அன்னையும் அத்தனும் அல்லரோ தோழி
அன்னையும் அத்தனும் அல்லரோதோழி
தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து
சென்றுவிட்டான். நெடுநாள் ஆகிவிட்டது.
அவன் இன்னும் வந்தபாடில்லை.
தலைவி ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
உடல் மெலிகிறது.
தலைவியால் எதிலும் முழுமையாகக்
கவனம் செலுத்த முடியவில்லை.
தலைவியின் ஏக்கம்
கவலை,உடல் வாட்டம் அத்தனையையும் பார்த்துக் கொண்டிருந்த தோழியால் அதற்கு மேலும் சும்மா இருக்க முடியவில்லை.
தலைவன் மீது கோபம் கொள்கிறாள்.
அவனை அன்பில்லாதவன் அதனால்தான் உன்னை இப்படித் தவிக்க விட்டுவிட்டு சென்றுவிட்டான் என்று கோபமாகப் பேசுகிறாள்.
தலைவன் தன்னைவிட்டுவிட்டுச்
சென்றுவிட்டானே என்ற கவலை
இருக்கத்தான் செய்கிறது.
இருந்தாலும் அவன்மீது பிறர் குறை கூறுவதையோ கோபமாகப்
பேசுவதையோ அவள் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை .
கோபமாகப் பேசிய தோழிக்குப் பதிலாக இதோ இவ்வாறு பதில்
உரைக்கிறாள் தலைவி.
பாடல் இதோ....
நன்னலந் தொலைய நலமிகச் சாஅய்
இன்னுயிர் கழியினும் உரையல் அவர்நமக்கு
அன்னையும் அத்தனும் அல்லரோ தோழி
புலவியஃ தெவனோ அன்பிலங் கடையே.
-அள்ளூர் நன்முல்லையார். (குறு.93)
என்னுடைய அழகு தொலைந்து, உடல் நலம் மிகவிழந்து என்னுடைய உயிர் இவ்வுடலை விட்டு நீங்கினாலும் சரி.. அவரைப் பற்றி தவறாகப் பேசாதே. அவர் நமக்கு அன்னையையும் தந்தையையும் போன்றவர் அல்லவா தோழி?
அன்பில்லாத இடத்தில் ஊடல் எப்படி தோன்றும்? என்று கேட்கிறாள் தலைவி.
இப்பாடலைப் படிக்கும் போதெல்லாம்
என்னவொரு உணர்ச்சிப் பிழம்பான சித்திரம் இது என்று வியந்ததுண்டு.
இப்பாடலின் பின்புலம் என்னவாக இருக்கும்? கணவனோ அல்லது காதலனோ ஏதோ ஒரு காரணத்திற்காக தலைவியிடம் ஊடல் கொண்டு பிரிந்து சென்றிருக்கக்கூடும். சென்றவன் வெகுநாட்களாய் திரும்பவில்லை.
இனித் தலைவன் வருவனோ மாட்டானோ என்ற நிச்சயமற்ற நிலை.
இவ்வளவு காலம் வராதவன் இனியா வரப் போகிறான். அட...இவள் ஒரு பைத்தியக்காரி .
இவள் உடல் அழகெல்லாம் அழிந்து கொண்டிருக்கிறது.அவன் வரவே மாட்டான் என்று சந்தேகித்துப் பேசுகிறாள் தோழி.
அத்தோழிக்கு இவள் தரும் ஆணித்தரமான நம்பிக்கையான பதில் இது.
தன் நலங்கள் தொலைந்தாலும் தானே இறக்க நேரிட்டாலும் அப்போதும் அவனைக் கடிந்து கொள்ள விரும்பாத பேரன்பு.
அவனை காதலனாக மட்டுமின்றி தாயுமானவனாகவும் எண்ணி மகிழும் நெருக்கம்.
'புலவி அஃதெவனோ அன்பிலங்கடையே?' என்ற வரியில் ஊற்றெடுத்துப் பெருகி நிற்கும் நம்பிக்கை....
இவள் அவன்மீது கொண்ட காதலை என்னவென்று உரைப்பது?
அன்பில்லாவிட்டால் ஊடல் எங்கிருந்து தோன்றும்?
அவனது கோபம் தன் மீது அவன் கொண்டுள்ள மேலான
ஈடுபாட்டின் வெளிப்பாடு
என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கிறாள் தலைவி.
அருமையான காதல் காவியத்தை
நம் கண்முன் நிகழ்த்திக் காட்டிவிட்டார்
அள்ளூர் நன்முல்லையார்.
அன்னையும் அத்தனும் அல்லரோ தோழி
கருத்துகள்
கருத்துரையிடுக