சென்ற இடமெல்லாம் சிறப்பு

சென்ற இடமெல்லாம் சிறப்பு 


பேரும் புகழுமாய் வாழ வேண்டும்.

சீரும் சிறப்பும் பெற வேண்டும்.

பணம் மிகுதியாய்க் குவிய வேண்டும்.

பதவி வந்து அணியம் செய்ய வேண்டும்.

இவைதான் அனைவரின் ஆசையாக

இருக்கும்.

இதற்கு நானும் நீங்களும் விதிவிலக்கல்ல.

இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

ஏதாவது வழி இல்லாமலா இருக்கும்?

இதோ அதற்கு ஒரு வழி சொல்லித் தருகிறார்  பாரதிதாசன் .


"ஏழையையும் நல்ல

பணக்காரன் ஆக்கும் படிப்பு"

என்கிறார் 


பணக்காரன் ஆக வேண்டுமா?

படியுங்கள் என்று சொல்லித் தந்துவிட்டார் .

அப்படியானால் எப்படியாவது படித்து

கை நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் .

காணி நிலம் வாங்க வேண்டும்.

அதில் என்னென்னவெல்லாம் இருக்க வேண்டும் என்ற பாரதியின் கனவு மனதினுள் வந்து போக அண்ணாந்து பார்த்து கட்டிலில் மல்லாந்து கிடந்து மனக்கோட்டைக் கட்டினேன்.

இடையில் இன்னும் சில கேள்விகள் குறுக்கே வந்து கட்டையைப் போட்டு
நிற்க....நெடிய சிந்தனையில் கண்மூடிக்
கிடந்தேன்.

பணம்  என்ற ஒன்றை மட்டும்தான்

 கல்வி தருமா?


பேரும் புகழும் சீரும் சிறப்புமாக

வாழ வேண்டுமே. அதற்கு என்ன செய்வது?  


பணக்காரன் உள்ளூர்விட்டு 

வெளியில் சென்றுவிட்டால்

யாருக்குத் தெரியும்?

நாலுபேருக்குத் தெரிய வேண்டும்.

நல்லவர் மதிக்க வேண்டும்

என்றால் என்ன செய்ய வேண்டும்?


என்ன செய்யலாம்.... யாரிடம் கேட்கலாம்?


யாரைக் கூப்பிடுவது....கண்ணுக்கெட்டும்வரை
யாரும் தெரியவில்லை...
கண்கள் கெட்ட கண்மூடிக் கிடந்தேன்.

கண்முன் ஔவை அசைவாட
வெறுங்கை பிசைந்து காலால் கோலமிட்டு முகம் நாணிக் கோணி நின்றேன்.

கேட்போமா வேண்டாமா என்று 
உதடுகள் வடக்கும் தெற்குமாக
விரிய...

இன்று என்னவொரு ஐயத்தை
அள்ளி  வந்திருக்கிறாய் என்று
என் மௌனம் கலைத்தார் ஔவை.

ஐயமா...எனக்காக...நானா...
ஆமாம்...ஆமாம்... ஐயம் தான் என்றேன்
பிதற்றியபடி.

என்ன ஐயம்?கேட்டால்தானே தீர்த்து வைக்க முடியும் என்றார்.

ஆமாம் உங்களால் முடியும்...


.ஔவையே.....மன்னன் 

மற்றும் கற்றவர் இவர்களில்

யார் சிறந்தவர்?"


"இதிலென்ன ஐயம்?

கற்றவர்கள்தான் சிறப்பானவர்கள்."


"அதெப்படி? கற்றவரும் கல்லாதவரும்

மன்னரின் கீழ்தானே....

ஆனால் அவன் நாட்டைவிட்டு வெளியேற

சென்றுவிட்டால்....

அவன் மன்னனுக்கு இருந்தாலும்

மதிப்பு இல்லை.

மன்னனுக்கே மதிப்பு இல்லை என்றால்...

வேறு யாருக்குத்தான் மதிப்பு?


அதெப்படி? கற்றவரும் கல்லாதவரும்

மன்னரின் கீழ்தானே....

இப்படியிருக்க கற்றவர் தான் சிறந்தவர் என்று

எதை வைத்து இப்படி 

நீங்கள் முடிவு செய்தீர்கள்?"


நாட்டிற்குத் தலைவன் மன்னன்.

முதன்மையானவர்.

மதிப்பிற்குரியவவர்.

சிறந்தவர்.

மறுப்பதற்கில்லை.

ஆனால் வெளியில்....

மன்னனுக்கு மதிப்பு இருக்காது.

ஆனால் கற்றவருக்குச் சென்ற 

இடமெல்லாம்

சிறப்பு....மதிப்பு...."


அரசனையும் கற்றவரையும்

ஒப்பிட்டுப் பார்த்தால்

 கற்றவரே மேலானவர்.

சிறப்புக்குரியவர்.


சொல்கிறேன் கேள் என்று பாடல் பாடி

கையில் கொடுத்தார்.இதோ பாடல் 

உங்களுக்காக.....


"மன்னனும் மாசறக் கற்றோனுஞ் சீர்தூக்கின்

மன்னனிற் கற்றோன் சிறப்புடையன்-

மன்னர்க்குத்

தன்தேசம் அல்லால் சிறப்பில்லை

கற்றோர்க்குச்

சென்ற இடம் எல்லாம் சிறப்பு"

   மூதுரை : பாடல் 26


 

என்ற பாடலைப் பாடிவிட்டு

அவர் பாட்டுக்குக் கடந்து சென்று

விட்டார்.

நான் இன்னும் அங்கேயே நின்று

கொண்டிருக்கிறேன் 

கையில் பாடலோடு!


 கல்வி வேண்டும்.

கல்வி இருந்தால் ...

எங்கே சென்றாலும் மதிப்பு கிடைக்கும்.

மன்னனுக்கு தன் தேசம்

அல்லாது வெளியில் சிறப்பில்லை

கற்றோர்க்குச் சென்ற 

இடமெல்லாம் சிறப்பு.

உண்மைதானே....

ஔவை சொல்லுக்கு மாற்றேதும்

உண்டோ?


Comments