கல் பிளவோடு ஒப்பர் கயவர்

கல் பிளவோடு ஒப்பர் கயவர் 


சினம் என்ன செய்யும் என்று சொல்லித்

தந்த வள்ளுவர்,


"தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்

தன்னையே கொல்லும் சினம் "

என்றார்.


ஒருவன் தன்னைக் காத்துக் கொள்ள 

விரும்பினால்  கோபம் வராமல்

தன்னைப் பாதுகாத்துக்கொள்ள

வேண்டும்.

அப்படிக் காத்துக்கொள்ளாவிட்டால்

அந்தக் கோபமே அவனை

அழித்துவிடும்.


அப்படியானால் கோபப்படக் கூடாதா?

கோபம் இவ்வளவு பெரிய தீமையைச்

செய்ய வல்லதா?

கோபப்படாமல் ஒரு சாதாரண மனிதனால்

இருக்க முடியாதா என்ற கேள்விகள்

எழாமல் இல்லை.


"ரௌத்திரம் பழகு "என்றார்

பாரதி.

அதுவும் ஒருவிதத்தில்

கோபம் தானே.

அதை மட்டும் பழகு என்று பாரதி சொல்லியிருக்கிறாரே

இப்படிப்பட்ட கேள்விகள் எழாமலில்லை.


சினம் சேர்ந்தாரைக் கொல்லி என்று

படித்திருக்கிறோம்.


 "தன்னை அடக்கி, கோபத்துக்கு ஆட்படுத்தாமல்

 இருப்பவனே மாவீரன்" என்பார் நபிகள்

 நாயகம்.

"கோபத்தோடு எழுபவன்

நட்டத்தோடு அமருவான்"

என்பது பழமொழி.


இப்படி கோபத்தைப்பற்றி

ஏராளமாகக் தெரிந்து வைத்திருந்தாலும்

இன்னும் அறிய ஆசை.


 வேறு யாரிடம்

கேட்பது என்று சிந்தித்துக் கொண்டிருந்தபோது

ஔவை மூதுரையில் சொன்ன பாடல் ஒன்று

நினைவுக்கு வந்தது.

பாடல் உங்களுக்காக....


"கற்பிளவோ டொப்பர் கயவர்

கடுஞ்சினத்துப்

பொற்பிளவோ டொப்பரும் போல்வாரே -

விற்பிடித்து

நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே

சீரொழுகு சான்றோர் சினம்"



               மூதுரை. பாடல் - 23



கல் பிளந்தால் மறுபடியும்

ஒட்டிக்கொள்ளாது.

அதுபோல கயவர்கள் சினம் கொள்வாராயின்

மறுபடியும் ஒன்று சேர 

வாய்ப்பிருக்காது.

அவர்களுடைய கோபம்

கல்லில் விழுந்த கீறல் போன்றது.



தங்கம்உடைந்தாலும் மறுபடியும்

ஒட்ட வைத்து  பழைய நிலைக்குக்

கொண்டுவந்துவிட முடியும்.

அதுதான் தங்கத்தின் இயல்பு.

அதுபோல சினங்கொண்டு பிரியும்நிலை

ஏற்பட்டாலும் மறுபடியும் தங்கள்

பழைய நிலைக்கு வரும் பண்பு

சான்றோர்களிடம் உண்டு.


சான்றோர் சினம் எப்படி

இருக்கும் தெரியுமா?

வில்லிலிருந்து எய்த அம்பு

நீரைக் கிழித்துக்

கொண்டு செல்கிறது.

ஆனால் அந்த நீரில்  ஏற்பட்ட

 பிளவினைக் கண்ணால்

 கண்டுகொள்ள கூடுமோ?

 அம்பு எய்து விலகிய நீரானது

 மறுகணமே 

கலந்து காணாமல் போய்விடும்.

 நல்லொழுக்கம் கொண்ட

சான்றோர் கொள்ளும் சினமும்

கணப்பொழுதில் காணாமல்

போய்விடும்" என்கிறார் ஔவை.


 "நீர் கிழிய எய்த வடுப் போல"

அருமையான உவமை.

அது என்ன  அம்பு எய்து நீர் கிழிய

வடு ஏற்படுமா?

அப்படி ஒரு காட்சியை எங்கேயாவது

கண்டதுண்டோ?


காண முடியாதல்லவா?

அப்படித்தான் சான்றோர் கோபம்

கணப்பொழுதில் காணாமல் போகும்.

சினம்  அனைவருக்கும் வரும்.

அந்தச் சினமானது ஏற்படுத்தும்

தாக்கம் ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது.

மாறுபடுகிறது. மாற்றங்களை ஏற்படுத்துகின்றது.

சினம் ஏற்படுத்தும் தாக்கத்தைக் பொறுத்து

பிரிவும் உறவும் ஏற்படும்.

அவர்களின் இயல்பும் வெளிப்படும்

என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.


சினத்தை அனைவரும்  பார்க்கும் 

கண்ணோட்டத்திலிருந்து ஔவை

 சற்றே வேறுபட்ட இருக்கிறார்.

 நாம் அறியாத செய்தியை உவமைமூலம்

 சொல்லி,

  யார் கயவர் ...

 யார் சான்றோர் என்று அறிந்து கொள்ள 

 வைத்திருக்கிறார்.


கோபம் கொள்ளும் நபர்களைப் பொறுத்து

கோபமும் அதன் குணத்தில் மாறுபடுகிறதா?

மாறுபட்ட சிந்தனை இல்லையா?





Comments