இன்னா செய்தாரை ஒறுத்தல்.
இன்னா செய்தாரை ஒறுத்தல்
(குறளும் குயிலும்)
கரையோடு மோதி விளையாடியது கடலலை.
சிறுவர் சிறுவீடு கட்டி மகிழ்வதைப் பொறுத்துக்
கொள்ள முடியாமல் கலைத்துப் போட்டு
கலகலவென சிரித்தது அலை.
கும்மிருட்டு நேரம்.
அலையோடு அலையாக கடற்கரைக்கு
வந்தது ஒரு ஆமை .
சுற்றும் முற்றும் பார்த்தது.
கண்களுக்கு எட்டிய தூரம்வரை
எதுவே தென்படவில்லை.
மெதுவாக குழி
தோண்ட ஆரம்பித்தது.போதுமான ஆழம்
தோண்டியதும் முட்டைகளை இட்டு மூட
ஆரம்பித்தது.
பின்னர் அதற்கு மேல் நின்று நாட்டியம்
ஆடுவதுபோல் ஆடி ...மணலை மேடு இல்லாமல்
சமன் செய்தது.
ஒன்றுக்கு மூன்றுமுறை பாதுகாப்பை
உறுதி செய்த பின்னர் விறுவிறுவென்று
கடலுக்கு இறங்கி மறைந்து போனது.
நாளுக்கு ஒருமுறை தான் முட்டையிட்ட இடத்தைப்
ஆசையோடு வந்து ஆமை பார்த்துச் செல்லும்.
சரியாக அறுபது நாளில் முட்டைகள் பொரித்து
குஞ்சுகள் வந்துவிடும்.
தான் எப்படியாவது தன் குஞ்சுகளைப் பார்த்துவிட
வேண்டும் என்ற ஆவலில்
அந்த நாளுக்காக காத்துக் கிடந்தது ஆமை.
ஒருநாள் ஆமை வரும்போது நண்டு ஒன்று
முட்டைகளை எல்லாம் உடைத்துத் தாறுமாறாக
வீசிக் கொண்டிருந்தது.
" ஏய்....என்ன செய்து கொண்டிருக்கிறாய்"
கத்தியபடி ஓடி வந்தது ஆமை.
அதற்குள் நண்டு' "வெவ்வெவ்வே.."என்று
கிண்டல் செய்தபடி வளைக்குள் சென்று
மறைந்து கொண்டது.
ஆமைக்கு அழுகை அழுகையாக வந்தது.
முட்டைகள் வைக்கப் பட்டிருந்த இடத்தின் அருகே
சோகமாக உட்கார்ந்திருந்தது.
"எனது பலநாள் கனவை ஒரே நாளில்
கலைத்துப் போட்டுவிட்டதே இந்த நண்டு.."
புலம்பியது நண்டு.
கவலையோடு மறுபடியும் கடலுக்குள் சென்றுவிட்டது .
இவை எல்லாம் நடந்து முடிந்து
மாதக்கணக்காக ஆகிவிட்டது.
ஆமையின் நெஞ்சிலிருந்து அந்த நினைவுகள்
மட்டும் மறையவே இல்லை.
நாட்கள் பல கடந்தன.
ஒருநாள் அப்படியே கடலோரமாக வந்து
கொண்டிருந்தது ஆமை.
அப்போது அங்கு ஒரு சிறுவன் நண்டுகளைப்
பிடித்து கூடையில் போட்டுக் கொண்டிருந்தான்.
கூடையை அங்கேயே வைத்துவிட்டு
இன்னும் நண்டுகளைப் பிடிப்பதற்காக
ஒரு வளைக்குள் கையை விட்டு தேடிக்கொண்டு இருந்தான்.
கூடைக்குள் ஏற்கனவே நான்கைந்து நண்டுகளைப்
பிடித்துப் போட்டு வைத்திருந்தான்.
கூடைக்குள் கிடந்த நண்டுகள் எப்படியாவது
தப்பித்துவிட முடியாதா என மரண பயத்தில்
குதித்துக் கொண்டு இருந்தன.
குதித்து குதித்துப் பார்த்து இறுதியில்
"உதவி ...உதவி..." என்று கத்திப் பார்த்தன.
அப்போது அந்த வழியே வந்த ஆமையைப்
பார்த்த நண்டுகள் "உதவி...உதவி "
என்று உரக்கக் கத்தின.
ஆமை தலையைத் தூக்கிப் பார்த்தது.
தன் முட்டையைக் கடலலையில் உருட்டிவிட்ட
நண்டும் கூடைக்குள் தலையை நீட்டி
அபயக்குரல் எழுப்பிக் கொண்டிருப்பதைக் கண்டது.
"ம்...நீயும் மாட்டுனியா? "மனதிற்குள் சிரித்துக் கொண்டது.
மறுகணமே. ."...ஐயோ....பாவம்..
இப்போது இவர்களுக்கு உதவி செய்யாவிட்டால் ...
.இந்த நண்டுகள் உயிர் போய்விடுமே...."
இரக்கப்பட்டது ஆமை.
" என்ன செய்யலாம்..."ஒரு நிமிடம் அப்படியே நின்று
கூடையைப் பார்த்தது.
அத்தனை நண்டுகளும் "ப்ளீஸ்....காப்பாற்றுங்க "
கெஞ்சின.
ஆமையின் முட்டைகளை உடைத்த நண்டு
குற்ற உணர்வால் கூனி குறுகி கிடந்தது .
"தனக்கு துன்பம் செய்தவரை நாம் ஒருபோதும்
தண்டிக்கக் கூடாது" மனசாட்சி பேசியது.
ஒருகணம் அப்படியே நின்று யோசித்த நண்டு,
திடீரென்று கூடையைத் தள்ளி விட்டுவிட்டு
விறுவிறுவென நடந்தது.
கூடை சரிந்து விழ.... கூடையில் இருந்த நண்டுகள்
"தப்பித்தோம் .... பிழைத்தோம் "என்று ஓட ஆரம்பித்தன.
குற்றம் புரிந்த நண்டு மட்டும்
ஆமையையே திரும்பி திரும்பி பார்த்தது.
அந்த பார்வையில் நன்றியைத் தாண்டிய
ஏதோ ஒரு கெஞ்சல் தெரிந்தது.
"தனக்குத் தீமை செய்தவருக்கும்
நாம் நன்மையே செய்ய வேண்டும்."
"இது அம்மா சொல்லிக் கொடுத்த வேதம்."
அப்படி ஒரு நன்மை செய்ய இன்று வாய்ப்பு
கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சியாக
நீருக்குள் நீந்தி மறைந்து போனது ஆமை.
இதுவரை நடந்து கொண்டிருந்தவற்றை
மரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த குயில் ,
ஆமையை நினைத்து பெருமைப்பட்டது.
ஒருவர் நமக்கு தீமை செய்தவருக்கு பதிலுக்கு
நாமும் தீமை செய்தல் கூடாது.
மாறாக அவர் வெட்கப்படும்படியாக நாம் அவருக்கு
நன்மை செய்துவிட வேண்டும்.
இதைத்தான் வள்ளுவர்,
"இன்னை செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல் "
என்று சொல்லி இருப்பாரோ?
இருக்கலாம்... இருக்கலாம்.
நன்றாகதான் சொல்லி இருக்கிறார் .
ஆமைக்குக்கூட திருக்குறள் நன்றாக தெரிந்திருக்கிறது.....
என்று
"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்"
என்ற குறளைப் பாடிக் கொண்டே பறந்து சென்றது குயில்.
Comments
Post a Comment