தமிழ் விளையாட்டு

தமிழ் விளையாட்டு 


14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த

தமிழ்ப் புலவர்களுள் குறிப்பிடத்தக்க

சிறப்பு வாய்ந்தவர்கள் முதுசூரியன்,

இளஞ்சூரியன் என்ற 

இரட்டைப் புலவர்கள் ஆவர்.

இந்த இரட்டையர்கள் எங்கு

சென்றாலும் இருவரும் சேர்ந்தேதான்

செல்வர். இவர்களுள் ஒருவருக்கு கண்

பார்வை கிடையாது.

மற்றொருவரால் நடக்கமுடியாது.

கண் தெரியாதவர் காலில்லாதவரைத்

தோளில் சுமந்து கொண்டே

செல்வார்.

காலிலில்லாதவர் வழி காட்ட

கண்ணில்லாதவர் சுமக்க என்று 

இவர்கள் பயணம் இருக்கும்.

இருவருமே நல்ல புலமை

மிக்கவர்கள் இவர்கள் பாடல்களில்

தமிழ் கொஞ்சி விளையாடும்.

சொற்களை வைத்து

 விளையாட்டுக் காட்டும் 

வித்தை இவர்கள் பாடல்களில்

மிகுதியாக இருக்கும்.




கலம்பகம் பாடுவதில் வல்லவர்கள்

என்பதால் 

"கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்"

என்று இவர்கள் புகழ்ப்பட்டனர்.

இவர்களுடைய பாடல்கள் அனைத்தும்

முன் பாதியை

ஒருவர் பாட பின்பாதியை இன்னொருவர்

பாடி முடிப்பதாகவே இருக்கும்.


அப்படி இவர்கள் பாடிய 

பாடல்களுள்  ஒன்று உங்களுக்காக....




"அக்காலைப் பொழுதினிலே

முக்காலை ஊன்றி

மூவிரண்டு போகும்போது

ஐந்து தலை நாகமொன்று

ஆழ்ந்து கடித்ததுவே"


என்று முதுசூரியன் பாட


"பத்துரதன் புத்திரனின்

மித்திரனின் சத்துருவின்

பத்தினியின்

கால் வாங்கி தேய்"


என்று பாடி பாடலை முடித்து வைத்தார்

இளஞ்சூரியன்.


ஒன்றும் புரியவில்லை இல்லையா?


ஒருவன் மருத்துவரிடம் சென்றிருக்கிறான்.


மருத்துவரும் என்ன செய்கிறது

சொல்லுங்க என்று சாதாரணமாக

கேட்டிருக்கிறார்.


வந்தவர் தமிழ் மேதை.


உடனே,

"அக்காலைப் பொழுதினிலே

முக்காலை ஊன்றி

மூவிரண்டு போகும்போது

ஐந்து தலை நாகமொன்று

ஆழ்ந்து கடித்ததுவே"


என்றிருக்கிறார்.


மருத்துவரும் நல்ல தமிழ் அறிந்தவர்தான்.

ஒரு புன்னகையோடு

மருத்துவத்தைப் சொல்லத் தொடங்கினார்.

"பத்துரதன்  புத்திரனின் 

மித்திரனின் சத்துருவின்

 பத்தினியின்

கால் வாங்கி தேய்"


என்று சாதாரணமாக சொல்லிவிட்டு

வந்தவரின் முகத்தைப் பார்த்திருக்கிறார்.

வந்தவர் முள்ளை எடுத்துவிட்டு

காலைத் தரையில் தேய்த்துக்

கொண்டே நின்றிருக்கிறார்.


ஏன் அவர் காலைத் தரையில்

தேய்த்தபடி நின்றுகொண்டிருந்தார்?

ஒருவேளை அவருக்கும் நம்மைப்போல் பாடல்

புரியவில்லையோ என்றுதானே

நினைக்கிறீர்கள்?

அதுதான் இல்லை.

அவருக்குப் புரிந்ததால் தான்

காலைத் தரையில் தேய்த்துக்

கொண்டு நின்றார்.


இன்னும் புரியவில்லையா?


புரியும்படி சொல்கிறேன் கேளுங்கள்.

ஒருவர் காலை நேரத்தில் இரண்டு

காலோடு மூன்றாவது காலான

ஊன்றுகோலை ஊன்றியபடி,

ஆற்றுக்குப் போகும்போது (மூவிரண்டு ஆறு)ஐந்து

முட்கள் கொண்ட நெருஞ்சி முள்ளொன்று

ஆழமாக குத்தி விட்டது .

என்று பாடலிலேயே சொல்லி இருக்கிறார்.

அதற்கு  மருத்துவரும்,


"பத்துரதனான தசரதனின்

புத்திரன் அதாவது  தசரதனின்

மகன் ராமன்.

ராமனின் மித்திரன் அதாவது

நண்பன் சுக்ரீவன்.

சுக்ரீவனின் சத்துரு அதாவது

சுக்ரீவனின் எதிரி வாலி.

வாலியின் பத்தினி அதாவது மனைவி

தாரை.

தாரை என்ற பெயரில் இருக்கும் தா 

என்ற சொல்லிலுள்ள காலை

எடுத்து விட்டால் 'தா 'என்ற எழுத்து' த'

என்றாகிவிடும். இப்போது தாரை

தரை என்றாகிவிட்டது.

காலைத் தரையில் தேய்.

எல்லாம் சரியாக போய்விடும் "

என்பதைத்தான் மருத்துவர்  பாடலாலேயே

பதில் சொல்லியிருக்கிறார்.


"முள்ளை எடுத்துவிட்டு காலைத்

தரையில் தேய்"  என்று

ஒற்றை வரியில்

சொல்லியிருக்கலாம்.

அதற்கு இப்படி ஒரு பதிலா?

பாடலிலேயே ராமன் கதை கூறி,

வாலி-தாரை இணையரை நம்

கண்முன் கொண்டு வந்து நிறுத்தி, நம்மையும் காலைத் தரையில் தேய்க்க வைத்து விட்டார்.

இனி நெருஞ்சி முள்ளைப் பார்க்கும்போதெல்லாம் கால் தானாக

தரையில் கோலம் போட்டுவிடும்

இல்லையா?

மறுபடியும் ஒருமுறைப் பாடலைப் படியுங்கள்.

தமிழ் எப்படி எல்லாம் விளையாடியிருக்கிறது

என்பது புரியும்.

நல்ல நோயாளி...நல்ல மருத்துவர்.
மருத்துவரால் நோயாளி மட்டும் வாழவில்லை. தமிழுமல்லவா வாழ்ந்திருக்கிறது.

தமிழ் எங்கெல்லாம் விளையாடியிருக்கிறது பாருங்கள்.!



Comments