துறந்தாரும் துறக்க மறக்கும் அம்மா

துறந்தாரும் துறக்க மறக்கும் அம்மா 


அம்மா இந்த மூன்றெழுத்து 

சொல்லைத் துறந்தவர் யாரும் உண்டோ?

அது சொல் அல்ல . அது ஓர் உணர்வு.

உயிர். உயிரைக் துறந்து உயிர் வாழக் கூடுமோ?


உணர்வில்லாத மனிதன் மனிதனாக வாழத்தான் முடியுமோ?

ஆசாபாசங்களைத் துறத்தேன்.

ஆடம்பரத்தைத் துறந்தேன் என்று சொல்லலாம்.

ஆனால் தாயைத்   துறந்தேன்  என்று எவரும் சொன்னதில்லை. சொல்லப் போவதுமில்லை.

இதற்கு பட்டினத்தாரே சாட்சி.

உலக வாழ்க்கையைத் துறந்து நாடோடிகளாக அலைந்து திரிந்த பட்டினத்தார் தனது தாய் இறந்ததும் 

ஓடோடி வந்து, கண்ணீர் விட்டு அழுது எழுதிய பத்துப் பாடல்கள் நம்மையும் கண்ணீர் சிந்த வைக்கின்றன.

இந்தப் பாடல்கள் சித்தராக இருந்தாலும்    தாயின் இழப்பு 

ஒரு மனிதனை எந்த அளவுக்குப் புரட்டிப் போட்டுவிடும் என்பதற்கான அத்தாட்சி.


தாய் இறந்து விட்டார்

அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அடுக்கி வைக்கின்றனர். அவற்றையெல்லாம் அகற்றிவிட்டு பச்சை வாழை மட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதையடுக்கி உடலுக்குத் தீமூட்டி தம் தாய்க்குரிய இறுதிச் சடங்கை நிறைவேற்றினார் 

பட்டினத்தார்.


சுடுகாட்டில் தன் தாய்க்கு ஈமச்சடங்கு

நடைபெறுகிறது.

ஒவ்வொரு நிகழ்வு நடைபெறும் போதும் பட்டினத்தார் உள்ளம் உடைகிறது.ஐயோ என்னைச் சீராட்டி பாராட்டி வளர்த்த என் தாயின் உடலுக்கு எரியூட்ட வேண்டிய நிலை வந்து விட்டதே என வெம்புகிறார். வெதும்புகிறார்.தவிக்கிறார்.

அவரின் தவிப்பு பாடல்களாக வெளி வருகிறது.


இறுதிச் சடங்கு

செய்தபோது பாடிய பத்து பாடல்களும் 

கல் நெஞ்சையும் கலங்க வைக்கும் .

கண்ணீர் விட்டுக் கதற வைக்கும்.


பாடல்கள் உங்களுக்காக... 



1."ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் – செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி?"


அம்மா நீ என்னை பத்து மாதங்கள் வயிற்றில்ச் சுமந்தாய்.  உடல் எல்லாம் வருந்திப் பெற்றெடுத்தாய். பச்சை உடம்பினனாய் இருக்கும் போது இரக்கத்தோடு  கைகளில் தூக்கி, அணைத்து அமுதம்போன்ற தாய்ப் பாலூட்டி வளர்த்தாயே அம்மா ..இனி உன்னை எந்தப் பிறவியில் காணப்போகிறேன் அம்மா?


2."முந்தித்தவம் கிடந்து முந்நூறு நாள் அளவும்
அந்திபகலாச் சிவனை ஆதரித்துத் – தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்?"



பிள்ளை வரம் வேண்டித் தவமிருந்தாய் முன்னூறு நாட்கள் உன் வயிற்றில் என்னைச் சுமந்தாய்.

நான் சுகமாக நலமாகப் பிறக்க வேண்டும் என்று பகல் இரவு பாராது சிவனை வழிபட்டாய்.. வயிற்றில் நான் வளர, வளர உன் சுமை பெரிதாகிய போதும்  என்னைத் தாங்கினாய். நான் நலமாய்ப் பிறக்க  உடலை வருத்திய உன் உடம்பிற்கு நான் தீ மூட்டப் போகிறேனே . என் செய்வேன் அம்மா ?


3. "வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து – முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்?"


கூடையிலும், தொட்டிலிலும், மார் மேலும், தோள் மேலும், கட்டிலிலும், கிடத்தி எனக்கு அன்பு காட்டினாய். உன் சேலை முந்தானையில் மூடி வைத்து என்னைப் பாதுகாத்தாய். சீராட்டிப் பாராட்டி வளர்த்தாய். இப்படி என்னைசீராட்டி வளர்த்த என் தாய்க்கு நான் தீ மூட்டப் போகிறேன் .என் செய்வேன் அம்மா?


4."நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே – அந்தி பகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றும் தாய் தனக்கோ
மெய்யிலே தீமூட்டுவேன்?"

உடல் நொந்து சுமந்து என்னைப் பெற்றெடுத்தாய் எனக்கு நோகாதவாறு உன் கைகளில் என்னைத் தாங்கி, தாய்ப் பாலூட்டி வளர்த்தாய். பகல் இரவாய் உன் கைகளிலேயே என்னைத் தாங்கித் 

தூக்கித் திரிந்தாய்.என்னைத் தாங்கி  ஏந்திய உடம்பல்லவா இது.இந்த உடலுக்கா நான் தீ மூட்டப் போகிறேன் . ஐயோ நான் என் செய்வேன் அம்மா ?


5."அரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் – உருசியுள்ள
தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ
மானே என அழைத்த வாய்க்கு?"


 தேனே, அமிர்தமே, செல்வத் திரவியமே, பூமானே என்றெல்லாம் என்னை வாய் நிறைய அழைத்தாய்.அவ்வாறு அழைத்த உனது வாய்க்கு ருசியான உணவும், பால் பழமும் உண்ணக் கொடுத்து மகிழாமல் இறுதியாக வாய்க்கரிசி கொடுக்கும் நிலை வந்துள்ளதே  அம்மா.

இதை நான் எவ்வாறு  தாங்குவேன் அம்மா?

6."அள்ளி இடுவது அரிசியோ? தாய் தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ? கூசாமல் மெள்ள
முகம்மேல் முகம்வைத்து முத்தாடி “என்றன்
மகனே” என அழைத்த வாய்க்கு?"


என் முகம் மீது முகம் வைத்து என்னை முத்தமிட்டு என் மகனே என்று 

செல்லமாய் அழைத்தாய். ஆனால் 

உன் வாய்க்கு இறுதியாக நான் போடப்போவது வாய்க்கரிசியோ அம்மா ?  அம்மா உன் தலைமேல் நான் கொள்ளி வைக்கும்  நிலை வந்துவிட்டதே .

 என் செய்வேன் அம்மா?


7."முன்னை இட்ட தீ முப்பு ரத்திலே
பின்னை இட்ட தீ தென் இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவ யிற்றிலே
யானும் இட்ட தீ மூள்க மூள்கவே"



 முன்பு சிவன் இட்ட தீ முப்புறத்தையும்  அழித்தது. அனுமன் பின்புற  வாலில் கொழுத்தி இடப்பட்ட தீயானது தென் இலங்கையை  எரித்தது. . நான் இட்ட தீ ஐயோ எனது அன்னையின் அடி வயிற்றை அல்லவா எரிக்கிறது.

அது அப்படியே உன்னை மூழ்கி அழிய

வைத்து விட்டதே அம்மா? 


8."வேகுதே தீயதனில் வெந்து பொடி சாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ – மாகக்
குருவிபறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை"



 நான் எவ்விதமான குற்றங்களும் புரியாமல் தடுத்து, என்னைக் காப்பாற்றிய அம்மா உன் கைகள்  உடல் யாவும் தீயில் எரிந்து சாம்பலாகிப் போகிறதே.

நான் பாவி .ஐயகோ ,என்னால் எதுவும் செய்ய முடியவில்லையே .

இனி நீ இல்லாமல் நான் என் செய்வேன் அம்மா?


9."வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ – சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்துஎன்
தன்னையே ஈன்றெடுத்த தாய்?"



 தீயில் வெந்து போனியே  அம்மா .

என்னை மறந்து நீ இறைவனிடி 

சேர்ந்தாயோ ? இறைவா!உன்னுடன் என் தாயைச் சேர்த்துக் கொண்டாயோ?

 எந்நேரமும் உன்னையே எண்ணித் தவமிருந்து என்னைப் பெற்ற நீ இப்போது

என்னை மறந்து எங்கு சென்றனையோ?? நான் என் செய்வேன் அம்மா?


10. "வீற்றிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்று வெந்து நீறானாள் – பால்தெளிக்க
எல்லீரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்"


 நேற்றுவரை என் அம்மா உயிருடன் இருந்தார். அங்குமிங்கும் அலைந்தார்.

என்னோடு நடந்தார்.. இன்று தீயில் வெந்து சாம்பலானார்..அம்மாவின் சாம்பலுக்கு பால் தெளித்து இறுதி மரியாதை செய்ய போகிறேன்.எல்லோரும்  வாருங்கள். 

இனி யாரும் எனக்காக இரங்க வேண்டாம்..

நடப்பவை யாவும் சிவன் செயல் .


காலத்தால் அழியாத பாடல்கள் 

ஒவ்வொருவரையும் தாயை நினைத்து உருக வைத்தப் பாடல்கள்.

கண்கலங்காதவரையும் கண் கலங்க வைத்தப் பாடல்கள்.

துறந்தாரையும் துறக்க விடாத

உயிர் அம்மா.

பட்டினத்தார் தான் மட்டும் கண்கலங்கியதோடு அல்லாமல் 

அனைவரையும் கண்கலங்க வைத்துவிட்டார்.

உருக்கமான பாடல்கள் இல்லையா?

Comments