கனவினில் ஔவை

கனவினில் ஔவை 


நார்க்கட்டிலில் 

நாடி வானம் பார்க்க

மூடி கண்கள் இருக்க

மெல்ல தொட்டதொரு விரல்



விழிகள் திறக்க மறுக்க

கைகள் மட்டும் சிலிர்க்க

கேள்வி கேட்க மனம் நினைக்க

நா எழும்ப மறுக்க

செவி மடலுக்குக்குள்

 ஒரு  சலசலப்பு

சிற்றெறும்பு கடித்ததொரு 

சிலுசிலுப்பு


செவி மடலைத் தழுவி

செவி தீட்டி

கவனம் திரட்டி

குரல் அடையாள

வகுப்பு நடத்தி

குழம்பிய மனதோடு 

 காத்திருந்தேன்

வெற்றுக் காற்று 

வெப்பமொடு வந்து முட்ட

கண் முன் ஏதோ 

அசைவாடும் உணர்வு 


யாரென்று  குரல் அதட்ட

முட்ட வந்தவள் 

இதழ்குவிக்க

முத்துக்களைச் சிதற விட்டு

வேடிக்கை காட்டி நின்றாள்


மயங்கிக் கிடந்த என்னிடம் 

வேசம் கட்டிய நான் 

வேசக்காரியுமல்ல

மோசக்காரியுமல்ல 

யாரென்று நீர் உரைத்தால்

சாகா மருந்தொன்று தருவேன்

வேகா வெயிலில் 

சுட்டப் பழம் எடுத்து வந்தேன்

சுவைத்திட விருப்பமோ 

எனக் கரம் நீட்ட


சாகா மருந்து தர 

இவளென்ன

சஞ்சீவி பர்வதத்துக்

காரிகையா?

முட்டுக் கொடுத்து நடக்கும்

இவள் முதுமகளா

முழு முடமா?

யாரிந்த கிழவி?

ஏனிந்த விடுகதை?

விடுகதை அவிழ்ப்பில்

சிந்தை சிதற


வானம் வெள்ளியை 

அள்ளித்தூவி

மெல்ல கண் சிமிட்ட

விடியல் வந்துவிடுமோ என்ற 

அச்சத்தில் அடியெடுத்து 

அடுத்த கேள்விக் 

கணை தொடுக்க

நான் முனைய


அச்சமில்லா குலமகள்

மிச்சமில்லாமல் 

கூடுதலாய்ப்

பேசி நின்றாள்


பேதையென்று 

உனை நினைத்தேன்

பேச்சில் புலமை 

தெரிகிறது யாரென்று

நானறியேன் 

புலமை நிற்கும் இடத்தில்

பேரிளம் பருவத்தாள்

நிற்கிறாள்  

பட்டறிவு பட்டறை

இருப்பது புரிகிறது 

ஆத்தி....யாரென்று

தெரியலியே என்று

 நான் வியக்க


ஆத்திசூடி உரைத்து வந்தேன்

நாலு கோடி வாங்கியும்

நா கூழுக்கு அலைகிறது

 நல்வழி சொன்ன எனக்கு

அவ்வழி அதியனொடு 

அதிநெருக்கம் உண்டு 

அரண்மனை போகும் வழி

தெரியாது நிற்கிறேன் 


நடுவெயிலில்

பொடிநடையாய்

அரசனைக் காண விழைந்து

வந்தேன் அடிசுடும் மணலில்

அடி வைக்க 

முடியவில்லை 

ஆற்றுப்படுத்துவார் இல்லை

அங்கிங்கு அலைகிறேன்

என்று பேருரையாற்றி

பக்கத்தில் வந்து 

அமர்ந்துவிட்டார்



யார் நீ என்று கேட்டு

நானும் என் தரம் தாழ்த்த

நினைக்கவில்லை

நல்வழி‌ தந்த உமக்கு

எவ்வழி உரைப்பதென்றேன்

நெல்லிக்கனி உண்டோ

எனக் கென்று 

கேட்டுச் சிரித்தேன்


என் கவி யாவும்

நெல்லிக்கனிதாம் தாயே

சாகாவரம் தரு அருமருந்து 

அசைபோட்டுப் பார்

ஆழ்ந்த பொருள்பொதி

சுவை அறிவாய்

ஏடொன்றை 

கையில் தந்தவளைக் 

காணக்  கண் திறந்தேன்

கனவில் வந்து

கவி சொன்ன கிழவி

காணாது மறைந்து போனாள்.


கவி மட்டும் காதுகளில் 

கணீரென்று ஒலித்துக் 

கொண்டிருக்கிறது

இன்றுவரை....


















 

Comments