பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க
ஆல்போல் தழைத்து
அறுகுபோல் வேரூன்றி
மூங்கில் போல் சுற்றம் சூழப்
பதினாறும் பெற்று
பெரு வாழ்வு வாழ்க!
திருமண வீடுகளில் மணமக்களை
வாழ்த்த அனைவரும் பயன்படுத்தும்
அழகு கவிதை இது.
எல்லோரும் வாழ்த்துகிறார்கள்.
நாமும் நன்றாக இருக்கிறது என்று
கேட்டுவிட்டு வந்து விடுகிறோம்.
மறுபடியும் அதே பாட்டு
இன்னொரு திருமண வீட்டில்.
இதுதான் காலம் காலமாக நடந்து
கொண்டிருக்கிறது.
நமக்கும் மனப்பாடம் ஆகிவிட்டது.
ஆல மரம் தெரியும்.
விரிந்து பரந்து கிளைகளைக் பரப்பி
நிற்கும்.
அறுகம்புல் தெரியும் அது வெட்ட வெட்ட அறுதிப் போகாது.
மறுபடியும் மறுபடியும்
வளர்ந்து வந்து கொண்டே
இருக்கும்.
மூங்கிலில் செய்த புல்லாங்குழலை
சிறுவயதில் பூ...பூ..என்று ஊதிப் பார்த்து
மற்றவர்கள் காதை செவிடாக்கி இருப்போம்.
மூங்கில் வளரும் இடத்தில் சுற்றி
குத்தாக நிறைய மூங்கில்கள்
வளர்ந்து வரும்.
இது என்ன பதினாறு?
அதுவும் பதினாறும் பெற்று பெரு வாழ்வு
வாழ வேண்டுமாம்.
ஒற்றைப் பிள்ளையோடு
படும்பாடு சொல்லி மாளவில்லை.
ஐந்து பெற்றாலே அரசனும்
ஆண்ட்ரியா வான்.
இதில் பதினாறு பெற்றுக்கொள்ள சொல்கிறார்களே!
தாங்குமா?
ஒற்றைச் சிரிப்போடு கடந்து வந்திருப்போம்.
இந்தப் பதினாறு என்ன
என்று ஒருமுறை கூட நாம் சிந்தித்திருக்கிறோமா !
பதினாறு பேறு என்பது மக்கட்பேறு அல்ல.
பதினாறு வகையான செல்வங்கள்
பெற்று நல்வாழ்வு வாழ்க என
வாழ்த்துவதாக அமையும்.
அபிராமி அந்தாதி பதிகப்பாடல்
ஒன்று இந்த பதினாறு வகையான
செல்வங்கள் எவை எவை எனக் கூறுகிறது.
அதில் அபிராமி பட்டர்,
கலையாத கல்வியும்
குறையாத வயதுமோர்
கபடு வராத நட்பும்
கன்றாத வளமையும்
குன்றாத இளமையும்
கழுபிணி யிலாத உடலும்
சலியாத மனமும்
அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும்
மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும்
கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும்
உதவிப் பெரிய தொண்டரொடு
கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே
ஆதி கடவூரின் வாழ்வே ....!
எனப் பதினாறு பேறு பற்றித் தெளிவாகப் பாடியுள்ளார்.
அதாவது
பதினாறு வகையான பேறுகளாவன:
1. கலையாத கல்வி அதாவது
வெற்றிக்கு வழிகாட்டக்கூடிய கல்வி
2 . குறையாத வயது என்பதாவது நீடிய ஆயுள்
3 . மாய்மாலம் செய்யாத
நல்ல நட்பு அதாவது
நம்பிக்கையான நல்ல நண்பர்கள்
4. குன்றாத வளமை அதாவது
வாழ்க்கைக்குத் தேவையான
குறைவில்லாச் செல்வம்
5 குன்றாத இளமை
அதாவது உழைப்புக்குத்
தளராத உடல் வலிமை
6. கழு பிணி இல்லா உடல் அதாவது
எந்தவித நோய்நொடியும் இல்லா உடல் நலம்
7. சலியாத மனம் அதாவது
எதற்கும் கலங்காத
மனத்திண்மை
8. அன்பகலாத மனைவி அதாவது
எக்காலத்திலும் எந்தச் சூழலிலும்
மாறாத அன்பு கொள்ளும்
இனிய மனைவி
10. தவறாத சந்தானம் அதாவது
அறிவு, ஆற்றல், ஒழுக்கம
இவற்றில் எதுவும் குறைவில்லாக்
குழந்தை செல்வங்கள்
12. தாழாத கீர்த்தி அதாவது
குறைவுபடாப் புகழ்
11. மாறாத வார்த்தை அதாவது
சொல் பிறழா நற்பண்பு
12. தடைகள் வாராத கொடை அதாவது
இல்லை என்று சொல்லும்
நிலை வராது கொடுக்கும் பெருந்தன்மை
13 தொலையாத நிதியம் அதாவது
பணத்தைச் சிறப்பாகக் கையாளும்
நிதி மேலாண்மை
14. கோணாத கோல் அதாவது
நேர்மையோடு அனைவரிடமும்
நீதி வழுவாது செயலாற்றும்
நிர்வாகத் திறமை
15. துன்பம் இல்லா வாழ்வு அதாவது
வாழ்வில் துன்பமே
காணாத நற்பேறு
16. துய்ய நின் பாதத்தில் அன்பு
அதாவது
மாறா இறை நம்பிக்கை
இத்தகைய பதினாறு வகையான
நற்பேறுகள் கிடைக்கப் பெற்று நல்வாழ்வு
வாழ்க எனத் தம்பதியரை
வாழ்த்துவதுதான்
பதினாறும் பெற்று பெரு வாழ்வு
வாழ்க என்பதன் பொருளாம்.
இவ்வளவு அருமையான வாழ்த்து.
எந்த நிலையிலும்
வீழ்ந்து போகாது
உயர்வுடன்
உத்தமனயாய்
நன்மக்களோடு
நலமுடன்
வளமும் வாழ்க!
இதைத்தான் அழகாக சுருக்கமாக
சொல்லி வைத்திருக்கிறார்கள்.
என்னவொரு அறிவுவார்ந்த வாழ்த்து
பிரமிப்பாக இருக்கிறதல்லவா?
இவற்றை முழுவதுமாக நினைவில்
வைத்து வாழ்த்த முடியாது என்பதற்காகத்தான்
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க ... என்று ஒற்றை வரியில்
ஓங்கி உரைத்து வாழ்துக என்று
சொல்லித் தந்திருக்கிறார்கள்!
ஆல்போல் தழைத்து
அறுகுபோல் வேரூன்றி
மூங்கில் போல்
சுற்றம் முசியாமல் வாழியவே!
என்ற புகழேந்திப் புலவரின் இந்தப் பாடலையும் திருமண வாழ்த்தாக பயன்படுத்தி அசத்துங்கள்.
Comments
Post a Comment