கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே......

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே....


உலகின் மூத்த மொழிகளுள் ஒன்றாக விளங்குகின்ற மொழி தமிழ் மொழி.


 ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி’ என்று புறப்பொருள் வெண்பா மாலை என்ற  இலக்கண நூல் சொல்லியிருக்கிறது.

அதனால் என்று தோன்றியது என்றே சொல்லமுடியாத அளவுக்குப் பழைமையான மொழி தமிழ் மொழி என்று அறிய முடிகிறது.



தொல்காப்பியத்திற்குப் பாயிரம் எழுதிய பனம்பாரனார் என்பவர்

"வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்தமிழ்கூறும் நல்லுலகம்"

என்று தமிழ்நாட்டின் எல்லை

எது என்பது பற்றி அழகாக  கூறி வைத்துள்ளார். அதன்படி ,வடக்கே வேங்கடமலை முதல் தெற்கே குமரிமுனை வரை தமிழ் பேசப்பட்ட நிலம் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.


வரலாற்றிற்கு முந்தைய காலத்துத் தமிழக வரலாற்றை நாகரிகத்தின் வளர்ச்சியால் ஏற்பட்ட மாறுதல்களையும், பயன்படுத்திய கருவிகளையும் அடிப்படையாகக் கொண்டு ,


1. பழங்கற்காலம்,

 2. இடைக் கற்காலம்

3. புதிய கற்காலம்

4. இரும்புக் காலம்


என்று நான்கு காலங்களாக வகைப்படுத்தலாம்.


இவற்றை வரையறை செய்யத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அகழ்வாராய்ச்சிகள் மூலம் கிடைத்துள்ள புதைபொருட் சின்னங்கள் உதவுகின்றன. 


இந்தியாவில் நடைபெற்ற மிகப்பெரிய அகழ்வாராய்ச்சிகளில் ஒன்று ஆதிச்சநல்லூரில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியாகும். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச் சார்ந்த புதைபொருட்கள் இங்கு ஏராளமாகக் கிடைத்துள்ளன. அணிகலன்கள், இரும்பாலாகிய கருவிகள், உரல்கள், மனித எலும்புக் கூடுகள் போன்றன இவற்றுள் அடங்கும்.


பழங்கற்காலம்

பழங்கற்காலத்திய தமிழ் மக்களைப் பற்றிய சான்றுகள் பல கிடைத்துள்ளன. 

மேலும் பழங்கற்கால மக்கள் ஓரிடத்திலும் நிலையாகத் தங்கி வாழ்ந்ததாகத் தெரியவில்லை.


 இடைக்கற்காலம்

பழங்கற்காலத்துக்கும் புதிய கற்காலத்திற்குமிடையே இடைக்கற்காலம் என்ற ஒன்று நிகழ்ந்திருக்கிறது. அக்கால அளவில் வாழ்ந்த மக்கள் மிகச்சிறிய கற்கருவிகள் செதுக்கிக் கொண்டனர் எனத் தெரிய வருகிறது. 


புதிய கற்காலம்

புதிய கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் வாழ்க்கையில் பல சீர்திருத்தங்கள் காணப்படுகின்றன. இவர்கள் தாங்கள் பயன்படுத்தும் கற்கருவிகளை ஒழுங்காகவும், வழுவழுப்பாகவும் செதுக்கியுள்ளனர் என்று ஆராய்ச்சி மூலம் தெரிய வருகிறது. 


இரும்புக் காலம்


தமிழகத்தில் புதிய கற்காலத்தைத் தொடர்ந்து இரும்புக் காலம் தொடங்கிற்று. ஆனால் வட இந்தியாவில் புதிய கற்காலத்தை அடுத்துச் செம்புக் காலம் தொடங்கிற்று. அதனை அடுத்தே அங்கு இரும்புக் காலம் தொடங்கியது.,  கற்காலத்தின் இறுதியில் வாழ்ந்த மக்கள் இரும்பைக் கண்டுபிடித்துப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கலாம். 

திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ஆதிச்சநல்லூர் என்னும் இடத்தில் அகழ்வாராய்ச்சி மேற்கண்டபோது அங்கே கற்கருவிகளுடன் கத்தி போன்ற இரும்புக் கருவிகளும் கண்டெடுக்கப்பட்டன. மேலும் செங்கற்பட்டில் பெரும்பேயர் என்னும் இடத்திலும், கேரளத்தில் தலைச்சேரி என்னும் இடத்திலும் இவ்வாறே கற்கருவிகளும், இரும்புக் கருவிகளும் கலந்தே கிடைத்துள்ளன. எனவே தமிழகத்தில் புதிய கற்காலம் முடிவுறும்போதே இரும்புக் காலமும் தொடங்கிவிட்டது என்று கருத இடம் ஏற்படுகிறது.


தற்போது கிடைத்த ஆராய்ச்சியின் படி

ஏறத்தாழ 5300 ஆண்டுகளுக்கு

முன்னரே தமிழர்கள் இரும்பைப் பயன்படுத்தியிருக்கின்றனர் என்பது உறுதியாகியுள்ளது.


இரும்பின் காலம் 5300 ஆண்டுகள் என்றால்

அந்தக் காலத்திலேயே தமிழர் வாழ்ந்திருக்கிறனர்.

அதனால்தான் இரும்பு பற்றிய செய்தி

இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ளது.


நற்றிணையில் உள்ள ஒரு பாடலில்

இரும்பு பற்றிய செய்தி உள்ளது.


பாடல் உங்கள் நினைவுக்காக...


இரும்பின் அன்ன கருங் கோட்டுப் புன்னை

நீலத்து அன்ன பாசிலை அகம்தொறும்,

வெள்ளி அன்ன விளங்கு இணர் நாப்பண்

பொன்னின் அன்ன நறுந் தாது உதிர,

புலிப் பொறிக் கொண்ட பூ நாறு குரூஉச் சுவல்

வரி வண்டு ஊதலின், புலி செத்து வெரீஇ,

பரியுடை வயங்கு தாள் பந்தின் தாவத்

தாங்கவும் தகை வரை நில்லா ஆங்கண்,

மல்லல்அம் சேரி கல்லெனத் தோன்றி,

அம்பல் மூதூர் அலர் எழ,           

சென்றது அன்றோ, கொண்கன் தேரே?


     -  நற்றிணை - பாடல்- 249

          திணை- நெய்தல்


உலோச்சனார் பாடியது.



இரும்பு போல் கருநிறக் கிளைகளை உடையது புன்னை மரம். 

நீலமணி போன்ற அதன் பசுமையான இலைகளுக்கு இடையே அது

வெள்ளி போல் விளங்கும் அழகிய பூக்களைப் பூத்திருக்கிறது.


பூவிலிருந்து பொன் போன்ற அதன் மகரந்தப் பொடிகள் கீழே உதிருகின்றன. கீழே உதிரும் அந்த மகரந்தப் பொடிகள் வண்டுகள் மீது விழுகின்றன.

அதனால் வண்டுகளின் 

உடல் புறத்தே கோடுகள்

கொண்டதாகக் காட்சியளிக்கும் .

மகரந்த மணம் கமழும் வண்டுகள் 

அந்தப் பூக்களில் உள்ள தேனை உண்ண ஊதும்போது, 

அந்த ஒலி புலியின் ஒலியோ என்று

எண்ணி மருள வைக்கும் .

அந்த ஒலியைக் கேட்ட  தலைவனின் தேரில் பூட்டிய குதிரையானது

தாவி ஒடி வருகிறது.

 

வளம் மிக்க தெருவில் 

‘கல்’ என்னும் ஒலியுடன் வந்தது. 


முன்பே என் காதல் பற்றி 

அலம்பல் பேசி 

முணுமுணுத்துக்கொண்டிருக்கும் 

தெரு மக்கள் வாய்விட்டு பேசி 

அலர் தூற்றும்படியாயிற்று"

என்கிறாள் தலைவி.


இப்படித் தலைவி தோழியிடம் 

சொல்வதாகப் பாடல் அமைகிறது.  தலைவன் 

தலைவியை விரைந்து திருமணம் 

செய்துகொள்ள வேண்டும்.

இந்த ஊர் அலர் தூற்றுகிறது

என்ற செய்தி தலைவன் 

காதுகளுக்குக் கேட்கும்படி

தோழிஸபேசுவதாக 

பாடல் அமைந்துள்ளது.



இங்கே ,

"இரும்பின் அன்ன கருங்கோட்டுப் புன்னை"

என்ற வரி இரும்பின் பயன்பாடு

தமிழரிடையே இருந்திருக்கிறது என்பதை

உறுதிப்படுத்தி இருக்கிறது.


இப்போது தமிழகத்தில் 

கிடைத்த இரும்பு 5300 ஆண்டுகளுக்கு

முன்பு உள்ளது என்றும்

உறுதி செய்யப்பட்டிருப்பதால்

தமிழர் வரலாறு கிமு என்பது உறுதியாகிறது.


இதன் மூலம் ,


"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே 

வாளொடு முன்தோன்றி மூத்தகுடி "

எங்கள் தமிழ்க்குடி என்று

பெருமையோடு சொல்லிக் கொள்ளலாம்.

Comments