அணிலாடு முன்றில்
அணிலாடு முன்றில்
தலைவி ஒருத்தி உணவு உண்ண
மறுக்கிறாள்.
தூக்கம் வராமல் புரண்டு புரண்டு
படுங்கினாள்.
திடீரென்று படுக்கையிலிருந்து எழும்பி
எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
கேட்ட கேள்விக்குத் தொடர்பில்லாமல் பதில் சொல்கிறாள்.
என்ன இது?
என்னாயிற்று இந்தத் தலைவிக்கு?
விசாரிக்கிறாள் தோழி.
"ஒன்றுமில்லை "சமாளிக்கிறாள் தலைவி.
"இல்லை .உன் உடலில் சில மாற்றங்கள் தெரிகின்றது.
செயலில் தடுமாற்றம் இருக்கிறது.
எப்போதும் எதையோ பனி கொடுத்த நிலையில் இருப்பது போல
தெரிகிறது.
எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல்.
என்னிடம் சொல்வதற்கு உனக்கென்ன தயக்கம்?"
"தயக்கம் ஏதுமில்லை"
"அப்புறம் என்ன .. மறைக்காமல் உண்மையைச் சொல்.
ஏதாவது பிரச்சினையா?
அல்லது காதல் கீதல் என்று ஏதாவது..."
"ம்... நிறுத்து.
அப்படியொன்றும் இல்லை'
"அப்படி ஒன்றும் இல்லை என்றால்
வேறு எப்படி என்பதை என்னிடம் சொல்."
"அது ...அது வந்து...அதை நான் எப்படி சொல்லுவேன் "
"அடிப்பாவி உண்மையாகவே காதலில் விழுந்துவிட்டாயா?"
"ஏன் உனக்குக் தெரியாததா என்ன"
"அதனால்தான் இத்தனை மாற்றமா?"
வேடிக்கையாக இருக்கிறது"
இருக்கும்... இருக்கும்.
என் நிலை உனக்கு வேடிக்கையாக தந்தான் இருக்கும்.
நான் படும்பாடு எப்படி இருக்கிறது தெரியுமா?
"தோழி, கேள்.
என் காதலர் என் பக்கத்தில் இருக்கும் பொழுது, நான் பெரிதும்
உவந்து மகிழ்ந்திருந்தேன்.
நான் அடைந்த மகிழ்ச்சி எப்படி இருந்தது தெரியுமா . ? ஊர் கூடி திருவிழாவை மகிழ்வோடு கொண்டாடும் மக்கள் மனநிலையை ஒத்திருந்தது.
இப்போது என் காதலர்
என்னைவிட்டுப் பிரிந்து
சென்று விட்டார். நான் சோர்ந்து போனேன்.
அது எப்படி இருக்கும் தெரியுமா
பாலை நிலத்தில் உள்ள ஒரு சிற்றூரில் ஆளில்லாத வீடு இருக்கிறது.
ஆள் அரவமற்ற அந்த வீட்டில் அணில் மட்டுமே குறுக்கும் நெடுக்கும் ஓடுகிறது.
ஆனால் வீட்டு முற்றமோ களையிழந்து இருப்பது போல நான் களையிழந்து தனிமையில் வாடுகிறேன். "என்கிறாள்.
பாடல் உங்களுக்காக ...
காதலர் உழையர் ஆகப் பெரி(து)உவந்து
சாறுகொள் ஊரின் புகல்வேன் மன்ற
அத்த நண்ணிய அங்குடிச் சீறூர்
மக்கள் போகிய அணிலாடு முன்றில்
புலம்(பு)இல் போலப் புல்லென்(று)
அலப்பென் தோழி, அவர், அகன்ற ஞான்றே!"
என்கிறாள்
-குறுந்தொகை
-பாடல் 41
ஆசிரியர்:அணிலாடு முன்றிலார்
தனிமையான வீடு.
அதில் அணில் மட்டும் ஓடுகிறது.
அதன் நிலை எப்படி இருக்கும்?
அந்த வீட்டின் நிலைதான் இப்போது என் நிலை என்று அணிலாடு முன்றிலை
உவமையாகக் கண்முன்னர் கொண்டு வந்து நிறுத்தி
அப்படியொரு வீட்டை நம்மைத் திரும்பிப் பார்க்க வைத்தமையால் பாடல் எழுதியவர் அணிலாடு முன்றிலார் எனப்படுகிறார்.
பருவ வயதில் காதல் வயப்பட்ட பெண்களின் நிலை "அணிலாடு முன்றில் புலம்பில் போலப் புல்லென்று"இருக்கிறதாம்.
அருமையான உவமை இல்லையா?
பொருள் அறிதலுக்காக...
உழை = பக்கம்
உவத்தல் = மகிழ்தல்
சாறு = திருவிழா
புகலுதல் = மகிழ்தல்
மன்ற = உறுதியாக
அத்தம் = பாலைநிலம்
நண்ணுதல் = நெருங்குதல்
சீறூர் = சிற்றூர்
முன்றில் = முற்றம்
புலம்பு = தனிமை
புல்லென்று = பொலிவிழந்து;
அலப்புதல் = வருந்துதல்;
ஞான்று = பொழுது, காலம்.
Comments
Post a Comment