ஈன்றெடுத்த தாய் வேண்டாள்
ஈன்றெடுத்த தாய் வேண்டாள்
"பணம் பத்தும் செய்யும்"
" பணம் இல்லாதவன் பிணம்"
" பணம் பந்தியிலே குணம் குப்பையிலே "
இப்படி பணமொழிகள் ஏராளம்.
இவை எல்லாம் வெறும் மொழிகள் அல்ல.
பணமில்லாமல் பட்டு ..பட்டு.. நொந்து நூலாகிப்
போனவர்கள் கூறிய அனுபவ மொழிகள்.
பணம் இல்லாமல் என்ன செய்ய
முடியும் சொல்லுங்கள்?
படிக்க வேண்டுமா பணம்.
மருத்துவமனைக்குப் போக வேண்டும் டுமா பணம்.
தவித்த வாய்க்குத் தண்ணீர் வாங்க
வேண்டுமா பணம்.
வயிற்றுப் பசிக்கு சோறு சாப்பிட வேண்டுமா பணம்.
திருமணத்தை நிச்சயிப்பது பணம்.
நிச்சயித்த திருமணத்தை நிறுத்தி
வைப்பதும் பணம்.
செத்தா பணம்.
செத்த பிணத்தைப் புதைக்கப்பணம்.
இடையில் எங்காவது பணமில்லாமல்
எதுவும் நடைபெறுகிறதா என்று
நினைவுபடுத்திப் பார்த்தால்....
ம்ஹும்....பணமில்லாமல் ஒன்றையும்
அசைக்க முடியாது.
இதுதான் எதார்த்த நிலைமை.
பேசுவதற்கு
வேண்டுமென்றால்
"பணம் என்னடா பணம்
குணம் தானடா நிரந்தரம்" என்று
சொல்லிக் கொள்ளலாம்.
நிஜ வாழ்க்கையில் பணமில்லாமல்
ஒன்றும்
சாத்தியப்படாது.
"பணம் இருப்பவன் பின்னாலும் பத்து பேர்;
பதவி இருப்பவன் பின்னாலும் பத்து பேர்."
இல்லாதவன் அநாதையாக நிற்க
வேண்டியதுதான்.
பணமில்லாதவன் பந்தியில் போய்
இருந்தாலும் ஏய்...இந்தாப்பா..
கடைசி பந்திவரை பொறு என்று
எல்லோரும் சாப்பிட்டு பசி அடங்கும்வரை
காக்க வைத்துவிடுவார்கள்.
பணம் இல்லாதவன் பரியாசத்துக்கு
உரியவனாகி விடுகிறான்.
பணம் உள்ளவனுக்கு
எங்கு சென்றாலும் சிகப்பு கம்பள வரவேற்பு
கொடுக்கப்படுகிறது.
இதையே வள்ளுவர்,
"இல்லாரை எல்லோரும் எள்ளுவர் செல்வரைச்
எல்லாரும் செய்வர் சிறப்பு "
என்கிறார்.
சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.
இதைவிட ஒருபடி மேலே போய் எப்படி
அருளில்லாருக்கு அவ்வுலகம் இல்லையோ
அதுபோல பொருளில்லார்க்கு இவ்வுலகம்
இல்லை என்றும் சொன்னவர்
அல்லவா வள்ளுவர்.
இதோ குறள் உங்களுக்காக....
"அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு "
பணம் இல்லை என்றால் எவ்வுலகிலும்
இடமில்லை .
இப்படி பணம் படுத்தும்பாட்டை
அறிந்ததால்தான் அனைவரும் பணத்தின்
பின்னால் ஓடுகின்றனர்.
"செய்க பொருளை" என்று வள்ளுவர்
சொல்லித் தந்ததுபோல
ஔவையும்,
"திரைகடல் ஓடி திரவியம்
தேடு "என்று கடல் கடந்து சென்றாகிலும்
பொருள் தேடு என்றார்.
" கற்கை நன்றே ;கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே"
என்று சொல்லி வைத்த பெருமக்கள்
கற்றால் மட்டும் போதாதுப்பா
பொருள் வேண்டுமப்பா என்று
உரக்க உரைத்துச் சென்றிருக்கின்றனர்.
கல்வி என்னப்பா கல்வி .உனக்கு மதிப்பும்
மரியாதையும் வேண்டுமா...உன்னிடம்
பணம் இருந்தால் போதும்.
எல்லா மதிப்பும் மரியாதையும் தானாக வந்து
சேரும் என்கிறார் ஔவை.
இது மட்டுமா சொல்லி இருக்கிறார்?
கேட்டால் அதிர்ச்சிக்குள்ளாகிவிடுவீர்கள்.
நாம் அதிர்ச்சி அடையும் படியாக
அப்படி என்ன சொல்லிவிட்டார் என்கிறீர்களா?
இதோ பாடல் உங்களுக்காக...
கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்றுண்டாயின்
எல்லாரும் சென்றங் கெதிர் கொள்வர் இல்லானை
இல்லாளும் வேண்டாள் மற் றீன்றெடுத்த தாய் வேண்டாள்
செல்லாது அவன் வாயிற் சொல் "
படிப்பு இல்லை என்றாலும்
உன்னிடம் பணம் இருக்குமானால்
உனக்கு
மரியாதை உண்டு.
வரவேற்பு கிடைக்கும்.
பொருள் இல்லை என்றால் மனைவி
மதிக்க மாட்டாள்.
ஏன் உன்னை பெற்ற தாய் கூட
மதிக்க மாட்டார்.
உன் பேச்சுக்கு எந்த இடத்திலும்
மதிப்பு கிடையாது.
பெற்ற தாய் கூட பணம் இல்லை என்றால்
மதிக்க மாட்டாரா?
அதிர்ச்சியாக இருக்கிறதல்லவா!
உண்மை. இதுதான் எதார்த்தம்.
எல்லாமே பணத்திற்குப் பின்னால்தான்..
உண்மையை உச்சந்தலையில் ஓங்கி அடித்து
சிந்திக்க வைகத்திருக்கிறார் ஔவை.
"இல்லானை இல்லாளும் வேண்டாள்
ஈன்றெடுத்த தாய் வேண்டாள் "
Comments
Post a Comment