எத்தனை குருவிகள்

எத்தனை குருவிகள் 


சோழ நாட்டிலுள்ள ஓர்

அழகிய ஊர் பூம்பொழில்.

அங்கு பொன்னுசாமி என்ற ஏழை  விவசாயி வாழ்ந்து வந்தார்.

அவர் தன் வயலில் விளைந்த ஒரு கலம்

நெல்லை  காய வைத்துவிட்டு

வீட்டிற்கு வந்து விட்டார்.

வேலை செய்த அலுப்பு.

சற்று கண் அயரலாம் என்று

ஓய்வெடுத்தார். மணி மூன்று ஆகிவிட்டது.

எழும்பி முகம் கழுவிவிட்டு

நேரே வயலக்குப் போனார்.

அங்கு நெல் ஒன்று மில்லை.


அதிர்ந்து போனார்.

சுற்றும்முற்றும் பார்க்கிறார்.

ஒரு குருவியின் வாயில் நெல் மணிகளைக் கண்டார்.


ஆத்திரத்தில் அருகில் கிடந்த மண்ணாங்கட்டியை எடுத்து

குருவி மீது வீசினார்.

மண்ணாங்கட்டி பட்டு

குருவி கீழே விழுந்தது.

அருகில் சென்று பார்த்தால் குருவி இறந்து போனது.


இப்போது விவசாயிக்கு  ஓர் அற்ப ஆசை.

நான் ஒரு கலம் நெல் காய் வைத்தேன்.

அவ்வளவு நெல்லையும் தின்ன குருவிகள் எங்கிருந்து வந்தன?

அப்படி எத்தனை குருவிகள் தான் வந்திருக்கும்?

இந்தக் குருவி எத்தனை நெல் மணிகள்

தின்றிருக்கிறது என்பது இந்தக்

குருவியின் வயிற்றைக் கிழித்துப் பார்த்தால் தெரிந்துவிடும் என்று வயிற்றைக் கிழித்துப் பார்த்தார். குருவியின் வயிற்றுக்குள் மூன்று நெல் மணிகள் இருந்தன...

அப்படியானால்  ... அப்படியானால் ஒரு கலம் நெல் மணிகளையும்  எத்தனை குருவிகள்

கொத்திச் சென்றிருக்கும்.?


மண்டையை உருட்டிப் பார்க்கிறார்.

ஒன்றும் பிடி படவில்லை 

யாரைக் கேட்பது?

கையால் எண்ணி எண்ணிப் பார்க்கிறார்.


அப்போது பக்கத்து வயல் வரப்பில் நின்று கொண்டிருந்த கதிரேசன்

இவரைப் பார்த்துவிட்டார்


என்ன சின்னச்சாமி அண்ணன்

விரலை மடக்கி விரித்து

என்னவோ கூட்டிக் கழித்துப் கொண்டிருக்கிறாரே என்னவென்று கேட்போம் என்று அருகில் வந்தார்.


"ஒரு கலம் நெல்லு காயம் போட்டுருந்தேம்பா.

ஒத்த நெல்லுல்லு இல்லாம 

அத்தனை நெல்லையும் குருவி

பொறுக்கிட்டுப் போயிட்டு..."

என்று அழாத குறையாக சொல்லி

வருத்தப்பட்டார் பொன்னுசாமி.


"ஒரு கலம் நெல் என்றால் 96 படிகளாச்சே அவ்வளவையுமா குருவிகள் கொத்திக் கொண்டு போய்விட்டன."

"நான் என்ன பொய்யா சொல்கிறேன்.

அதோ பார் காயப்போட்ட களத்தில் ஒற்றை நெல் இல்லை."

என்று களத்தைக் கையை நீட்டிக் காட்டினார் பொன்னுசாமி.


"ஆமாம் வெறுமையாக துடைத்துப் போட்டது போல கிடக்கிறதே.. "

"ஒருபடிக்கு 14400 நெல் மணிகள்.

அதுதான் மொத்த நெல் மணிகள்

எவ்வளவு இருந்திருக்கும் என்று பெருங்கிப் பார்த்தேன்."


"விரலிலா...?"

சிரித்தார் கதிரேசன்.


"வயலுக்கு நோட்டுப் புத்தகமா 

தூக்கிட்டு வந்து பெருக்க முடியும்?"


சற்று நில்லுங்கள்.

தரையில் எழுதி பெருங்கிப் பார்க்கிறேன் என்று மளமளவென்று தரையில் எழுதி பெருக்கிப் பார்த்து

1382400 நெல் மணிகள் என்றார்

கதிரேசன்.


"ஒரு குருவி வயிற்றில் மூன்று நெல் மணிகள் தானே இருந்தது.

அப்படியானால் எத்தனை குருவிகள் தான் வந்திருக்கும்?"


அதற்கு மூன்றால் வகுத்துப் பார்த்துவிட வேண்டியதுதானே...என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார் கதிரேசன்.

 தரையில் எழுதி வகுத்துப் பார்க்கிறார். .

சரியாக மூன்றாம் வாய்பாடு தெரியவில்லை.

அப்பாவி பொன்னுசாமி தரையில் எழுதி எழுதி அழித்துக் கொண்டிருக்கிறார்.

கடைசியாக

எத்தனை குருவிகள் வந்திருக்கும்

என்று நீங்களாவது கண்டு பிடித்துக் கொடுங்கள்  என்று  உங்களைக் கேட்கிறார்.

அவர் கேட்ட பாடல் உங்களுக்காக...


மன்னர் சோழ வளநாட்டில் வாரப்பெருக்கி உழவேண்டி

எண்ணியளந்து கலவிதையை யுலர விட்டு யான் போனேன்

கண்ணா லொன்றும் கண்டிலேன் கரிய குருவி ஒன்று போச்சுது

மண்ணாங் கட்டி கொண்டெறிந்தேன் மாண்ட குருவி தன் வயிற்றில்

எண்ணி மூன்று நெல்கண்டேன் எண்ணி இதனை உரையீரே


குருவிகள் எத்தனை?
கண்டுபிடித்தவர்கள் 
பொன்னுசாமியிடம் சொல்லி விட்டுப் போங்கள்.




Comments