியமில்லை என்று கருதப்பட்டக் காலத்தில்

 ஒருநாள் சாத்தியமாகும் என்று

 அப்படி ஒரு சிந்தனைக்கு வித்திட்டிருக்கிறார்

 முதுகண்ணன் சாத்தன்.

 

வான ஊர்தி இல்லாக் காலத்தில்

வலவன் ஏவா வான ஊர்தி

பற்றிய சிந்தனையை ஊட்டிய முதுகண்ணன்

சாத்தனின் அறிவியல் சிந்தனையை

என்னவென்பது?



தமிழ்ப் பாடல்கள் வெறும் சொல்

விளையாட்டல்ல. 

நாளைய ஆக்கப்பூர்வமான

சிந்தனைகள் விதைப்பட்ட 

விளைநிலம்.

அவர்கள் அன்று விதைத்துச் சென்ற

சிந்தனைகள் தான்

இன்று செயலாக்கம் பெற்றிருக்கிறது.

 கண்டம் விட்டு கண்டம் கண்டம் தாண்டும் வானூர்திகள் நம் கண் கண்முன் பறந்து

கொண்டிருக்கிறது.


இது சாத்திய மில்லை என்று நினைத்திருந்த காலத்தில் சாத்தியமாகும் என்ற

சிந்தனை தமிழிலிருந்து வந்தது

என்று நாம் மார்தட்டிக் கொள்வதற்கு

இதுவே நற்சான்று.


Comments