பாராட்டுரைத்தேன்

பாராட்டுரைத்தேன்


அலையாடும் குமரி முனை -ஆங்கே

கலையாடும் செங்கதிரோன் அங்கம்

நனைந்தாடும் எழில் காண

நினைவோடம் நீரில் மிதந்தோட

உரையாடா உள்ள உவப்போடு

ஆன்றோர் குழாமொன்று 

அழகாய் நின்றிருந்த 

அருங்காட்சியொன்று கண்டேன் !

மலரும் நினைவலை  மருள

மனமெல்லாம் நறுந்தேன்

அருந்திய மகிழ்ச்சியில் துள்ள

உடன் நடக்க  விழைந்தேன்!


கண்ணாடிப் பாலமதில்

காலணி களைந்து நீர் நடக்க

இழையோடு விளையாடு

நீராடுங் காட்சி  பார்த்தேன்

சத்தமில்லாமல் முத்தமிட்டுச்

செல்லும் செம்மீன் கண்டு

சொல்லாடாது நின்றிருந்தேன்!


அண்ணாந்து பார்த்தேன்-அங்கே

ஒன்றே முக்காலடியில்

உலகளந்த குறளோன் 

செம்மாந்து நின்றிருக்க

கண்கள் இமைக்க மறந்தேன்

கால்கள் மெல்லத் திரும்ப

குன்றில் வீற்றிருந்த நாயகன்

சுவாமி விவேகானந்தரைக்

கைகள் தானாய்த் தொழ 

கடலுக்குள் நானொரு மீனாய்த்

துள்ளியே குதித்தேன்!


தலைவாழை இலையில் தமிழர்

பண்பாடு கலையா

விருத்தொன்று நடக்கக் கண்டேன்!

தலைப்பாகையொடு உணவு

பரிமாறிய காட்சியும்

அருந்தமிழில் அளவளாவிய 

நெஞ்சம் நெகிழ்ந்த

உரையின் தொடர்ச்சியும்

நினைவலைகளாய் 

மும்பை மாநகராட்சி 

பள்ளிகளைச் சுற்றிச் சுற்றி வர

முதுமையைக் களைந்தேன்

முதல் பருவம் புனைந்தேன்


 இசைத்தேன்  நுகர்ந்தேன்

ஆசிரியைக்கு ஆசையாய்ப்

பாராட்டுப் பத்திரம் படித்தேன்!

சங்கத்தமிழ்ச் செவிமடுத்தேன்

சங்கமத்தில் சங்கமமானேன்!

ஆண்டாண்டு கூடுகை 

அருள்கூர்ந்து நடத்திடுக என்ற

ஒற்றை வரி வேண்டுதலோடு

நல்லாசிரியர்க்கு நல்லதொரு

விண்ணப்பம் வரைந்தேன்!

மலரும் நினைவலையில்

மனம் கனவினில் மிதக்க

பேராசிரிய பெருமக்களை

வாழ்த்திட  விழைந்தேன்

வாடா மலர்  சொல்லெடுத்து

வாழ்த்துப்பா வடித்தேன்

கரங்களில் சமர்ப்பித்தேன்!

    - செல்வபாய் ஜெயராஜ் 





 

Comments