கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா
கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா "
யார் சொன்னது?
எந்தச் சந்தர்ப்பத்தில் சொன்னது?
சற்று மாறுபட்ட சொல்லாட்சியாக
இருக்கிறதே என்ற கேள்வியும்
தேடலும் அனைவர்க்கும் இருப்பது போலவே எனக்குள்ளும் எழுந்தது.
திருமணவீடுகளில் தவறாமல் உச்சரிக்கப்படும்
பெயர் வாசுகி.
வானும் நிலவும் போல
வள்ளுவரும் வாசுகியும் போல
உடலும் உயிரும் போல வாழ்க
என்ற வாழ்த்து இல்லாமல்
திருமண வாழ்த்து இருக்கவே இருக்காது.
வள்ளுவரும் வாசுகியும் போல என்பதால்
வள்ளுவரின் மனைவி வாசுகி என்பது நமக்குத்
தெரிந்திருக்கும். வள்ளுவருக்கும்
வாசுகிக்கும் இருந்த
உறவு எப்படிப்பட்டது என்பது
பள்ளிப்பருவத்தில் தமிழாசிரியர்கள்
வாயிலாக கேட்டிருப்போம்.
அவற்றுள் சில மறந்து போயிருக்கலாம்.
நினைவூட்டலுக்காகச் சில செய்திகள்
உங்களுக்காக...
வாசுகி எப்படிப்பட்டவர் ?
ஏன் வள்ளுவரின் வாசுகிக்கு இத்தனை மதிப்பு?
வள்ளுவரின் மனைவி என்பதினாலா?
இருக்கலாம்.
மனைவி சிறப்பாக அமைந்தால் தான்
ஒரு கணவனுக்கு ஏறுபோல் பீடு நடை
இருக்கும்.
தான் செய்ய நினைத்ததைச் சிறப்பாகச்
செய்ய முடியும்.
இல்லை நாம் கொண்டாடும் அளவுக்கு
வேறு ஏதேனும் சிறப்பு குணநலன்கள்
கொண்டவரா ?
இப்படி எண்ணற்ற கேள்விகள
நம் மனதில் எழலாம்.
நம் கேள்விகள் அத்தனைக்கும்
விடையளிப்பதுபோல
தொன்மக் கதைகள் பல வாசுகியைப்பற்றி
உலா வந்து கொண்டிருக்கின்றன .
அவற்றுள் ஒன்றறை படித்தபோது முதலாவது நம் மனதிற்குள் எழுப்பிய அத்தனை கேள்விகளுக்கும் விடை கிடைத்தது.
கதை உங்களுக்காக...
கொங்கணச் சித்தர் என்று ஒரு சித்தர்
இருந்தார்.. அவர் தனது கடுந்தவத்தால் இறைவனிடமிருந்து எல்லா
வரமும் வாங்கி வைத்திருந்தார்.
ஆக்கும் வரமும் உண்டு.
அழிக்கும் வரமும் உண்டு.
கையில் வரங்கள் இருப்பதால் மனிதனுக்கு ஒரு மமதை.
என்னை மிஞ்சியவர் யார் என்ற
மேட்டிமை. யாரும் தன்னை எதுவும் கேட்டிடக்கூடாது..
உடனே சாபம் போட்டியிடுவார்.
மனிதர்களுக்குத் தான் சாபம் விடுவாரா என்றால் விலங்குகளையும் விட்டு வைப்பதில்லை.
எல்லாம் துறந்த சித்தர் என்றுதான் பெயர்.
ஆனால் ஆசைகளைத் துறந்தவர் ஆசாபாசங்களைத் துறந்தவர்.
கோபத்தை மட்டும் துறக்காமல்
தோளில் தூக்கிச் சுமந்து கொண்டே அலைவார்.
பொசுக் பொசுக்கென்று கோபப்பட்டுவிடுவார்.
கோபப்பட்டால் மட்டும் பரவாயில்லை.
உடனே சாபமிட்டு அப்படியே
பொசுக்கித் தள்ளி விடுவார்.
அல்லது வேறு ஏதாவது ஒரு உருவமாக
மாற்றிவிட்டுப் போய்க் கொண்டே இருப்பார்.
இப்படித்தான் ஒருமுறை யாசகம் கேட்பதற்காக
ஒரு தெருவழியாக வந்து கொண்டிருந்தார்.
அப்போது தலைக்குமேல் பறந்து சென்ற
கொக்கு ஒன்று அவர்மீது எச்சம் போட்டுவிட்டது.
சும்மா விடுவாரா?
" என்மீதா எச்சம் போடுகிறாய்?
உன்னை...உன்னை என்ன
செய்துவிடுகிறேன் பார்" என்று
கோபமாக
அப்படியே முறைத்துப் பார்த்தார்.
அவ்வளவுதான்.
மறு நிமிடம்.....பரிதாபமாக
கொக்கு சாம்பலாகி கீழே விழுந்தது.
அவருக்கென்ன....?
கொக்கை பொறுக்கித் தள்ளிவிட்டுவிட்டு
எதுவும் நடக்காதது போல தெருவில்
நடந்து போனார்.
சற்று தூரம் நடந்திருப்பார்.
வயிறு வேண்டும் வேண்டும் என்றது.
ஒருநாள் பொறு என்றால் இந்தப் பாழும் வயிறு கேட்கவா போகிறது?
கொங்கணவருக்கு நல்ல வயிற்றுப்பசி.
பக்கத்தில் ஏதேனும் வீடு இருக்கிறதா என்று பார்க்கிறார்.
பக்கத்தில் வள்ளுவர் வீடு இருந்தது.
வள்ளுவர் வீட்டு வாசலில் போய்
யாசகம் கேட்டு நின்றார்.
அந்த நேரத்தில்....
வீட்டிற்குள் வள்ளுவருக்கு உணவு
பறிமாறிக் கொண்டிருந்தார் வாசுகி.
கணவருக்கு பணிவிடை செய்யும்போது
யாரையும் திரும்பிக்கூட பார்க்காத பண்பு
வாசுகிக்கு உண்டு.
சித்தரைப் பார்த்தார்.
ஆனால் பார்த்தும் பார்க்காததுபோல
கணவருக்கு பணிவிடை செய்வதிலேயே
கவனமாக இருந்தார் வாசுகி.
நேரமாகிக் கொண்டே இருக்கிறது.
வெளியில் நின்று கொண்டிருந்த கொங்கணவச் சித்தருக்கு
பசி வயிற்றைக் கிள்ளியது.
இந்த வாசுகி வாசல் பக்கம் திரும்பிப் பார்ப்பதாக இல்லை.
சும்மாவே கோபப்படுவார் சித்தர்.
பசி வேறு கூட சேர்ந்திருக்கிறது.
கோபத்திற்குச் சொல்லவா வேண்டும்?
கோபத்தில் பல்லை நறநறவென்று கடித்துக் கொண்டு நின்றார்.
நீ என்ன வேண்டுமானாலும் செய்.
என் கணவர் சாப்பிட்டு முடித்து எழுப்பும் வரை நான் யாரையும் பார்க்கப் போவதில்லை என்று
இருந்தார் வாசுகி
இப்போது வள்ளுவர் சாப்பிட்டு முடித்தாயிற்று .
தான் சாப்பிட வேண்டும் என்ற நினைப்பு கூட வராதவராக வாசலில் வந்து நிற்கும் சித்தருக்கு உணவளிக்க
வேண்டுமே என்று அக்கறையோடு வாசலுக்கு உணவோடு
வருகிறார் .
கொங்கணவருக்கு இவ்வளவு நேரம்
வாசலிலேயே தன்னைக் காக்க வைத்து விட்டாளே
இந்தப் பெண் என்ற கோபம்.
அப்படியே வாசுகியை முறைத்துப் பார்க்கிறார்.
அவ்வளவுதான்.
வாசுகிக்கும் ஏதாவது நடந்திருக்குமோ?
திக் திக் என்று இருக்கிறதல்லவா?
வாசுகி என்ன கொக்கா எரிந்து சாம்பலாகிப் போவதற்கு ?
அவர் வள்ளுவரின் மனைவி.
கம்பர் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் போது வள்ளுவருக்கு வாய்ந்த மனைவிக்கு
மட்டும் பேசத் தெரியாதா என்ன?
கொக்கென்று நினைத்தாயோ
கொங்கணவா? என்று ஒரே போடாகப்
போட்டு கொங்கணவரைக் கலங்க
வைத்துவிட்டார் வாசுகி.
சித்தர் அப்படியே அதிர்ந்து போனார்.
"தான் கொக்கைச் சாபமிட்டு எரித்தது
எப்படி இந்த அம்மாவுக்குத் தெரியும்?"
என்பதுபோல அப்படியே நின்றார்.
இனி சாபமிடுவாரா என்ன?
வாசுகியா கொக்கா?
ஆமாம்...வாசுகிக்கு இந்தக் கொங்கணவர் கொக்கை எரித்தது எப்படித் தெரியும்?
என்று கொங்கணவரைப் போன்று
உங்கள் மனதிலும் ஒரு கேள்வி எழுகிறதல்லவா?
கற்புடைய பெண் வாசுகி.அறியும் திறன் பெற்றிருந்தாராம் .
அதனால்தான் கொங்கணவர் கொக்கை எரித்துவிட்டு தான் வந்திருக்கிறார் என்பது முன்கூட்டியே
வாசுகிக்குத் தெரிந்திருக்கிறது.
ஆனாலும் வாசுகியின் மனதில் எந்த அச்சமும் இல்லை.
என் செயலில் நான் உறுதியாக இருக்கிறேன்.
இந்தக் கொங்கணவரால் என்னை என்ன செய்துவிட முடியும் என்று தன்மீது ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை
அதனால்தான் வாசுகியால்
கொக்கென்று நினைத்தாயோ
கொங்கணவா?
என்று கேட்க முடிந்தது
அடேங்கப்பா....ஆச்சரியமாக இருக்கிறதில்லையா!
வாசுகியா கொக்கா?
Comments
Post a Comment