கரடி பொம்மை தினம்

கரடி பொம்மை தினம் 


"ஆனைக்கொரு காலம் வந்தால்

பூனைக்கொரு காலம் வரும்"

என்பார்கள்.

ஆனைக்கும் பூனைக்கும் வரும் காலம்

கரடிக்கு வராமலா போய்விடும்.?

இதோ வந்துவிட்டது.

 இன்று கரடிக்கான தினம்.


அதாவது பிப்ரவரி 10 கரடி பொம்மைக்கான தினம்.

காதலர் தினத்தைத்  கொண்டாடிய

உலகம் கரடியையும் விட்டுவைக்கவில்லை.

இந்தநாளில் காதலர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை வெளிப்படுத்துவதற்காக மென்மையான, குட்டி கரடிகளைப் பரிசாக வழங்குவது  மேலை நாடுகளில் வழக்கமாக

இருந்து வருகிறது .இந்தக் கரடி பொம்மை அன்பு மற்றும் அரவணைப்பின் சின்னமாக உலகெங்கும்  உள்ள காதலர்களால் பார்க்கப்படுகிறது.


இந்தக் கரடி பொம்மைக்கு வாழ்வு வந்த வரலாறு சுவாரசியமானது.

அதற்காக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி 

தியோடர் ரூஸ்வெல்ட் வரலாற்றைப் புரட்டிப்

பார்க்க வேண்டி இருக்கிறது.


ஒருமுறை ரூஸ்வெல்ட் அவர்கள் வேட்டையாடுவதற்காக மிசிசிப்பி

காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளார். வெகுநேரமாக வேட்டைக்காகக் காத்திருந்தும் 

எந்த விலங்கும் சிக்கவில்லை. 

சோர்வாக வந்து அமர்ந்தார்.


கடைசியாக

கரடி ஒன்று பணியாளர்கள் கண்களில் சிக்கிக் கொண்டது.

கரடி ஓடி விடாமல் இருப்பதற்காக பணியாளர்கள் 

அதனை ஒரு கயிற்றில் கட்டி ரூஸ்வெல்ட் முன்னர் கொண்டு வந்து

நிறுத்தினர்.

ரூஸ்வெல்ட் மகிழ்ச்சியோடு 

சுட்டு வீழ்த்துவார் என்று எதிர்பார்த்தனர்.

அவர் ஒரு நிமிடம் அந்தக் கரடியின் கண்களைப் பார்த்தார்.

அந்தக் கண்களில் இருந்த கெஞ்சல்

அவர் மனதை உருக்கியது.


இந்தக் கரடியைக் கொல்வது இரக்கமற்ற செயல் என்று கூறி கரடியைச் சுட  ரூஸ்வெல்ட் மறுத்துவிட்டார் .


ரூஸ்வெல்ட்டின் இந்த இரக்க குணம்

நாடெங்கும் பரவியது.

இதனை அறிந்த கிளிஃபோர்ட் பெர்ரிமேன் என்ற அரசியல் கார்ட்டூனிஸ்ட் இந்தச் சம்பவத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒரு கார்ட்டூன் வரைந்து பிரபல வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வெளியிட்டார்.


கரடிக்கும் அமெரிக்க ஜனாதிபதிக்கும் இருந்த இரக்க பிணைப்பை வெளிப்படுத்திய இந்தக் கார்ட்டூன் நாடு முழுவதும் பேசு பொருளாகியது.கார்ட்டூன் பிரலமாகி மக்களால் கொண்டாடப்பட்டது.


இந்தக் கார்ட்டூன் மக்கள் மத்தியில் 

ஏற்படுத்திய தாக்கம் கரடி பற்றிய

சிந்தனையைத் தட்டி எழுப்பியது.


இதனைத் தனக்குச் சாதமாக்க 

நினைத்த பொம்மை உற்பத்தியாளரான 

மோரிஸ் மிக்டோம், கார்ட்டூன் படத்தை  ஆதாரமாக வைத்து கரடி பொம்மைகளை

உருவாக்கி விற்பனை செய்தால்

என்ன என்று நினைத்தார் .

நல்ல வியாபாரம் நடத்த இது நல்லதொரு வழி என்று  மனக்கணக்குப் போட்டுப் பார்த்தார்.

அதன்படி கரடி பொம்மை தயாரிப்பு மும்முரமாக நடைபெற்றது.

ரூஸ்வெல்ட்டின் செல்லப் பெயர் 'டெடி' என்பதாகும்.

அதையே அவர் தயாரித்த பொம்மையின்

பெயராக்கினார்.

 ஜனாதிபதி ரூஸ்வெல்ட்டின் நினைவாக அவர் அதை "டெடி'ஸ் பியர்" என்று

பெயரிட்டு சந்தைப்படுத்தினார்.


அவரின் மனக்கணக்கு

 பொய்த்துப் போகவில்லை.

விற்பனை சூடிபிடிக்க  ஆரம்பித்தது.

டெடி பியர் மக்கள் மத்தியில் வெகு பிரபலமாகி அன்பு, மற்றும் இரக்கத்தின் அடையாளமாகிப் போனது.

இன்று உலகம் முழுவதும் டெடி கரடி பொம்மைகள் தங்கள் பிரியமானவர்களுக்கு தரப்படும் அன்பு பரிசாக மாறுவதற்குப் பின்னணியில் பெரிய வியாபார உத்தி கையாளப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

இன்று  டெடி கரடி பொம்மை வியாபாரம் உலகெங்கும் பல்லாயிரம் கோடிகளை விஞ்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது . 

டெடி பியர் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு க் கொடுப்பது ஆறுதல் மற்றும் பாதுகாப்பின் அடையாளமாகவே அனைவராலும் பார்க்கப்படுகிறது.

டெடி டே என்பது தங்கள் துணையிடம் அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் நாள் என்று அனைவரும் நம்புகின்றனர்.


நீங்களும் டெடி பொம்மை வாங்குங்கள்.

உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள்.


 உங்கள் காதல் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக இந்த  ”டெடி டே” 

அமைய வாழ்த்துகள்.


Comments