கண்ணான கண்ணே....
கண்ணான கண்ணே....
கண்ணான கண்ணே ! கண்ணான கண்ணே!
கண்ணில் வைத்து கொஞ்சிட வைத்தாய்
கள்ளம் தவிர்த்து மெல்லச் சிரித்தாய்-
பெண்ணே
பேதை என்றழைக்க வைத்து பெருமிதம்
தந்தாய்!
வளர்ந்தாய் கால் தறித்திட மறுத்தாய்
விளையாட்டே உலகமென நினைத்தாய்
விளையாட்டுக்காட்டி வீதிக்கு இழுத்தாய்- பெண்ணே
பெதும்பையாய்ப் பேரன்பு செய்தாய்!
உணர்ந்ததை உரையாய் உதிர்த்தாய்
உன்னில் என்னைக் கட்டியே வைத்தாய்
மமதையில் மனமதைக் கவர்ந்தாய்- பெண்ணே
மடந்தையாய் எம் மனதினில் நிறைந்தாய்!
மாசிமாத கொண்டலாய் வலம் வந்தாய்
மாலை நேரத் தென்றலாய் இதம் தந்தாய்
மயங்கிட வைத்து மனமதை துவைத்தாய்- பெண்ணே
மங்கையாகி மலர்ந்து மணம் தந்தாய்!
இல்லறம் புகுந்தாய் நல்லறம் வகுத்தாய்
இமையாய் இருந்து எம்மைக் காத்தாய்
இல்லமெங்கும் மகிழ்வால் நிறைத்தாய்- பெண்ணே
அரிவையாகி அன்பால் எம்பால் கலந்தாய்!
உலக விழுமியம் சொல்லித் தந்தாய்
உன்னில் எம்மை கண்டிட வைத்தாய்-
உலகொடு உடன் நடைபயின்றாய்- பெண்ணே
தெரிவை யானென்று தெரிய வைத்தாய்!
ஊராண்மையோடு வீட்டாளுமை செய்தாய்
பேராண்மையில் பேருவகை கொண்டாய்
போராளியாய்ப் பெரும் பேராழியாய் - பெண்ணே
பேரிளம் பெண்ணாகிப் பேரறம் புரிந்தாய்!
எத்தனை எத்தனை பாத்திரம் ஏற்றாய்
எப்படி இப்படி வியந்திட வைத்தாய்
கண்ணின் கருவிழி என்றானாய்- பெண்ணே
காலமெல்லாம் என் வாழ்வே நீயானாய்!
இனிய மகளிர் தின வாழ்த்துகள்!
Comments
Post a Comment