கடன்காரி

கடன்காரி

நேற்றிலிருந்தே பாட்டிக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு

வாங்கிக் கொண்டிருந்தது.

இன்றைக்கோ நாளைக்கோ உசுரு

போயிரும் என்று ஊரு சனம்

எல்லாம் வந்து பார்த்து அழுதுட்டுப்

போனாவ...


பாட்டியின் நாலு மகன்களும்

வெளியில் அமர்ந்திருந்து 

வர்றவுங்க போறவுங்க கிட்டே எல்லாம்

பேசிகிட்டு இருந்தாவ..


வெளி இடங்களில் இருக்கும் 

உறவினர்கள்கூட

வந்துட்டாவ...

ஆனால் உள்ளுரில் இருக்கும் அன்னத்தாயி

சித்தி மட்டும் வரல...


"அன்னத்தாயி இன்னும் வரலியா....

அன்னத்தாயி இன்னும் வரலியா..."

 என்று ஆளாளுக்கு அன்னத்தாயி

 சித்தியை பற்றியே

கேட்டுக் கொண்டிருந்தாவ.


" பெத்த தாய்க்கு சேத்துமா கட்டி

இழுக்குது...

இன்னுமா அன்னத்தாயிக்கு இந்தத்

தாயை வந்து பார்க்கணும் என்று

நினைப்பு வரல..."

என்றார் மூத்த அத்தை.


"கடைக்குட்டி என்று மடியிலேயே போட்டு 

வளர்த்தப் புள்ள...

இப்படியா கல்லு மனசாட்டும் 

கிடப்பா..?.."

என்றார் பக்கத்து வீட்டு பெரியம்மா.


"பாரு...அந்தத் தாய் மனசு கடைக்குட்டியை

மட்டும் காணாம எப்படி கிடந்து 

தவிக்குது...யாராவது போய்

 ஒரு வார்த்தை கூப்பிட்டுப் பார்த்தியளா?" 

 என்றார்  ஒரு தாத்தா.



"பெத்த தாயைப் பார்க்கிறதுக்குப் போய்

கூப்பிடணுமாக்கும்.தானா பதறி கிட்டு

ஓடி வரமாட்டா...

என்ன பிள்ளைகளோப்பா..."

சலித்துக் கொண்டார் மூத்த அத்தை.


"அவளுக்கு என்ன மன வருத்தமோ ...

யாரு கண்டா...."என்று அன்னத்தாயி

பக்கம் நின்று பேசினார் எதிர் வீட்டு சித்தி.


" இருக்கிறவுகளெல்லாம்

தொண்ட வொணராம கொஞ்சம் கொஞ்சம்

பாலு ஊத்துங்க...".என்று குரல் கொடுத்தார்

பாட்டியின் தம்பி.


"அந்த நெஞ்சு வதச்சு கிட்டு கிடக்கு...

நீயாவது ஒரு எட்டு போய் பார்த்துட்டு கையோடு 

உன் மருமவள கூட்டிட்டு வரப்பிடாது..." என்று

தாத்தாவைப் பார்த்து கேட்டார்

எதிர்வீட்டுப் பாட்டி.


"ஒரு முறையா... இரண்டு முறையா....

எத்தனை நட போய் பார்த்தாச்சு..

அவள் கிளம்பி வரணுமில்ல...

அவ வந்தாலும் புருஷக்காரன் விடுவதா தெரியல..."

என்றார்  எங்க மாமா.


"அப்போ கடைசியா அவள் என்னதான்

சொல்கிறாள்.?"

பேச்சுக்கு முடிவுகட்ட வந்தாள் சித்தி.


"பத்து பவுன் பாக்கி இருக்கு...

அதை இன்னா தருவேன் 

நாளைக்குத் தருவேன் 

என்று சொல்லி சொல்லி

கடத்தி வருஷம் நாலு ஆகுது.

ஒத்த பவுனு தரல....தந்தா வருவா

இல்ல..அந்த வாசல வந்து மிதிக்க மாட்டா

என்று கறாரா சொல்லி அனுப்பி 

விட்டுருக்கான் மருமவன்காரன்"

கோபமாகப் பேசினார் மாமா.


"பவுனு கேட்கிற நேரமா இது...

என்ன மனுஷன் இவன்...." சலித்துக்

கொண்டார் எதிர் வீட்டு சித்தி.



"இதை விட்டா வேறு சந்தர்ப்பம் கிடைக்காது

என நினைக்கிறான் போலிருக்கு..."



"நல்லா நினைச்சான் ...சொரைக்காக்கு

உப்புல்லன்னு."


"பொட்டப் புள்ளைகளை பெத்தா கடைசி வரை 

கண்ணீரு என்பது உண்மையாகத்தான்

இருக்கும்போல..."

பாட்டியின் கண்களின் ஓரத்தில் கண்ணீரைப்

பார்த்துப் பேசினார் சித்தி.


எல்லாரும் பேசுவதைப் பார்த்த

எனக்கு அன்னத்தாயி

சித்திக்கு கொடுக்க வேண்டிய 

 பத்து பவுனு கடனையும்

அடச்சிடணும் என்று பாட்டி  பட்டபாடு

நினைவுக்கு வந்தது.


தன் உயிர் போகும்முன்னால் 

ஒரு சீட்டு நாட்டப் போட்டாவது

அந்தப்  பத்து பவுனையும் 

குடுத்துடணும் என்று பாட்டி 

எவ்வளவோ பிரயாசப்

பட்டாவ...

ஆனால் அவங்களால முடியல..


கடைக்குட்டிப் பொண்ணு.

கடைசி மகனைவிட எட்டு வயசு இளசு.

அதனால நாலு மவனுகளுக்கும்

திருமணம் முடிஞ்ச பிறகுதான்

அன்னத்தாயி சித்திக்கு திருமணம் முடிக்க

 வரன் பார்த்தாவ... 

சித்தியைப் பெண் கேட்டு

வாரவங்க எல்லாம் முப்பது பவுன்

தர்ரியா? 

நாற்பது பவுன் தர்ரியா என்று

ஏலம் போட ஆரம்பித்து 

போயிட்டே இருந்தாவ...


வயசு ஆக ஆக ரேட்டும்

ஏறி கிட்டே போச்சே தவிர 

குறைந்த பாடு இல்ல.

பாட்டி நம்ம நிலைமைக்கு ஒரு

இருபது பவுனு கொடுக்கலாம்

அதுக்கு மேல நம்மளால இயலாது

என்றுதான் சொல்லிகிட்டே இருந்தாவ..


சித்திக்கு வயசு ஏறிகிட்டே போச்சே தவிர

பவுனு கேட்பவர்கள் யாரும்

பவுனை குறைச்சு கேட்கல...


இனி பார்த்துகிட்டு இருந்தா முடியாதுன்னு

பாட்டி முப்பது பவுனுக்குச்

சம்மதிச்சாவ.....


மவனுவ  ஆளுக்கு ஐந்து பவுனாவது

கேட்டு வாங்கிக்கிடலாம்.


மீதம் பத்து பவுனு எப்படியாவது

தனது கழுத்து சுத்துருவு தண்டட்டியை 

வச்சி ஒப்பேத்திபிடலாம் என்று

 நினச்சி பாட்டி  ஒரு கடலை வியாபாரியாரு

 மவனை  பேசி முடிச்சாவ....


 ஆனால் நாலு அத்தைமாரும் 

 மூணுபவுனுக்கு மேல ஒத்த பவுனு

 கொடுக்கக் கூடாது என்று

 வீட்டுக்குள்ள சண்டை போட்டாவ....

 

அதனால் மாமன் நால்வரும் சொல்லி வச்சதுபோல

 மூணு பவுனைத் தவிர

 சல்லிக் காசு தரமுடியாது என்று

  கறாரா பேசிகிட்டு ஒதுங்கிட்டாவ...

 

 பாவம் பாட்டி என்ன செய்யும் ? 

 ஏதோ இருபது பவுனு மட்டும்தான்

 அவங்களால கலியாணத்து

 அன்னக்கி கொடுக்க முடிஞ்சுது.

 

மீதி பத்து பவுனை ஒரு வருசத்துல 

தந்துடுவேன் என்று கடன் சொல்லி

கலியாணத்தை முடிச்சி வச்சாவ...


வருசம் நாலாச்சு. பாட்டியால பத்து

பவுனை கொடுக்க முடியாம

கடன்காரியாப் போனாவ...


அன்னத்தாயி சித்தி ஓயாம வந்து

"என் பவுன தா" என்று பாட்டி

கிட்ட சண்டை போடுவாவ...


இன்னா தாறேன்...வருகிற 

விளைச்சலுல எப்படியாவது உன்

கடனை அடைச்சுருவேன் என்று

சொல்லுவாவ....

பாட்டிக்கு சாப்பாட்டுக்கு என்று

ஒதுக்குன பத்து மரக்கா

விதப்பாட்டு நிலத்துல  சரியா விளைச்சல்

இல்லாம போச்சு...


பாட்டி ரொம்ப பிரயாசப்பட்டாவ...

எதுவும் சரியா கைகூடல...


பாட்டி ஒரு சிந்து பசு மாட்டை 

வாங்கி போட்டு

வளர்த்தாவ....

அந்தப் பாலை வித்து ஒரு சீட்டு போட்டு

குறைஞ்சுதுன்னா

வட்டிக்கு பணம் வாங்கியாவது

அன்னத்தாயி சித்திக்கான பத்து பவுன்

கடனையும் எப்படியாவது தீர்த்துடணும்

என்று சொல்லிக் கிட்டே 

இருப்பாவ...


மாடு குட்டி போட்டதுதான் தாமதம்

இளைய மாமா வந்து பசு மாட்டைக்

கொடு என்று வாசலில் வந்து நின்னாவ...


பாட்டிக்கு என்ன சொல்ல என்றே தெரியல...


"பாலை வித்துதான் தங்கச்சிக்கு 

கொடுக்க வேண்டிய கடனுல 

ஒரு ஐந்து பவுன் கடனையாவது

அடைத்துடலாம் என்று

பார்க்கிறேன் தம்பி "என்று

சொல்லி பார்த்தாவ...


மாமா  விடுவதாக இல்லை..

"என் பிள்ளைகளுக்கு குடிக்கப் பால் 

இல்லை.... அடுத்த ஈத்துக்கு

அன்னத்தாயி கதையைப் பார்த்துக்கலாம்"

என்று சொல்லி மாட்டையும் கண்ணுக்குட்டியையும்

பத்திகிட்டுப் போயிட்டாவ....


அதன்பிறகு கடைசிவரை பாட்டியால 

அந்த பத்து பவுனை கொடுக்க முடியல...


அன்னத்தாயி சித்தி வரும் போதெல்லாம்

வீட்டை வித்தாவது எனக்குத் தர வேண்டிய  

பத்து பவுனு பாக்கிய தர வேண்டியதுதானே என்று

சண்டை போடுவாவ...


 பாட்டி என்ன செய்யும் பாவம்...

 வீடு பாட்டி பெயருல இல்ல....

 அதையும் இளைய மவனுக்குத்தான்

 பூர்வீக வீடு என்று தாத்தா

 உயிரோடே இருக்கும்போதே 

 எழுதி வச்சுபபுட்டாவ....

 

 சாப்பாட்டுக்கே  அந்த மகன் தருவானா

 இந்த மகன் தருவானா என்று அங்கேயும்

 இங்கேயும் எட்டிப் பார்த்து காத்திருக்கும்

 பாட்டியால பத்து பவுன் எப்படி கொடுக்க

 முடியும்?


அது அன்னத்தாயி சித்திக்கும் புரியல..

சித்தி  வீட்டுக்காரருக்கும்

புரியல...


எங்க நாலு மாமாவுக்கும்

நம்ம ஒடப்பெறந்தாளுக்கு கலியாணத்துக்குப்

போடுவேன் 

என்று சொன்ன பாக்கி பத்து பவுனை 

கொடுக்கணுமே என்ற நினைப்பு

கொஞ்சம்கூட கிடையாது. 


பாட்டி எப்பவாவது சொன்னா...நீ எதுக்கு

முப்பது பவுனுக்கு ஏத்தா..

உன் நிலைமைக்கு தக்க பேச 

வேண்டியதுதான....

என்று ஏட்டிக்குப்

போட்டி பேசி மடக்குவாவ...


 நடந்தை எல்லாம் நினைக்கும்போது

 பாட்டியைப் பார்க்கப் பாவமாக

 இருந்தது.


இப்போ எல்லாரும் சேர்ந்து பாட்டிய

பத்து பவுனு கடன்காரியா வழியனுப்ப

காத்திருக்காவ...

பாட்டிக்குத்தான் கடன்காரியா போக 

மனமில்லையோ  என்னவோ....


பாட்டி இப்படி பரிதவிச்சுகிட்டுக்  

கிடப்பதைப்

பார்க்கும்போது எனக்கு ...

கடவுள் மேல்கூட கோபமாக வந்தது.


பாட்டியையே பார்த்துக் கொண்டு

அப்படியே உட்கார்ந்திருந்தேன்.


திடீரென்று பாட்டியின் கண்களிலிருந்து

மழமழவென்று கண்ணீர் வடிந்தது.


என்ன என்று பக்கத்தில் 

ஓடி வந்து பார்த்தேன்.


அதற்குள் அன்னத்தாயி சித்தி ஒப்பாரி 

வைத்தபடி வீட்டுக்குள் நுழைந்தாவ....


அவ்வளவுதான் பாட்டியின் கண்கள்

அன்னத்தாயி சித்தியை ஒரு ஏக்கத்தோடு

பார்த்து கண்ணீர் விட்டது.


அந்தப் பார்வையில்

"கடைசி வரை உன் கடனைதான் என்னால்

அடைக்க முடியாமலேயே போச்சு...

என்னை மன்னிச்சுடு தாயி" என்ற

ஒரு கெஞ்சல் இருப்பதுபோல் தெரிந்தது.


அதற்கு மேலும் என்னால்

ஒரு பார்வையாளராக நிற்க முடியவில்லை.


முட்டி வந்த கண்ணீரோடு கதறி

அழுதபடி 

பாட்டியின் கைகளைப் பற்றினேன்.

அவ்வளவுதான்....

அன்னத்தாயி சித்தியைப் பார்த்த

 பார்வையோடேயே பாட்டியின் கண்கள்

நிலை குத்தி நின்று  போயிற்று.


எல்லோரும் ஆளாளுக்கு ஓடிவந்து

கடைசி நேர ஒப்பாரியை அரங்கேற்றிக்

கொண்டிருந்தாவ...



"பெத்த பிள்ளையை பார்ப்பதற்குத்தான்

இத்தனை நேரம் பெரிய மனுசி 

 உசுர புடிச்சுகிட்டு கிடந்துருக்கா"

 என்றார் ஒரு தாத்தா.


அன்னத்தாயி சித்தி கிட்ட

பத்து பவுனு கொடுக்காததற்கு

மன்னிப்பு கேட்டுட்டு

போயிரலாம் என்றுதான் பாட்டி

காத்திருந்திருக்காவ...

ஒரு கடன்காரியா போனேனே

என்ற ஏக்கம் தான் இத்தனை 

பரிதவிப்பிற்கும் காரணம் என்பது

எனக்குப் புரிந்தது.


அன்னத்தாயி சித்திக்குப்

 புரிஞ்சிருக்குமா?








Comments